Published:Updated:

''ஓட்டு அரசியலுக்காக மாற்று மதத்தினரைப் புண்படுத்த மாட்டோம்!'' - சொல்கிறார் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''மதம், சாதி சார்ந்த அரசியல் இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம், ஓர் அரசியல் கட்சியாக, மக்களின் நம்பிக்கையை நாங்கள் எப்படிக் காப்பாற்றுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு தேசநலன்தான் முதன்மையானது'' என்கிறார் வானதி சீனிவாசன்.

'ஒன்றிய அரசு' குறித்த சர்ச்சைகள் அடங்கியிருந்த நேரத்தில், மீண்டும் சட்டமன்றத்திலேயே இது குறித்து முதல்வரிடம் கேள்வி கேட்டிருக்கிறது தமிழக பா.ஜ.க! பதிலுக்கு முதல்வரும், 'நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு தர தமிழக பா.ஜ.க தயாரா...' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.

தி.மு.க - தமிழக பா.ஜ.க இடையிலான காரசார அரசியல் வலுப்பெற்றுவரும் இந்த நேரத்தில், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

``அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கடந்த காலத்தில் எதிர்ப்பு தெரிவித்துவந்த பா.ஜ.க., இப்போது வரவேற்பதன் பின்னணி மர்மம் என்ன?''

இந்து ஆலயம்
இந்து ஆலயம்

``அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை 2006-ம் ஆண்டு கருணாநிதி அறிவித்தபோதே, பா.ஜ.க-வும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், சித்தாந்தரீதியாக எங்களோடு ஒத்துப்போகின்ற துணை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.

உதாரணமாக, தி.க-வின் சித்தாந்தத்தோடு நெருக்கமாக உள்ள அரசியல் கட்சிதான் தி.மு.க. தி.க தலைவர் கி.வீரமணி, பகவான் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரியவகையில் விமர்சித்ததை, தி.மு.க ஏற்றுக்கொள்கிறதா என்ன? எனவே, துணை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றால், அது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட முடியாது.''

``வாக்கு அரசியலுக்காக, `திராவிட பா.ஜ.க'-வும் இந்தத் திட்டங்களை வரவேற்கிறது என பிராமணர் சங்கங்கள் உங்களைக் கண்டிக்கின்றனவே?’’

``குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த அரசியல் இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம், ஓர் அரசியல் கட்சியாக, மக்களின் நம்பிக்கையை நாங்கள் எப்படிக் காப்பாற்றுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு தேசநலன்தான் முதன்மையானது. மற்றபடி ஓட்டு அரசியலுக்காக மற்ற மதத்தினரைப் புண்படுத்துவது போன்ற வேலைகளில் எங்கள் கட்சித் தலைவர்கள் யாரும் ஈடுபடுவதில்லை!''

திரிவேந்திர சிங்
திரிவேந்திர சிங்

``ஆனால், `முஸ்லிம்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை' என அண்மையில் பா.ஜ.க தலைவர் திரிவேந்திர சிங் பேசியிருக்கிறாரே?''

``மத்திய அரசாங்கத்திலிருந்து வருகிற ஊசி... எனவே, அதைப் போட்டுக்கொள்ளக் கூடாது என்பது போன்ற தவறான பிரசாரங்கள் ஒருசில இடங்களில் நடந்துவருவதாக நானும்கூட சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். குறிப்பிட்ட ஒரு பகுதியில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள் என்று சொன்னால், அதை எடுத்துச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. `இந்தப் பகுதி மக்களுக்கென்று அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் திரும்பி வருகின்றன' என அரசின் புள்ளிவிவரம் சொல்கிறதென்றால், அது ஏன் என்ற காரணத்தைப் வெளியில் சொல்லித்தானே ஆக வேண்டும்...

`தடுப்பூசி சாத்தானுடையது... அதை யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்' என்று குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பரப்பிய வீடியோக்களும்கூட சமூக ஊடகத்தில் வலம்வந்ததுதானே? குறிப்பிட்ட சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்கூட தடுப்பூசி குறித்த தவறான பிரசாரத்தை ஏற்கெனவே செய்துவந்திருக்கிறார்கள்தான்.’’

``மாட்டு மூத்திரம், சாணம் ஆகியவை கொரோனாவுக்கான மருந்துகள் என பா.ஜ.க தலைவர்களேகூட தவறான பிரசாரங்களை செய்துவந்திருக்கிறார்கள்தானே?''

