Published:Updated:

ரத்தக்களறியாகும் மேற்கு வங்கம்... ஆளுநர் ஆட்சி கோரும் பா.ஜ.க... என்ன செய்யப்போகிறார் மம்தா?

மேற்கு வங்கம்
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு வங்கம்

அங்குள்ள காவல்துறைமீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால், புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரத்தக்களறியாகும் மேற்கு வங்கம்... ஆளுநர் ஆட்சி கோரும் பா.ஜ.க... என்ன செய்யப்போகிறார் மம்தா?

அங்குள்ள காவல்துறைமீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால், புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Published:Updated:
மேற்கு வங்கம்
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு வங்கம்

மார்ச் 21-ம் தேதி நள்ளிரவு. கொலைவெறிக் கும்பல் ஒன்று, மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம் - ராம்புராத் வட்டத்தில் போக்டுய் என்ற கிராமத்துக்குள் நுழைந்தது. மக்கள் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், ‘யாரையும் விட்டுவைக்காதீர்கள்… அத்தனை பேரையும் போட்டுத்தள்ளுங்கள்…’ என்று கூச்சலிட்டவாறு, வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. பிறகு வீடுகள்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றது. அதில், நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உடல் கருகி உயிரிழந்தனர்!

இந்தச் சம்பவத்துக்குக் காரணம், அன்று மாலை நடந்த ஒரு படுகொலை. அருகிலுள்ள பர்ஷல் கிராமத்தின் பஞ்சாயத்துத் துணைத் தலைவரான, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பது ஷேக், மார்ச் 21-ம் தேதி மாலை அவரது கிராமத்தில் ஒரு டீக்கடையில் நின்றுகொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அவரை வெடிகுண்டு வீசிக் கொலை செய்திருக்கிறார்கள். அதற்குப் பழிவாங்க அன்றைக்கு நள்ளிரவே, போக்டுய் கிராமத்துக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறது அந்தக் கும்பல். கொல்கத்தா நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து, சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்புமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பா.ஜ.க-வினர் இந்தப் பிரச்னையைத் தீவிரமாகக் கையிலெடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “நாஜி வதை முகாம் சம்பவம்தான் இங்கே நடந்துள்ளது. தீதி 100 கொலைகளுக்கு இலக்கு வைத்திருக்கிறார்” என்று காட்டமாக விமர்சித்தார்.

ரத்தக்களறியாகும் மேற்கு வங்கம்... ஆளுநர் ஆட்சி கோரும் பா.ஜ.க... என்ன செய்யப்போகிறார் மம்தா?

“என்னால் அமைதியாக இருக்க முடியாது!”

‘மேற்கு வங்கத்தில் 2011 முதல் ஆட்சியதிகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இருந்துவரும் நிலையில், மணல் திருட்டு, சாலை ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலமாக உள்ளூர் திரிணாமுல் நிர்வாகிகளுக்கு எக்கச்சக்கமாகப் பணம் வருகிறது. அதைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட மோதல்தான், இந்தக் கொலைகளுக்குக் காரணம்’ என்கிறார்கள்.

“மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி செயலிழந்துவிட்டது. மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ராஜ் பவனில் என்னால் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது” என்று ஆளுநர் ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஆவேசப்பட்டிருந்தார். அதற்கு, “தேவையற்ற கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். மேற்கு வங்க அரசை மிரட்டுவதுதான் உங்கள் நோக்கம்” என்று ஆளுநருக்கு மம்தா பானர்ஜி காட்டமாக பதிலனுப்பினார். இதையடுத்து ஆளுநர் ஜக்தீப் தன்கர், டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்திக்க, அது மேலும் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இன்னொரு புறம், முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர். அதனால் ஆவேசப்பட்ட மம்தா பானர்ஜி, “இது உத்தரப்பிரதேசம் அல்ல... இது வங்கம். ஹத்ராஸ், உன்னாவ் என எங்குமே எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பிர்புமுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். யாராவது தும்மினால்கூட பா.ஜ.க-வினர் நீதிமன்றத்துக்குப் போய்விடுகிறார்கள்” என்றார்.

ஒரே வாரத்தில் 26 அரசியல் படுகொலைகள்!

இது மட்டுமல்ல, கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 26 அரசியல் கொலைகள் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தங்களின் சொந்தக் கட்சியினராலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபோல, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். நகராட்சிகளின் தலைவர்களாகவோ, துணைத் தலைவர்களாகவோ அவர்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த ராணாகாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகநாத் சர்க்கார் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதாகப் பரபரப்பு எழுந்தது.

பிர்பும் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பினர். மாநிலங்களவையில் பா.ஜ.க எம்.பி ரூபா கங்குலி பேசியபோது, “வாழத் தகுதியற்ற ஒரு மாநிலமாக மேற்கு வங்கம் மாறிவிட்டது. அங்கு பிறந்தது எங்கள் குற்றமல்ல” என்று கண்ணீர்விட்டு அழுதார். மேலும், “அங்குள்ள காவல்துறைமீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால், புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் கொலைகள் நடப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்றார் ரூபா கங்குலி.

ரத்தக்களறியாகும் மேற்கு வங்கம்... ஆளுநர் ஆட்சி கோரும் பா.ஜ.க... என்ன செய்யப்போகிறார் மம்தா?

எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்!

மேற்கு வங்க சட்டமன்றத்திலும் பா.ஜ.க-வினரால் பிர்பும் சம்பவம் பிரச்னையாக்கப்பட்டது. ‘மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமடைந்திருப்பது குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்’ என்று பா.ஜ.க-வினர் வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில், இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட ஐந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஒருபுறம் தேசிய அரசியலில் கால்பதிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மம்தா பானர்ஜிக்கு அரசியல்ரீதியான நெருக்கடிகள் பிர்பும் சம்பவத்தால் அதிகரித்துள்ளன. சமீபத்தில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா கடிதம் எழுதியிருந்தார். அதில், மத்திய அரசு தன்வசமுள்ள துறைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மாநில அரசுக்குத் தரும் அழுத்தங்களைக் கண்டித்திருந்தார். ‘அனைவரும் ஓரணியில் திரளவேண்டிய நேரம் இது’ என்றும் எழுதியிருந்தார். “சொந்த மாநிலத்தில் இத்தனை படுகொலைகள்; சட்டம்- ஒழுங்குச் சீர்குலைவு நடந்து கொண்டிருக்கும்போது, தேசிய அரசியலில் கவனம் செலுத்துகிறார் மம்தா” என்று பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே, பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களுக்குள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுகிற சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், தனது கட்சியினரை ஒழுங்குபடுத்துவதிலும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைச் சரிசெய்வதிலும் கவனம் செலுத்தினால் மேற்கு வங்க மாநிலத்துக்கு நல்லது. அவரது அடுத்தகட்ட அரசியல் ஆசைக்கும்கூட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism