Published:Updated:

வங்கத்தையும் வளைக்குமா பா.ஜ.க?

இதனால்தான், தமிழகத் தேர்தல் களத்தைவிட தேசியத் தலைவர்கள் அதிகம் உற்றுநோக்கும் களமாக மேற்கு வங்கம் இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
‘சாதாரண செருப்பும் எளிய புடவையும் அணிந்த ஒரு பெண்மணியை வீழ்த்த பிரதமர் மோடி, 15 மத்திய அமைச்சர்கள், 25 பா.ஜ.க தலைவர்கள், நடிகர், நடிகைகள் எனப் பெரிய பட்டாளமே தேர்தல் ஆணையத்தின் துணையுடன் மோதுகிறது’ என மேற்கு வங்கத் தேர்தலை வர்ணிக்கிறது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், 294 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் மேற்கு வங்காளத்தில் எட்டுக் கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. நாம் ஏப்ரல் 6-ம் தேதி வாக்களித்துவிட்டு, ரிசல்ட்டுக்காக மே 2-ம் தேதிவரை காத்திருப்போம். ஆனால், மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை வங்க மக்கள் வாக்களித்தபடி இருப்பார்கள்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியாவிலேயே ஒரு மாநிலத் தேர்தல் எட்டுக் கட்டங்களாக நடைபெறுவது இதுதான் முதல் முறை. தெற்கு 24 பர்கானா என்ற மாவட்டத்தில் மூன்று கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் மூன்று மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

“தேர்தல் ஆணையம் பி.ஜே.பி-க்கு வசதியாகவே தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் ஆரம்ப நாள்களில், பி.ஜே.பி-க்கு செல்வாக்குள்ள ஏரியாக்களில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பிரசாரம் முடித்துவிட்டு பா.ஜ.க தலைவர்கள் பட்டாளமே மேற்கு வங்காளத்தில் வந்து குவிந்து பிரசாரம் செய்யப் போகிறது. எனவே, நாங்கள் வலுவாக உள்ள பகுதிகளில் அப்போது தேர்தல் நடைபெறுவதுபோலத் திட்டமிட்டுள்ளார்கள்’’ எனத் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

மோடி
மோடி

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகிறார் மம்தா. காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் பலவீனமடைந்தால், தனக்கு எதிர்க்கட்சிகளே இல்லாமல் போய்விடும் என்று கணக்கு போட்டார். ‘வெற்றிடத்தைக் காற்று வந்து நிரப்பும்’ என்பது இயற்கையின் விதி. ‘வெற்றிடத்தில் பா.ஜ.க வந்து வளரும்’ என்பது இந்திய அரசியல் விதி.

மேற்கு வங்கத்தில் அறிமுகமே இல்லாத கட்சியாக இருந்த பா.ஜ.க., கடந்த ஐந்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பெற்ற இடங்கள் 22. பா.ஜ.க 18 இடங்களில் வென்று பக்கத்தில் வந்து நின்றது. மம்தா கட்சியிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என வரிசையாகப் பலரைக் கட்சி தாவச் செய்தது. நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வாக்கான பிரமுகர்கள் எனப் பலரையும் சேர்த்து, ‘அடுத்து பா.ஜ.க ஆட்சிதான்’ என்ற பேச்சை இப்போதே வரவழைத்துவிட்டது.

மோடியோ, அமித் ஷாவோ மேற்கு வங்கம் போனால், அந்த மேடையில் புதிதாக யாராவது கட்சியில் சேர்வார்கள். தமிழகத்தில் ரஜினியை வளைக்க முடியாத பி.ஜே.பி., வங்கத்தின் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்கரவர்த்தியை வளைத்துவிட்டது. ‘நான் சாதாரணப் பாம்பு இல்லை; நல்ல பாம்பு. ஒரே கடியில் கொன்றுவிடுவேன்’ எனத் தன் புகழ்பெற்ற சினிமா வசனத்தை மோடியின் எதிரே மேடையில் பேசியிருக்கிறார் மிதுன்.

‘வங்கத்தில் நிஜமான மாற்றத்தைக் கொண்டுவருவோம்’ என்ற மோடியின் கோஷத்தை சமாளிக்க, பி.ஜே.பி-யை ‘வெளியாட்களின் கட்சி’யாக வங்க மக்களிடம் காட்ட நினைக்கிறார் மம்தா. தேர்தல் நேரத்திலும் விலைவாசிப் பிரச்னையை முன்னிறுத்தி பாத யாத்திரை நடத்துகிறார். 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தி, கட்சியில் நிகழும் கலகங்கள் ஆகியவற்றையும் சமாளிக்க முடியாமல் திணறும் மம்தாவை எளிதில் வீழ்த்த முடியும் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ.க.

இதற்குக் காரணமும் இருக்கிறது. அது, மம்தாவை வீழ்த்த இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும் கம்யூனிஸ்ட் கூட்டணி. கடந்த இரண்டு தேர்தல்களில் இல்லாத அளவுக்கு வீறுகொண்டு எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி அதனுடன் கூட்டணியில் இருக்கிறது. கூடவே, இண்டியன் செக்யூலர் ஃப்ரன்ட் என்ற புதிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. இது, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்சி. மேற்கு வங்காளத்தில் செல்வாக்கான இஸ்லாமிய மதகுருவான அப்பாஸ் சித்திகி என்பவரின் கட்சி இது. ‘பாய்ஜான்’ என அழைக்கப்படும் இவரின் குரலுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரிய மதிப்பு உண்டு.

மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி 31 சதவிகிதம். முன்பு கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்ததற்கும், இப்போது 10 ஆண்டுகளாக மம்தா ஆட்சியில் இருப்பதற்கும் இந்த வாக்கு வங்கி முக்கிய காரணம். அப்பாஸ் சித்திகி இந்த வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இப்போதே காஷ்மீருடன் மேற்கு வங்கத்தை ஒப்பிட்டுச் சில பி.ஜே.பி தலைவர்கள் பேசிவருவது, அவர்கள் விரும்பும் வகையிலான பிளவை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடும். இந்த இரண்டையும் மம்தா சமாளிப்பாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

இதனால்தான், தமிழகத் தேர்தல் களத்தைவிட தேசியத் தலைவர்கள் அதிகம் உற்றுநோக்கும் களமாக மேற்கு வங்கம் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு