Published:Updated:

எந்த மாநிலத்திலும் இல்லாத இறப்பு விகிதம்; உள்துறையின் `மெமோ’ - தொடரும் மத்திய - மே.வ அரசுகளின் மோதல்

மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா
News
மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா

மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, தேர்தல் வித்தகரான பிராஷாந்த் கிஷோரின் உதவியை நாடியதாக தகவல் வெளியானது. உடனடியாக மத்திய அரசு பிரஷாந்த் கிஷோர் ஊரடங்கு காலத்தில் கொல்கத்தா சென்றாரா என விசாரணை எல்லாம் நடத்தியது தனிக் கதை.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியைத் தரும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. அரசாங்கம் மட்டும் நினைத்தால் போதாது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை வீழ்த்துவது முடியாத காரியம்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும், மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் நிலவி வந்த மோதல் போக்கு, கொரோனா வைரஸ் விவகாரத்திலும் கடுமையாகத் தொடர்ந்தது. தொடர்ச்சியாக மத்திய அரசு, `மேற்குவங்கத்தில் மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவில்லை, மக்களை வழி நடத்துவதில் மாநில அரசு தோற்றுவிட்டது' உள்ளிட்ட பல குற்றசாட்டுகளை அடுக்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவையும் அம்மாநிலத்துக்கு அனுப்பி வைத்தது உள்துறை அமைச்சகம். இதைக் கடுமையாக எதிர்த்த மம்தா, மத்திய அரசு முறையான பாதுகாப்பு உபகரணங்களையும், சோதனை கிட்களையும் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவைச் சமாளிக்க மம்தா பானர்ஜி, தேர்தல் வித்தகரான பிராஷாந்த் கிஷோரின் உதவியை நாடியதாக தகவல் வெளியானது. உடனடியாக மத்திய அரசு பிரஷாந்த் கிஷோர் ஊரடங்கு காலத்தில் கொல்கத்தா சென்றாரா என விசாரணை எல்லாம் நடத்தியது தனிக் கதை.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

தற்போது, மேற்கு வங்கத்தில் ஆய்வு நடத்திய மத்திய அமைச்சர்கள் குழு கடந்த திங்கள் கிழமை அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. மாநிலத்தில் கொரோனா நிலைமை மோசமாக இருந்த 7 மாவட்டங்களில் இந்தக் குழு ஆய்வு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பால்லா, மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், ``கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் மேற்கு வங்கத்தின் செயல்பாடுகள் போதுமான அளவில் இல்லை. மாநிலத்தில் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், நடத்தப்பட்ட சோதனைகள் எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை. அதேபோன்று கொரோனாவால் ஏற்படும் இறப்பும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 13.2% இறப்பு விகிதம் இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1,344 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 140 பேர் பலியாகியுள்ளனர்.

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்

மேலும், ``இது மாநிலத்தின் மோசமான கண்காணிப்பு, கண்டறிதல் மற்றும் சோதனைகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. மோசமாக பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ரேண்டமாக பரிசோதனைகள் செய்வது மிக அவசியம். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஏன், காவலர்கள் கூட தாக்கப்பட்டார்கள். கொல்கத்தா மற்றும் ஹவுரா பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரால் இவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், மாநிலத்தின் தூய்மைப் பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதும், குறைந்த அளவிலான தனிமைப்படுத்தப்படும் வசதிகளும் அதிக கவலை அளிப்பதாக இருக்கிறது’’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து மாநில சந்தைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாகவும், போதுமான அளவிலான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் பின்பற்றுவதை மாநில அரசு உறுதி செய்யவில்லை எனவும் கடுமையாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தக் குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஷாந்தனு சென் எதிர்த்திருக்கிறார். அவர், ``ஒரு மத்திய அமைச்சகத்தின் செயலாளர் கடிதம் முழுக்க பொய்யான தகவல்களை குறிப்பிட்டிருந்தது துரதிஷ்டவசமானது. ஏன் சமூக பிரிவினைகளை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பிட்ட சமூகம் என கடிதத்தில் குறிப்பிட்ட தாங்கள் ஏன் அவர்களை எந்த சமூகம் என குறிப்பிடவில்லை... இதனால் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன?

மேற்கு வங்கத்துக்கு இது நாள் வரையில் நீங்கள் அளித்த பிபிஇ கிட்கள் எத்தனை? நீங்கள் செய்ததெல்லாம் மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை மீதும் மலர் தூவினீர்கள். அவ்வளவே. இந்தக் கடிதம், மேற்கு வங்கத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையும் அவமதிக்கிறது” என்றார்.