Published:Updated:

புயல் அரசியல்... மோடியுடன் மோதும் மம்தா!

தேர்தல் முடிந்ததும் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. பா.ஜ.க-வை ஆதரித்தவர்கள், அந்தக் கட்சிக்குத் தேர்தல் வேலைபார்த்தவர்கள் குறிவைத்துத் தாக்கப் பட்டனர்.

பிரீமியம் ஸ்டோரி

தேர்தல் காலத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் கட்சிகள், தேர்தல் முடிந்ததும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்காளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு!

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு எட்டுக் கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என நம்பியது பா.ஜ.க. வெறுப்பு அரசியலும் கொரோனாவும் வேகமாகப் பரவிய இந்தத் தேர்தலில், கடந்த இரண்டு முறையைவிட அதிக இடங்களைப் பிடித்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது.

தேர்தல் முடிந்ததும் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. பா.ஜ.க-வை ஆதரித்தவர்கள், அந்தக் கட்சிக்குத் தேர்தல் வேலைபார்த்தவர்கள் குறிவைத்துத் தாக்கப் பட்டனர். தாக்குதலில் பலர் இறந்தனர். அண்டை மாநிலமான அஸ்ஸாமுக்கு பல்லாயிரம் பேர் அகதிகளாகச் சென்று தஞ்சம் அடையும் அளவுக்கு மோசமான நிலைமை. பாதிக்கப் பட்டவர்களைப் பார்க்கச் சென்ற மத்திய அமைச்சர் முரளிதரனின் காரை மம்தா கட்சி தொண்டர்கள் தாக்கினர். ‘ஒருபுறம் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தபடி, இன்னொரு பக்கம் வன்முறையை மம்தா தூண்டுகிறார்’ என பா.ஜ.க புகார் செய்தது.

மோடி
மோடி

இந்த வன்முறை ஒரு பக்கம் இருக்க, தேர்தல் காலத்தில் தன் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பும்படி மம்தா அழைத்தார். ‘இரண்டு முறை முதல்வராக இருந்த மம்தா தோற்றுவிடுவார். இம்முறை பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும்’ என்ற நம்பிக்கையில் ஏராளமானவர்கள் கட்சி தாவியிருந்தனர். அவர்களில் பலர் மீண்டும் மம்தாவை சரணடைந்தனர்.

முகுல் ராய் போன்ற மம்தாவிடமிருந்து விலகி வந்த மூத்த தலைவர்களே அமைதியாக இருப்பதைப் பார்த்து கவலைப்பட்டது பா.ஜ.க முகாம். அதனால், சாதுரியமான அரசியல் விளையாட்டை ஆரம்பித்தது. வரலாற்றில் எப்போதும் இல்லாத நடவடிக்கையாக, மேற்கு வங்காள பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மத்திய போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப் பட்டது. நந்திகிராம் தொகுதியில் மம்தாவைத் தோற்கடித்த, சுவேந்து அதிகாரியை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கியது. மம்தாவின் தளபதியாக இருந்து, அவரிடமிருந்து விலகி வந்தவர் சுவேந்து அதிகாரி.

இன்னொரு பக்கம் சி.பி.ஐ டீம் களமிறங்கியது. நீண்ட காலமாகக் கிடப்பில் இருந்த நாரதா மீடியா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கை தூசுதட்டி எடுத்து, மேற்கு வங்காள அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்தது. சி.பி.ஐ அலுவலகத்துக்கே போய் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார் மம்தா. இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் சுவேந்து அதிகாரியும் ஒருவர். அவரை மட்டும் சி.பி.ஐ தொடவில்லை. இந்த பாரபட்ச ஆக்‌ஷன் பல கேள்விகளை எழுப்பியது.

இப்படி அரசியல் களம் தகித்துக்கொண்டிருந்த நேரத்தில் யாஸ் புயல் மேற்கு வங்காளத்தைத் தாக்கியது. ‘புயல் பாதிப்புகளைப் பார்வையிட வரும் பிரதமர் மோடி, கலைகுண்டா விமானப்படை தளத்தில் மாநில முதல்வர் மம்தாவுடன் ஆலோசனை நடத்துவார்’ என பிரதமர் அலுவலகம் அறிவித்தது. ஆனால், பிரதமருக்கும் முதல்வருக்குமான சந்திப்பாக இது இல்லை. மாநில ஆளுநர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள், மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் டவ் தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் சேதங்களைப் பார்வையிடச் சென்றார் பிரதமர் மோடி. அப்போது குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப் படவில்லை. இதுவரை அப்படி அழைத்து ஆலோசனை நடத்திய மரபுகளும் இல்லை. பிரதமர் - முதல்வர் ஆலோசனைக் கூட்டம் என்றாலும், இருவரும் அதிகாரிகளும் மட்டுமே சந்திப்பது வழக்கம்.

இந்த மரபை மீறிய மோடிக்கு தன் அரசியலால் பதிலடி கொடுத்தார் மம்தா. பிரதமர் முன்கூட்டியே வந்து காத்திருக்க, அரை மணி நேரம் கழித்துப் போனார் மம்தா. பிரதமரிடம் ஒரு மனுவைக் கொடுத்துவிட்டு, ‘பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வேண்டும்’ என தலைமைச் செயலாளர் ஆலாபன் பண்டோ பாத்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டார். முதல்வருக்கும் தலைமைச் செயலாள ருக்குமான இருக்கைகள் காலியாக இருக்க, மோடி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய கேபினட் செயலகம் உத்தரவிட்டது. தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஓர் அதிகாரியை இதற்குமுன் இப்படி மாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் அரசியல்... மோடியுடன் மோதும் மம்தா!

‘‘பிரதமரின் விமானம் இறங்க வேண்டும் என்பதால், என் ஹெலிகாப்டரை அனுமதிக்கவில்லை. அதனால்தான் அன்று தாமதமானது. நான் மோடியிடம் சொல்லிவிட்டுத்தான் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். மேற்கு வங்காளத்துக்கு உதவி செய்கிறார் என்றால், மோடியின் காலில்கூட விழுவதற்கு நான் தயார். எனக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. கொரோனாவும் புயலும் வங்கத்தை சிதைத்திருக்கும் நேரத்தில் மலிவான அரசியலைச் செய்ய வேண்டாம். எங்களை நிவாரணப்பணிகளைச் செய்ய விடுங்கள்’’ என்கிறார் மம்தா.

‘‘மம்தா வெறும் ஒன்றரை நிமிடம்தான் பிரதமரிடம் பேசினார். மேற்கு வங்காளத்துக்கு உதவிகள் தேவைப்படும் நேரத்தில்கூட மத்திய அரசுடன் மோதுகிறார். அவர் மோடி காலில் விழத் தேவையில்லை. அரசியல் சட்டத்தை மதித்தால் போதும்’’ என்கிறார் சுவேந்து அதிகாரி.

இந்த விவகாரம் இத்துடன் முடியப் போவதில்லை. அடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மோடி போகும்போது, ‘சுவேந்து அதிகாரியைக் கூப்பிட்டதுபோல, எங்களையும் கூட்டத்துக்குக் கூப்பிடுங்கள்’ என்று அங்கெல்லாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கேட்கக்கூடும். அது சுவாரஸ்யமான அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு