Published:Updated:

காங்கிரஸ்: சோனியா குடும்ப விசுவாசி கார்கேவுக்குக் காத்திருக்கும் முக்கியச் சவால்கள் என்னென்ன?

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எளிதாக வெற்றி வாகை சூடியிருக்கும், சோனியா குடும்ப 'விசுவாசி' கார்கேவுக்கு முன்பு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ்: சோனியா குடும்ப விசுவாசி கார்கேவுக்குக் காத்திருக்கும் முக்கியச் சவால்கள் என்னென்ன?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எளிதாக வெற்றி வாகை சூடியிருக்கும், சோனியா குடும்ப 'விசுவாசி' கார்கேவுக்கு முன்பு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் கடந்த 17-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. இதில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்றார். முன்னதாகவே கார்கேவுக்கு, காந்தி குடும்பத்தின் ஆதரவு, பெரும்பாலான மூத்த தலைவர்கள் உட்பட பெரும்பான்மையான ஆதரவு இருந்தது. இது தேர்தலின்போதும் எதிரொலித்தது.

கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் என்ற சிம்மாசனத்தை வெல்வது எளிதான போட்டியாக இருந்தது. ஆனால் மற்றொருபுறம் 'மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்' என்று எதிர்க்கட்சிகளால் விமர்ச்சிக்கப்பட்டுவரும் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதையில் நிலைநிறுத்துவதும், வரவிருக்கும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 'மோடி - ஷா' கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுப்பதும் முக்கியச் சவால்களாகக் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மோடி - ஷா
மோடி - ஷா

மேலும் அவர்கள், 'சமீபகாலமாக முக்கியத் தலைவர்கள் அதிகமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றனர். அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவர்களை அழைத்துப் பேசி குறைகளைத் தீர்த்துவைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது தடுக்கப்படும். மேலும் 'அதிருப்தி' தலைவர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவதற்கும் உதவும்.

இதேபோல் மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே இருக்கிது. இதில், வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்பட்டுவருகிறது. ஏற்கெனவே மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் காங்கிரஸை மீட்டெடுக்க கார்கே பல வெற்றி வியூகங்களை வகுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேலும் இதற்கு முன்பாக மாநிலத் தேர்தல்களும் வரிசைகட்டி நிற்கின்றன. சம்பந்தப்பட்ட மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்னைகள் இருந்துவருகின்றன. இவற்றைச் சரிசெய்வதன் மூலம் வெற்றிக் கனியைச் சுவைக்கச் செய்ய முடியும். புதிதாக இருக்கும் இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேநேரத்தில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிடக் கூடாது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிபெறுவதற்கு வழிவகை செய்து கொடுக்கும்.

இதேபோல் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் கொண்டுவரும் வகையில், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தலைவர் தேர்தலில் வெற்றி வாகை சூடியதுபோல், இந்தச் சவால்களையும் கார்கே எளிதாகக் கையாள்வரா என்பதைப் பொறுத்திருத்துதான் பார்க்க வேண்டும்' என்கின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, "கடந்த 24 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பொறுப்பேற்று மிகச்சிறப்பாக வழிநடத்திவந்தார்கள். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா காந்தி காரணமாக இருந்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 2019-ம் ஆண்டு தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

`இனிமேல் எங்கள் குடும்பத்திலிருந்து காங்கிரஸ் தலைவராக யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்’ என்ற கருத்தையும் வெளியிட்டார். அந்த வகையில் தற்போது தேர்தல் நடைபெற்று, காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கார்கேவைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

தலித் சமுதாயத்தைச் சேர்த்தவர் காங்கிரஸ் கட்சியில்தான் இந்த உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். ஏராளமான சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அசுர பலத்துடன் இருக்கிறது. எட்டு ஆண்டுக்கால ஆட்சிக்கு எதிராகப் பொருளாதாரப் பேரழிவுகள், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றை முன்னெடுத்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

மோடி ஆட்சியை அகற்றுகிற வகையில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். ஒரு பக்கம் அவரது நடைப்பயணம் மூலம் காங்கிரஸ் வலிமை பெற்றுவருகிறது. அமைப்புரீதியாக வலிமைப்படுத்துகிற பணியிலும், நடைப்பயணத்தின் மூலம் கிடைக்கிற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துகிற சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அதற்கு கார்கே அகில இந்தியா அளவில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிறகு மாநில அளவில் சீர்தீர்த்தங்கள் வர வேண்டும். புதிய அணுகுமுறையோடு இளைஞர்களை ஈர்க்கின்ற அமைப்பாகத் திகழ வேண்டும். பா.ஜ.க-வின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையில் செயல்பட வேண்டும். மக்களைப் பிரித்தாளும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸின் சூழ்ச்சிகளை முறியடிக்கிற வகையில் செயல்பட வேண்டும். கார்கே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 9 முறை ஒரே தொகுதியில் வெற்றிபெற்று சாதனை படைத்தவர்.

இரு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். பழுத்த அனுபவம்மிக்க ஒருவர் தலைவராக வந்திருக்கிறார். அவரது அனுபவம் வெற்றிக்குக் கைகொடுக்கும். மோடியை வீழ்த்துகிற ஒரே தலைவராக ராகுல் காந்தி திகழ்கிறார். ராகுல் காந்தி தலைமை இல்லாமல் மோடி ஆட்சியை அகற்ற முடியாது. இதை காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களாகச் சொல்லப்படும் ஜி-23 இருக்கிற இடமே தெரியவில்லை.

கோபண்ணா
கோபண்ணா

இந்தத் தேர்தலில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைத்துவிட்டார்கள். அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். ஒருசிலர் பதவி ஆசைக்காக பா.ஜ.க-வின் வலையில் விழுந்திருக்கிறார்கள். பா.ஜ.க-வை, அதன் கொள்கைகளை என்று கொள்பவர்கள் காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது. அவர்கள் பதவி சுகத்துக்காகத்தான் காங்கிரஸ் கட்சியிலிருப்பதாகப் பொருள். இரண்டும் நேர் எதிர் துருவ அரசியல். எங்கோ ஒன்று நடந்திருக்கும். இனி அது நடக்காது" என்றார்.