Published:Updated:

மேற்கு வங்கம்... இந்தியாவின் மிக முக்கிய தேர்தல் யுத்தம்!

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

எட்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதால், கிட்டத்தட்ட மத்திய அமைச்சரவையே மேற்கு வங்காளத்தில் குவிந்திருக்கிறது.

மேற்கு வங்கம்... இந்தியாவின் மிக முக்கிய தேர்தல் யுத்தம்!

எட்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதால், கிட்டத்தட்ட மத்திய அமைச்சரவையே மேற்கு வங்காளத்தில் குவிந்திருக்கிறது.

Published:Updated:
மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

வீடுகளிலும் பொது இடங்களிலும் அரசியல் விவாதங்கள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்காளம். தேர்தல் மோதல்கள்கூட ரத்தக்களறியாக மாறும் அளவுக்கு அரசியல், அவர்கள் உதிரத்தில் கலந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது, வங்காளிகள் கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். பத்தாண்டுகளாக முதல்வராக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜியிடமிருந்து மாநிலத்தைக் கைப்பற்ற முனைப்பு காட்டுகிறது பா.ஜ.க. இருவருக்குமான இந்த மோதல், இந்தியாவின் மிக முக்கியமான தேர்தல் யுத்தமாக வர்ணிக்கப்படுகிறது.

எட்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதால், கிட்டத்தட்ட மத்திய அமைச்சரவையே மேற்கு வங்காளத்தில் குவிந்திருக்கிறது. மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா என யாராவது ஒருவர், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வங்காளத்துக்கு வந்துவிடுகிறார்கள். பிரதமர் தொடங்கி எல்லோருமே எதிர்த்தரப்பை மோசமான மொழியில் விமர்சித்துப் பிரசாரம் செய்கிறார்கள். மம்தாவும் அதேபோல பேசுகிறார். ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் வரை இந்த அரசியல் அனல் குறையாமல் இருக்கிறது. இந்த மோதல், எப்போதும் இல்லாத அச்சத்தை மேற்கு வங்காள மக்கள் மனதில் விதைத்திருக்கிறது.

மேற்கு வங்கம்... இந்தியாவின் மிக முக்கிய தேர்தல் யுத்தம்!

‘நாங்கள் வென்றுவிட்டோம்’ என்று காட்டுவதற்கு இரண்டு தரப்புகளுமே மெனக்கெடுகின்றன. இரண்டுகட்ட தேர்தல்கள் முடிந்ததுமே, “இதுவரை தேர்தல் நடந்த 60 இடங்களில் 50 இடங்களை நாங்கள் வென்றுவிட்டோம்’’ என்று அறிவித்தார் அமித் ஷா. பிரதமர் மோடி இன்னும் ஒருபடி மேலே போய், “நாங்கள் விரைவில் ஆட்சி அமைக்கப் போகிறோம். எங்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பயனாளிகளின் பட்டியலை எடுக்க ஆரம்பித்துவிடுங்கள்’’ என மாநில அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு செய்தார்.

மம்தாவும் இதில் சளைத்தவர் இல்லை. “கடந்த முறை 221 இடங்களில் ஜெயித்தோம். இந்த முறை அதைவிட அதிகமான இடங்களில் ஜெயிப்போம். வித்தியாசம் குறைவாக இருந்தால், அவர்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’’ என்றார்.

மனரீதியான ஒரு யுத்தத்தை இருதரப்புமே நடத்துகின்றன. ‘எளிமையான ஒற்றைப் பெண்மணிக்கு எதிராக பிரதமர், மத்திய அமைச்சரவை, சி.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், துணை ராணுவப் படைகள், பல மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்கள், தேர்தல் ஆணையம் என எல்லோரும் சதி செய்வதாக’ மம்தா ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். “நான் பிறவிப் போராளி. என்னை இவர்களின் அதிகாரங்கள் பணிய வைத்துவிடாது’’ என்று முழக்கமிடுகிறார். மர்மமான ஒரு விபத்தில் காலில் அடிபட, கட்டுப் போட்டுக்கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரப் பயணம் செய்கிறார். ‘வங்கத்தின் மகளை வெளியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள்’’ என அனுதாபம் தேடுகிறார். மோடியையும் அமித் ஷாவையும் ‘குஜராத்தி தாதாக்கள்’ என்றுதான் அவர் குறிப்பிடுகிறார்.

மேற்கு வங்கத்தில் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், ஏப்ரல் 1 அன்று தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலைவைத்து உளவியல்ரீதியாக மம்தா மீது தாக்குதல் தொடுத்தது பா.ஜ.க. தேர்தல் நாளில் ஒரு வாக்குச்சாவடியில் தங்கள் கட்சி ஆதரவாளர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, அங்கு சென்று போராட்டம் நடத்தினார் மம்தா. ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, பா.ஜ.க-வுக்கு வாக்களிக்குமாறு மக்களை துணை ராணுவப் படையினர் மிரட்டினார்கள்’ என்றும் குற்றம்சாட்டினார்.

மம்தாவுக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, “பல வாக்குச்சாவடிகளில் உட்காருவதற்குக்கூட மம்தா கட்சியில் பூத் ஏஜென்ட்கள் இல்லை. மம்தா தோற்பது உறுதி. அதனால்தான் இப்படி நாடகம் நடத்துகிறார்’’ என்றார். பிரதமர் மோடி இன்னும் ஒருபடி மேலே போய், “நந்திகிராமில் தோற்றுவிடுவோம் என்று மம்தாவுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் வேறொரு தொகுதியிலும் அவர் போட்டியிடப்போவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது’’ என்றார்.

