Published:Updated:

` `1995' ஃபார்முலா; காங்கிரஸின் மறைமுக ஹெல்ப்!'- பா.ஜ.கவுக்கு செக் வைக்கும் பவார்

மகாராஷ்டிராவில் ஆட்சி இழுபறி நீடிக்கும் நிலையில் அம்மாநில அரசியல் பற்றி சோனியா காந்தியும், சரத்பவாரும் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் பிரச்னைகள் சூடுபிடித்துள்ளன. அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அம்மாநிலத்தை யார் ஆள்வது என்ற இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் நடக்கும் முதல்வர் பதவி தொடர்பான பனிப் போரினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

முன்னதாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி தங்களுக்கு இரண்டரை ஆண்டுக்கால ஆட்சி வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறது சிவசேனா. ஆனால், ஆட்சியைத் தரமுடியாது, துணை முதல்வர் பதவி வேண்டுமானாலும் தருகிறோம் என ஒற்றைக் காலில் நிற்கிறது பா.ஜ.க. இதற்கிடையில் அங்கு தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்க சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா ஆட்சி, தங்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அனைத்து யுக்திகளையும் பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் செய்து வருகின்றன.

மகாராஷ்டிராவின் அரசியல் நிலவரம் தொடர்பாகத் தேவேந்திர ஃபர்னாவிஸ் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவரது சந்திப்பு அரசியல் சார்ந்தது இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தும் அவர்கள் ஆட்சியமைப்பது பற்றி நிச்சயம் ஆலோசனை நடத்தியிருப்பர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

பா.ஜ.க - கூட்டணி
பா.ஜ.க - கூட்டணி

அமித் ஷாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், “எங்களுடைய சந்திப்பு அரசியல் தொடர்பானது இல்லை. மகாராஷ்டிராவில் நடக்கும் பயிர் அழிப்பு தொடர்பாகவே அமைச்சரிடம் பேசினேன். மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவது பற்றி எந்தக் கருத்தும் நான் கூற விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் கூறுகிறேன், மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசு பொறுப்பேற்கும் அதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி!- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித் ஷா வியூகம்

மற்றொரு புறம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு முழுவதும் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவுடனான சரத் பவார் சந்திப்பு பற்றி எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சோனியா - சரத்பவார் சந்திப்பு பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ளார்.

சோனியா - சரத் பவார்
சோனியா - சரத் பவார்

``மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கத் தேசியவாத காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்தக் கூட்டணிக்குப் பின்னால் இருந்து காங்கிரஸ் உதவி செய்யும். சிவசேனா, பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்போது பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட நிலை 1995-ம் ஆண்டு, காங்கிரஸுக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிவசேனாவுக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டு, துணை முதல்வர் பதவியில் இருந்தது பா.ஜ.க.

தற்போது அதே ஃபார்முலாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என எங்கள் தரப்பிலிருந்து யோசனை தெரிவித்துள்ளோம். அதாவது முதல்வர் பதவியில் சிவசேனாவும், துணை முதல்வர் பதவியில் தேசியவாத காங்கிரஸும் இருக்கும். இவர்களுக்குப் பின்னால் இருந்து காங்கிரஸ் உதவி செய்யும். இது குறித்துத் தான் சோனியா காந்தியும், சரத்பவாரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், “நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கவே மக்கள் வாக்களித்துள்ளனர். அதன்படியே நாங்கள் செயல்படுவோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சிவசேனாவுடன் கூட்டணி வைக்கத் தயார் எனத் தேசியவாத காங்கிரஸ் கூறியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.