Published:Updated:

குமரி: `பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் அதி தீவிர பிரசாரம்!’ - காங்கிரஸ் இலக்கிய அணி

காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்
காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்

`தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி வருகைக்காக இலக்கிய அணி சார்பில் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அந்தத் தொகுதிகளிலெல்லாம் இலக்கிய அணி சார்பில் அதிக கவனம் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.’

காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. பின்னர் காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலத் தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கற்பனை செய்வதிலும், நாட்டின் பொருள்களை விற்பனை செய்வதிலும் கைதேர்ந்தவர் பிரதமர் மோடி. இன்று பணப் பரிவர்த்தனை, கல்வி எல்லாமே காகிதம் இல்லாமல் வந்துவிட்டன. அதனால் காகிதம் இல்லாத பட்ஜெட் கொண்டுவருவது பெரிய புரட்சி இல்லை.

மக்கள்மீது ஆயுதத்தைப் பிரயோகிக்காத அரசுதான் மக்களுக்கு இப்போது தேவை. அமெரிக்கப் பொருளாதாரம்போல இந்தியப் பொருளாதாரத்தை மாற்ற மோடி நினைக்கிறார். ஆனால், அந்த அளவுக்கு உற்பத்தித்திறனை நம் நாட்டில் மேம்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்தான் நம் நாட்டுக்குத் தேவை. ஐந்து நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்துகிறார்கள். பா.ஜ.க அரசு அசுர மெஜாரிட்டியைப் பெற்றிருந்தாலும் நாட்டுநலனைச் சிந்திக்காமல் வெறுப்பு அரசியலைச் செயல்படுத்துகிறார்கள். பெட்ரோல் மூலம் மக்களிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டு மாநில அரசு மீது பழிபோடுகிறது மோடி அரசு. கியாஸ் விலை உயர்ந்துவிட்டதென்றால், விறகுவைத்து அடுப்பு எரிக்கலாம் என்கிறார்கள்.

நாஞ்சில் ராஜேந்திரன்
நாஞ்சில் ராஜேந்திரன்

இந்தியாவுக்காக உயிர்நீத்த இந்திரா காந்தியை நாங்கள், `அன்னை இந்திரா’ என்று மட்டுமே அழைக்கிறோம். `தியாகத் தலைவி’ என அழைக்கவில்லை. ஆனால், குற்றவாளியை `தியாகத் தலைவி’ எனக்கூறுகிறார்கள். அ.தி.மு.க - சசிகலா விவகாரத்தில் பா.ஜ.க பின்னணியில் இயங்குகிறது. காங்கிரஸில் சட்டமன்ற வேட்பாளராகத் தகுதி உடையவர்கள் இலக்கிய அணியில் தமிழகத்தில் எட்டுப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சீட் கேட்டு தலைமையிடம் கோரிக்கை வைப்போம்.

தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி வருகைக்காக இலக்கிய அணி சார்பில் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அந்தத் தொகுதிகளிலெல்லாம் இலக்கிய அணி சார்பில் அதிக கவனம் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்வோம். தமிழகத்தில் ஒரு சீட்கூட பா.ஜ.க-வுக்குக் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் எங்கள் பிரசாரம் இருக்கும். கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்ற பிறகு அசுரர்களை எதிர்க்கும் ஆற்றல் காங்கிரஸுக்கு வந்திருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள் என்பது உறுதி.

காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்
காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்

வெளிநாடுகளிலிருந்து விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவு வருகிறது. அப்படி ஆதரவு அளிப்பது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்கிறார்கள். அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் குறித்து மற்ற நாடுகள் கருத்து கூறின. எனவே, விவசாயிகள் போராட்டத்தில் கருத்து தெரிவிப்பது இறையாண்மைக்கு எதிரானது என்பது ஏற்புடையதல்ல. தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு