Published:Updated:

`எங்கள் குழுவுக்கு முழு அதிகாரம்; சிறைக்கு அனுப்ப தயங்கமாட்டோம்!’- சேலத்தில் துரைமுருகன் எச்சரிக்கை

துரைமுருகன்
துரைமுருகன்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை தி.மு.க பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர். பிறகு சேலம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டனர்.

ஆய்வு
ஆய்வு
எம். விஜயகுமார்

இக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகியோர், ``சேலம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு ஓர் ஆண்டு ஆன நிலையில் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. போதிய ஆட்கள் வேலை செய்வதில்லை. இன்று குழு வருவதற்காகக் கூடுதலான ஆட்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். இதே நிலை நீடித்தால் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க முடியாது'' என்று குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, ``சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி பல்வேறு குழுக்கள் இருந்தாலும், இந்தப் பொது கணக்கு குழு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றம் ஒதுக்கும் நிதி முறையாகச் செயல்படுகிறதா... குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிவடைந்ததா... என்பதை ஆய்வுகள் மேற்கொள்ளும் முக்கிய குழுவாக இது இருக்கிறது.

குழு ஆய்வு
குழு ஆய்வு
எம். விஜயகுமார்

திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் நிதியை முறையாகச் செயல்படுத்தாத மற்றும் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் முடிக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்கம் செய்திடவும் அதிகாரம் உள்ளது. திட்டத்தில் முறைகேடு மற்றும் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைச் சிறைக்கு அனுப்பவும் தயங்க மாட்டோம்'' என்று எச்சரிக்கை செய்தார். பின்னர் 3 மணி நேரம் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பின்னர் அறிக்கையில் உள்ள குறைபாடுகள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சேலத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசின் திட்டங்கள் மிகக் காலதாமதமாகவே நடைபெற்று வருகிறது. பல குறைபாடுகளும் இருக்கிறது. இது குறித்து ஆலோசிக்கப்பட்ட தகவல்களை தற்போது வெளிப்படையாகக் கூற முடியாது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. இத்திட்டம் முறையாகச் செயல்படவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு