நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதன்முறையாக அங்கு ஆட்சியமைத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், ``பஞ்சாப் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்க மாட்டேன். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர் கலனில்தான் பதவியேற்பேன்" என அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். அதையடுத்து, பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பஞ்சாப் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப்பின் வளர்ச்சிக்காகவும், பஞ்சாப் மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.