(சிரிக்கிறார்) ``அறிவியல்ரீதியாக எந்தெந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களோ, அவற்றைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்லிவருகிறோம். மற்றபடி ஒருசிலரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்துப் பேச முடியாது. கோயிலில் திருநீற்றை மந்திரித்துக் கொடுக்கிறார்கள்... மக்களும் நம்பிக்கையோடு அதை வாங்கிப் பூசிக்கொள்கிறார்கள். இவையெல்லாம் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகள். மற்றபடி அரசாங்கமே, `இதுபோல் கோமியம் குடியுங்கள்; சாணத்தைப் பூசிக்கொள்ளுங்கள்' என்று எங்காவது கூறியிருக்கிறதா?''

மாட்டு மூத்திரம்
மாட்டு மூத்திரம்

``மத்திய அரசேகூட, மாட்டுச்சாணம் குறித்த ஆராய்ச்சிக்காகப் பல கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறதுதானே?’’

``ஆயுர்வேதம் உள்ளிட்ட ஒருசில மருத்துவ முறைகளில் 'கோமியம், சாணம்' ஆகியவை மருந்தாகப் பயன்பட்டுவருகின்றன. அதனால்தான், 'கோ சமிதி' என்பது பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டிலேயேகூட சுப காரியங்களின்போது பசு மாட்டை முன்னிறுத்துவதும், பூஜை செய்வதுமான காரியங்களை பாரம்பர்யமாக நாம் செய்துவருகிறோம்தானே! பொங்கல் விழாவன்று மாடுகளுக்கு ஏன் தமிழர்கள் பூஜை செய்கிறார்கள்? ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோதுகூட, 'இது எங்கள் பாரம்பர்யம்' என்று சொல்லித்தானே வாதாடினோம்... ஆக, தமிழர்களான நாமே மாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, பா.ஜ.க-வினர் பேசினால் மட்டும் கிண்டல் செய்வதா?''

``மனிதனை மதிக்காமல், மாட்டுக்கு மரியாதை செலுத்துவது என்றால், அந்த மதமே எனக்குத் தேவையில்லை என்று விவேகானந்தரே சொல்லியிருக்கிறாரே?''

``விவேகானந்தரைப் படித்துவிட்டுத்தான் நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குள்ளேயே வந்தேன். விவேகானந்தர் என்ன சொன்னார் என்று முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டும். நமக்குப் பிடித்த வரிகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு பேசக் கூடாது.

'இறைவனுக்கு நீ சேவை செய்வதைவிடவும், ஃபுட்பால் விளையாடி உடலை பலமாக்கு. அதுதான் உன்னை இறைவனோடு இன்னும் நெருக்கமாக்கும்' என்றுகூடத்தான் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். இதுமட்டுமா... மத மாற்றம் குறித்துப் பேசும்போது, 'இந்த மதத்திலிருந்து ஒருவன் வெளியேறினால், ஒருவன் போகிறான் என்று பார்க்காதே... உனக்கு ஓர் எதிரி உருவாகிறான் என்று பார்' என்றும்கூட விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். எனவே, விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, அதன் சாராம்சம் குறித்துத்தான் பேச வேண்டும்!''

விவேகானந்தர்
விவேகானந்தர்

``பாதுகாப்புப் பணிக்காக சாலைகளில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் என்ற முதல்வரது அறிவிப்பை ஒரு கட்சியின் தேசிய மகளிரணித் தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அதேசமயம், பெண்கள் விஷயத்தில் இன்னும்கூட நிறைய சீர்திருத்தங்களை நாம் பண்ண வேண்டியிருக்கிறது. உதாரணமாக, மாநாடு, ஊர்வலம் மாதிரியான பொது நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அது போன்ற சமயங்களில் அவர்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு வசதியின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, காவல்துறையில் பெண் காவலர்களுக்கு இன்னுமே நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கிறது.''

பட்டுக்கோட்டை: `சொத்தை வித்தாவது கடனை அடைச்சிருப்பேன்!’ - தற்கொலை செய்துகொண்ட தாய்; சோகத்தில் மகன்

``பெண் காவலர்களுக்கென்று இது போன்ற சிறப்புச் சலுகைகள் கொடுப்பது, அவர்களது உரிமையை பாதிக்கும் பழைமைவாதச் செயல் என்று காவல்துறை முன்னாள் அதிகாரி திலகவதி எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?