மம்தா சளைக்கவில்லை. நந்திகிராமில் இருந்தபடி விரல்களை உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டிய அவர், “நான் நிச்சயம் வெல்வேன். இன்னொரு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உங்கள் வாரணாசி தொகுதியில் அடுத்த முறை என்ன ஆகிறது என்று பாருங்கள்’’ என மோடிக்குச் சவால் விட்டார்.

அடுத்த நான்கு கட்டங்களில் தேர்தல் நடக்கும் மிச்சமுள்ள 234 தொகுதிகளில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே இரு தரப்பினரும் இப்படிப் பேசினார்கள். இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கும் மக்களைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும்; கட்சிக்காரர்களையும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக இன்னும் என்னென்னவோ ஜெகஜ்ஜால வேலைகள் நடக்கின்றன.

தமிழகத்தில் தி.மு.க-வுக்குத் தேர்தல் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதுபோலவே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சிக்குத் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். ‘நந்திகிராமில் பா.ஜ.க-வே ஜெயிக்கும். மம்தா தோற்பார்’ என பிரசாந்த் கிஷோர் எடுத்த ஒரு சர்வே சொல்வதாக ஒரு பொய்த் தகவலை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியின் விளிம்பில் இருப்பதால், தேர்தல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகிவிட்டதாகவும் செய்தி பரப்பினார்கள். எல்லாவற்றையும் மறுத்திருக்கும் பிரசாந்த் கிஷோர், “பா.ஜ.க இங்கு தேர்தல் நடக்கும் 294 இடங்களில் 100 இடங்களைக்கூட பிடிக்காது’’ என்று உறுதியாகச் சொல்கிறார்.

மேற்கு வங்கம்... இந்தியாவின் மிக முக்கிய தேர்தல் யுத்தம்!

தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சிகளை யாராவது செய்யும்போதெல்லாம் மம்தா பானர்ஜி அதில் ஆர்வம்காட்ட மாட்டார். காங்கிரஸ் பக்கம் நெருங்குவதற்கே தயக்கம் காட்டுவார். ஆனால், சோனியா காந்தி உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இந்தத் தேர்தல் பரபரப்பிலும் அவர் ஒரு கடிதம் எழுதினார். ‘அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகிறது. இதை நாம் எதிர்க்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு மற்ற தலைவர்களிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே, மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஒரு புது ரூட்டைப் போட்டுவிட்டார். “பா.ஜ.க-வை எதிர்க்கும் சக்தி காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு என்பதை மம்தா புரிந்துகொண்டார். நாங்கள் வலுவாக இருக்கும் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் தன் கட்சியின் 22 வேட்பாளர்களையும் மம்தா வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு அவரை ஆதரிப்பது பற்றி நாங்கள் யோசித்துச் சொல்கிறோம்’’ என்று சொன்னார்.

மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். பல கருத்துக்கணிப்புகளைவைத்து, ‘இம்முறை தொங்கு சட்டமன்றம்தான் அமையும். எனவே, எங்கள் கூட்டணிக்குத்தான் முதல்வரைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கப் போகிறது’ என்கிறது காங்கிரஸ். “அப்படி ஒரு நிலைமை வந்தால், உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க உடனடியாக விலைக்கு வாங்கிவிடுமே’’ என்று கிண்டல் செய்கிறார்கள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்.

எப்போதுமே கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிக் காட்ட வங்காளிகள் ஆசைப்படுவார்கள். இந்த முறை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மம்தாவுக்கு வெற்றி அல்லது தொங்கு சட்டமன்றம் என்றே சொல்கின்றன. பார்க்கலாம்!
***

மேற்கு வங்கம்... இந்தியாவின் மிக முக்கிய தேர்தல் யுத்தம்!

அஸ்ஸாம் யாருக்கு?

வாக்குப்பதிவு இயந்திரத்தை பா.ஜ.க வேட்பாளர் காரில் எடுத்துப் போனது, 90 வாக்குகள் இருக்கும் பூத்தில் 171 பேரை வாக்களிக்க அனுமதித்தது என இதுவரை இல்லாத விநோதங்கள் அஸ்ஸாம் தேர்தலில் நிகழ்ந்தன. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் இதுதான். இங்கு ஆட்சியைத் தக்கவைக்க அந்தக் கட்சி முழு வேகத்துடன் களமிறங்கியிருக்கிறது. கடந்த முறை பா.ஜ.க கூட்டணியிலிருந்த போடோலாந்து மக்கள் முன்னணியை, தன் பக்கம் இழுத்திருக்கிறது காங்கிரஸ். கூடவே, கடந்த முறை தனியாக நின்ற பத்ருதின் அஜ்மலின் ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சியையும் இணைத்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறது. அஸ்ஸாமில் 35 சதவிகிதம் அளவுக்கு இருக்கும் முஸ்லிம்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றவர் அஜ்மல். இவரை காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்ததால், அஸ்ஸாம் தேர்தல் பிரசாரம் பெரிதும் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கிறது. கருத்துக்கணிப்புகள் இங்கு தொங்கு சட்டமன்றம் அமையும் என்றே சொல்கின்றன. எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் பா.ஜ.க தலைவர்களுக்கு பிஸியான வேலை இருக்கிறது.