Published:Updated:

``இந்தியாவின் இருள் அகற்றுவோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - சூளுரைத்த பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

``மோடி ஆட்சிக்கு வந்தபோது அவரின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி. தற்போது பா.ஜ.க-வின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.” - சி.பி.எம் பிரகாஷ் காரத்

``இந்தியாவின் இருள் அகற்றுவோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - சூளுரைத்த பிரகாஷ் காரத்

``மோடி ஆட்சிக்கு வந்தபோது அவரின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி. தற்போது பா.ஜ.க-வின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.” - சி.பி.எம் பிரகாஷ் காரத்

Published:Updated:
பிரகாஷ் காரத்

``இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" என்ற முழக்கத்துடன் சி.பி.எம் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சி.பி.எம் பொதுக்கூட்டம்
சி.பி.எம் பொதுக்கூட்டம்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, ``ஆங்கிலேயர்களிடன் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த, புல்புல் பறவையில் பறந்த சாவர்க்கர் வழிவந்தவர்களல்ல நாங்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சதிவழக்கில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தையே பிரசாரக் கூடமாக்கிய கம்யூனிஸ்ட்டுகள் நாங்கள். இன்றைக்கு பிரதமர் மோடிக்கு திருக்குறள் சொல்லிக்கொடுப்பவர்கள், `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறளை சொல்லித் தரவில்லை என்று நினைக்கிறேன். மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் வேலைகளையே அவர் தலைமையினான அரசு செய்துவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய பா.ஜ.க அரசு `இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை' வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளவில்லை. `சனாதன மனுநீதி சட்டமே மத்திய மோடி அரசை வழிநடத்துகிறது. `தோல் இருக்க சுளை விழுங்கும்' பழமொழிபோல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே போட்டு வைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஸின் 100 ஆண்டுக்கால அஜண்டாவை நிறைவேற்றுவது அவர்களின் திட்டமாக இருக்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல; `ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க - அதானி - அம்பானி'-களின் கூட்டணி ஆட்சி" எனக் கடுமையாக விமர்சித்தார்.

சி.பி.எம் பொதுக்கூட்டம்
சி.பி.எம் பொதுக்கூட்டம்

அதேபோல மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக இருக்கக்கூடிய யஷ்வந்த் ஷிண்டே என்பவர் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில் இந்தியாவில் நடைபெற்றிருக்கிற அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ்-தான், பா.ஜ.க-தான் என பகிரங்கமாகச் சொல்லுவேன் என சொல்லியிருக்கிறாரே இதை நீங்கள் மறுத்ததுண்டா?" எனக் கேள்வி எழுப்பினார்.

பிரகாஷ் காரத், உ.வாசுகி
பிரகாஷ் காரத், உ.வாசுகி

பின்னர் முக்கிய அழைப்பாளராகக் கலந்துகொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ``தோழர்களே நண்பர்களே வணக்கம். நான் ஆங்கிலத்தில் பேசப்போகிறேன். மன்னிக்கவும்" என தமிழில் கேட்டுக்கொண்டு தனது ஆங்கில உரையைத் தொடர, அதை அதை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழிபெயர்த்தார்.

``ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க-வும் சேர்ந்து யதேச்சதிகார `இந்து ராஷ்டிராவை’ அமைக்க ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நாட்டு மக்கள் சந்திக்கக்கூடிய முக்கியப் பிரச்னையாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு இருக்கிறது. இதற்குக் காரணம் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையே. மேலும், பெட்ரோலியப் பொருள்களின் வரி விதிப்பைப் பொறுத்தவரை, `கலால்' வரியை உயர்த்தினால் அதில் மாநில அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டிவரும் என்பதற்காக, திட்டமிட்டு `செஸ்' வரியை உயர்த்துகிறார்கள். ஆனால் இந்த வரி உயர்வு, விலை உயர்வுக்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுதான் காரணம் என்பார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. சர்வதேசச் சந்தையில் விலை குறையும்போதும் இவர்கள் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.

பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, நாட்டு மக்கள் பொருள்கள் வாங்குவதையே குறைத்துவிட்டார்கள். இந்த செஸ் வரியை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிக்கட்ட, சூப்பர் பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வரியை உயர்த்தவும், ஏழை உழைப்பாளி மக்கள் மீதான வரியைக் குறைக்கவும் கோரிவருகிறோம். ஆனால், இதற்கு நேர்மாறாக மோடி அரசாங்கம் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, அரிசி, பால், நெய் போன்ற பேக்கிங் செய்யப்பட்ட, பிராண்டடு அல்லாத அத்தியாவசியப் பொருல்களுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி விதிப்பை உயர்த்தியிருக்கிறது. ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்யும்போதும் ஜி.எஸ்.டி., அதை கேன்சல் செய்யும்போதும் ஜி.எஸ்.டி என அனைத்துக்கும் வரி விதிக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டினார்.

பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத்

மேலும், ``மத்திய பா.ஜ.க அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சமடைந்திருக்கிறது. பொதுத்துறை, தனியார்மயமாக்கப்படுகிறது. அதேசமயம், கார்ப்பரேட் முதலாளிகள் செழிப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்தபோது அவரின் குஜராத் மாநிலத்தைச் செர்ந்த கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி. தற்போது பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்று உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக கௌதம் அதானி உருமாறியிருக்கிறார். அதேபோல முகேஷ் அம்பானியும் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் மோடியின் ஆட்சியை `கூட்டுக் களவாணி முதலாளித்துவம்' என்கிறோம். எனவே, பா.ஜ.க அல்லாத மாநிலங்களை ஆளும் கட்சிகள், மக்களைத் திரட்டி பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.