கர்நாடகாவின் பீதர், ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரி, விஜயப்புரா, கொப்பல் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதனால் குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில், 'பி.எம். போஷன் சக்தி நிர்மான்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, வாரத்தில் இரண்டு நாள்கள் மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மதிய முட்டை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் அல்லது வேர்க்கடலை, சுண்டைக்காய் வழங்கவும் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கர்நாடக அரசு மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது தொடர்பாக பா.ஜ.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மனைவியுமான தேஜஸ்வினி அனந்த் குமார் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நமது கர்நாடக அரசு மதிய உணவில் முட்டை கொடுக்க முடிவு செய்தது ஏன்... முட்டை மட்டுமே ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரமில்லை. சைவ உணவு உண்ணும் பல மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த உணவுக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.