Published:Updated:

`சட்டசபைக்கு திடீர் விசிட்; கேட்டை மூடிய அதிகாரிகள்!'- மம்தா - ஆளுநர் மோதலால் தகிக்கும் மேற்குவங்கம்

ஆளுநர் ஜெகதீப் தன்கார்
ஆளுநர் ஜெகதீப் தன்கார்

மேற்குவங்க சட்டசபைக்குத் திடீரென வந்தார் ஆளுநர் ஜெகதீப் தன்கார். சட்டசபைக்கு வருவதை ஏற்கெனவே சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கிரண்பேடி - நாராயணசாமி போல, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் செய்யும் அதே வேலையை ஜெகதீப் தன்காரும் மேற்குவங்கத்தில் செய்துவருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவ்வப்போது மாநில அரசின் பணிகளை ஆய்வு செய்துவரும் அவர், நேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்குத் திடீர் விசிட் அடித்தார். அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டது ஆளும் திரிணாமுல் அரசுக்குக் கொதிப்பை ஏற்படுத்தியது.

ஜெகதீப் தன்கார்
ஜெகதீப் தன்கார்

இந்த நிலையில், இன்று மேற்குவங்க சட்டசபைக்கு திடீரென வருகை தந்தார் ஆளுநர் ஜெகதீப். சட்டசபைக்கு வருவதை ஏற்கெனவே சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆளுநர் மற்றும் வி.வி.ஐ.பி-க்கள் நுழையும் கேட் நம்பர் 3 வழியாக உள்ளே போக நினைத்திருந்தார். ஆனால், ஆளுநர் வந்தபோது சட்டசபையின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால், கேட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தார் ஆளுநர் ஜெகதீப். இருந்தும் கேட் திறக்கப்படவில்லை. இதை எதிர்பார்க்காதவர், பத்திரிகையாளர்கள் நுழையும் கேட் நம்பர் 4 வழியாக சட்டசபை வளாகத்துக்குள் சென்றார் ஜெகதீப்.

நெருங்கும் 2021 தேர்தல்; அதிர்ச்சி கொடுத்த வாக்குகள்! -பா.ஜ.க வளர்ச்சியால் கடுகடுத்த மம்தா

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகதீப், ``சட்டசபை சபாநாயகர் இன்று என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். ஆனால், அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு நேர்ந்த அவமானம். கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட கூட்டத்தை ரத்துசெய்து சட்டமன்ற சபாநாயகர் என்னை அவமதித்துவிட்டார். மேலும், இது ஒரு சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகிறது. சட்டமன்ற கேட் ஏன் மூடப்பட்டுள்ளது. சட்டமன்றம் ஒத்திவைப்பு என்பது சட்டமன்றம் மூடப்பட்டது என்று அர்த்தமல்ல.

வரலாற்று சிறப்பு வாய்ந்த சட்டசபை வளாகத்தைப் பார்க்கவும் அங்கு இருக்கும் நூலகத்தைப் பார்வையிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், கேட் மூடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக இதைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் வழிகிறது" என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஆனால் சபாநாயகர் தரப்பிலோ, ``சட்டசபை இரண்டு நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமையே அறிவிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக, சபையில் சில மசோதாக்களை தாக்கல் செய்ய நாங்கள் திட்டமிட்டிருந்தோம். மசோதாக்கள் அச்சிடுவதற்கும் சென்றிருந்தன. அவை வழங்கப்படுவதற்கு முன்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால், ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஒப்புதல் இல்லாமல் மசோதா தாக்கல் செய்ய முடியாது. அதனாலேயே சபை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது" என விளக்கம் கொடுத்துள்ளனர்.

`சிறிய சந்தோஷம், பெரிய மகிழ்ச்சி!’ - சாலையோரக் கடையில் டீ போட்டு ஆச்சர்யப்படுத்திய மம்தா

`ஆளுநர் ஜெகதீப், மத்திய அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார். அதன் தொடர்ச்சியே மாநிலத்தில் ஆய்வு செய்து வருகிறார்'' என மம்தா பானர்ஜி அரசு குற்றம் சுமத்தி வருகிறது. அதனால்தான் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அவரின் ஆய்வைத் தடுக்கும் வகையில் வருகையை முன்கூட்டியே அறிந்து வேண்டுமென்றே சட்டசபையின் கேட்டை மூடியுள்ளார்கள்' எனக் கூறுகிறார்கள் அம்மாநில எதிர்க்கட்சிகள் இதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவத்தையும் சொல்லியுள்ளனர்.

ஜெகதீப் தன்கார்
ஜெகதீப் தன்கார்

நேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஜெகதீப் ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சொல்லிவிட்டே ஆளுநர் ஆய்வுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் வருகையை அறிந்திருந்தும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் என முக்கிய நிர்வாகிகள் யாரும் அங்கு வரவில்லை. இதுவும் மம்தா பானர்ஜியின் ஏற்பாடுதான்" எனக் கூறியுள்ளனர்.

எதேச்சையாக நடந்த சந்திப்பு- மோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா!
அடுத்த கட்டுரைக்கு