Published:Updated:

`இதுவே அனைவருக்குமான எனது இறுதி பதில்! ’ - முரசொலி நில விவகாரத்தில் தகித்த ஸ்டாலின்

முரசொலி நிலம் தொடர்பாகப் பிற கட்சிகள் சுமத்தியுள்ள குற்றத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் இறுதி பதிலை அளித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

`வெக்கை’ நாவலின் கதையை மையமாகவைத்து வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அசுரன்
அசுரன்

பஞ்சமி நிலத்தை மீட்க தனுஷ் மற்றும் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் துயரங்களையும் அதனால் அவரது குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் படம் பேசியிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் `அசுரன் படம் மட்டுமல்ல பாடம்’ எனக் கூறி தனுஷையும் வெற்றிமாறனையும் ட்விட்டரில் பாராட்டியிருந்தார்.

இவரின் ட்விட்டர் பதிவுக்குப் பதில் அளிக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!' எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஸ்டாலினுக்கும் ராமதாஸுக்கும் இடையே வார்த்தை போர் நிலவியது. முரசொலி, பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஸ்டாலினும், அது பஞ்சமி நிலம் தான் என ராமதாஸும் மாறிமாறி மோதிக்கொண்டனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து தற்போது முரசொலி நிலம் தொடர்பாக தன் இறுதி விளக்கத்தைக் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அந்த அறிக்கையில், `சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும் அடிமைத்தனத்திற்கும் இடமில்லை என்பதை உணர்த்தும் வகையில் தி.மு.க கூட்டணியை வெற்றிபெறவைத்து, மக்கள் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.

ஆனால், அதில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் தோல்விக்கான காரணத்தை யோசித்து மக்கள் பணியாற்றி தங்களின் ஆதரவைப் பெருக்கிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள், வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே கடமையாக நினைகின்றனர். அதன்படிதான், கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலி, பஞ்சமி நிலத்தில் வாங்கப்பட்டது என்ற தொடர்ச்சியான அவதூறு பரப்பி வருகின்றனர்.

முதலில், அக்டோபர் 17-ம் தேதி ராமதாஸ் ஓர் அறிக்கையினை வெளியிட்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார். அன்றே, பட்டா நகலின் ஆதாரத்துடன் அது பொய் என மறுப்பு அறிக்கை தந்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை. மீண்டும் அக்டோபர் 19-ம் தேதி, மூலப் பத்திரத்தினைக் காட்டவில்லையென்று ஓர் அறிக்கை தந்தார்.

`முரசொலி நிலத்துக்கான மூலப் பத்திரம் எங்கே?'- ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் பா.ம.க

பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும் சரி, குற்றம் சுமத்தியவர்தான் நிரூபிக்க வேண்டும்! முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆதாரத்துடன், எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்து விடுவோம் எனக் கூறியிருந்தோம்.

முரசொலி அலுவலகம்
முரசொலி அலுவலகம்

பின், அக்டோபர் 21-ம் தேதி பா.ஜ.க மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அக்டோபர் 22-ம் தேதியே தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே அக்டோபர் 24-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

நவம்பர் 4-ம் தேதியன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய்ச் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்! 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி வேகம் காட்டியிருக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சி செய்கிறார்கள்? முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது கலைஞரின் மூத்த பிள்ளை; ஒவ்வொரு தி.மு.க தொண்டனின் உயிர் மூச்சு. அதன் மீது, தற்காலிகமான அரசியல் லாபத்திற்காகப் பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; தி.மு.கவின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

``முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!" என உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.