``வெளியிலிருந்து இந்தப் பிரச்னையை நாம் பார்க்கும்போது, பெண் காவலர்கள் அனுபவித்துவருகிற சிரமங்கள் மட்டும்தான் நமக்குத் தெரிகிறது. அதேசமயம் அதே துறையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரியே இப்படியான பிரச்னைகளும் இருக்கின்றன எனச் சொன்னால், அதையும் நிச்சயம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; புறந்தள்ளிவிட முடியாது. சுகாதாரக் கட்டமைப்புகளில் தமிழ்நாடு மேம்பட்டு இருப்பதாக நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், இன்றைக்கும் இங்கேயுள்ள பெருநகரங்களில் பெண்கள் வெளியே சென்றுவர நேர்ந்தால், அவர்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை என்பதுதான் நிஜம்!''

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

``தடுப்பூசி தேவை குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிற வானதி சீனிவாசன், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காதது ஏன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்கிறாரே?''

``ஒரு மாநில அரசாங்கத்துக்கு இருக்கும் பொறுப்போடு, மத்திய ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் பொறுப்பில் இருப்பவரோடு சேர்த்துப் பார்ப்பதை ஒருவிதத்தில் நான் பெருமையாகத்தான் பார்க்கிறேன். கொரோனா பாதிப்பு விகிதம், தடுப்பூசிகளை வீணடிக்காமல் பயன்படுத்தப்படுகிற விகிதம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில்கொண்டுதான் அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை வழங்கிவருகிறது மத்திய அரசு. தமிழகத்தின் தடுப்பூசி தேவைக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதோடு, நேரிலும் சென்று கோரிக்கை வைத்தேன். ஆக்சிஜன் சப்ளையை அதிகரிப்பதற்காக அமைச்சர் பியூஸ் கோயலிடமும் பேசினேன். அதன் பிறகு தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் வரத்தும் அதிகரித்திருக்கிறது.''

சென்னை: பெண்ணைக் கொன்று தீயிட்டு எரித்த கொடூரம்! 5 சவரன் செயினால் நடந்த விபரீதம்!

``கோவை புறக்கணிக்கப்படுவது உண்மை என்று சொன்னால், 'கோபேக் ஸ்டாலின்' ஹேஸ்டேக் ஏன் வட மாநிலங்களிலிருந்து டிரெண்டிங் ஆனது?''

''கோபேக் ஸ்டாலின் ஹேஸ்டேக் கோவையிலிருந்துதான் டிரெண்டிங் ஆனது! அப்படிப் பார்த்தால், 'கோ பேக் மோடி' ஹேஸ்டேக் எங்கிருந்து டிரெண்டிங் ஆனது? 'இது தமிழ்நாட்டிலிருந்து டிரெண்டிங் ஆகவில்லை... வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு டிரெண்டிங் ஆக்கப்படுகிறது' என்று நாங்களும்தான் ஆதாரபூர்வமாக சொன்னோம். அதையெல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா?''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``கொரோனா டூல்கிட் விவகாரத்திலும்கூட, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பொய்யான 'டூல்கிட்'டை பா.ஜ.க-வே தயாரித்து பரப்பியுள்ளதாக ட்விட்டர் நிறுவனமே முத்திரை குத்தியிருக்கிறதே?''

``சமூக ஊடகம் வழியே, பெண்களை ஆபாசமாகச் சித்திரிப்பது, போலிக் கணக்குகள் ஆரம்பித்து மோசடி செய்வது என பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன. இதையெல்லாம் தடுக்கும்விதமாக, மத்திய அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டு சமூக ஊடக நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால், அதை ஒப்புக்கொண்டு உள்ளே வர மறுக்கிறது ட்விட்டர் நிறுவனம். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் சொல்கிற ஒரு விஷயத்தை நாம் எப்படி நம்ப முடியும்? அதனால்தான் ட்விட்டர் நிறுவனத்தை விசாரிக்கிறோம். அப்படி பா.ஜ.க-வினரே போலியாக டூல்கிட் தயாரித்துவிட்டார்கள் என்றால், அதற்கான ஆதாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள்.''

அடுத்த கட்டுரைக்கு