Published:Updated:

ராஜஸ்தான் ராயல்ஸ்... சிக்ஸர் அடித்த கெலாட்... சி.எம் சீட் யாருக்கு?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மாத காலத்துக்கு மேலாக நடைபெற்றுவந்த அதிகாரப் போட்டி தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அரசியலில் அனுபவம் மிக்க சீனியரான முதல்வர் அசோக் கெலாட்டே இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்... சிக்ஸர் அடித்த கெலாட்... சி.எம் சீட் யாருக்கு?

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மாத காலத்துக்கு மேலாக நடைபெற்றுவந்த அதிகாரப் போட்டி தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அரசியலில் அனுபவம் மிக்க சீனியரான முதல்வர் அசோக் கெலாட்டே இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

Published:Updated:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி 2018-ல் ஆட்சியைப் பிடித்தது. `இளம் தலைவரான சச்சின் பைலட் முதல்வர் நாற்காலியில் அமருவார்’ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சீனியரான அசோக் கெலாட் முதல்வரானார். சச்சின் பைலட்டுக்குக் கடும் அதிருப்தி. சச்சினை சமாதானப்படுத்தும் வகையில், துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் அவர்தான். ஆனாலும், `முதல்வர் நாற்காலியில் அமருவதற்கான வாய்ப்பை கெலாட் பறித்துவிட்டாரே...’ என்ற வருத்தமும் கோபமும் சச்சின் மனதில் தொடர்ந்து இருந்தன. சச்சின் பைலட்டுக்கு ஆதரவாகச் சில எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டனர்.

அசோக் கெலாட், சச்சின் பைலட்
அசோக் கெலாட், சச்சின் பைலட்

அசோக் கெலாட் தங்களை ஓரங்கட்டுகிறார், தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறார் என்று கட்சி மேலிடத்துக்கு சச்சின் தரப்பு தொடர் புகார்களைத் தட்டியது. `உனக்கு இன்னும் வயது இருக்கிறது. அடுத்து நீதான் முதல்வர். அவசரப்பட வேண்டாம்’ என்று கட்சியின் அகில இந்தியத் தலைமை சச்சினை சமாதானப்படுத்தி வந்தது. ஆனாலும், கடந்த மாதம் முதல்வர் கெலாட்டுக்கு எதிரான போரை திடீரென்று தொடங்கிவிட்டார் சச்சின். மொத்தம் 200 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், தனக்கு 20 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் திடீரென்று கலகத்தை ஆரம்பித்தார். உடனே, குதிரை பேரம் மூலம் தன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க முயல்வதாக கெலாட் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க உறுதியளித்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்தது. ஆனாலும், தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்துக்குப் பயணமானார் சச்சின் பைலட்.

அசோக் கெலாட், சச்சின் பைலட்
அசோக் கெலாட், சச்சின் பைலட்

பா.ஜ.க-விடமிருந்து பாதுகாப்பதற்காக தனது எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் நட்சத்திர விடுதி ஒன்றில் காங்கிரஸ் கட்சி தங்கவைத்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்மீது காங்கிரஸ் தரப்பு குற்றம்சாட்டியது. `ஷெகாவத்துக்கும், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்’ என்று ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. ஷெகாவத் தரப்பு அதை மறுத்தது.

துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகிய பதவிகள் சச்சின் பைலட்டிடமிருந்து பறிக்கப்பட்டன. அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார் சச்சின். தான் பா.ஜ.க-வில் சேரப்போவதில்லை என்றும் அவர் கூறிவந்தார். இப்படியாக, ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த கண்ணாமூச்சி ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. `காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு, சச்சின் பைலட் சமாதானமாகிவிட்டார்’ என்று செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, ``குதிரைப் பேரம் மூலமாக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முயன்ற பா.ஜ.க-வின் `ஜனநாயக விரோத’ முகத்தில் விழுந்த அறை இது’’ என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக்கொண்ட குழுவை அமைப்பது என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவுசெய்துள்ளது. ஆனால், சச்சின் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. `முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட்டை நீக்க வேண்டும்’ என்பது சச்சின் தரப்பின் முதல் கோரிக்கை. 2022-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், `ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை அறிவிக்க வேண்டும்’ என்பதும், `வரவிருக்கும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்க வேண்டும்’ என்பதும் சச்சினின் இன்னொரு கோரிக்கை. ``இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

`தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் முக்கியப் பதவிகள் தரப்பட வேண்டும்’ என்பது சச்சின் பைலட்டின் கோரிக்கைகளில் ஒன்று. `அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்பதல்ல. அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவிகள் தரப்பட வேண்டும்’ என்பது இன்னொரு கோரிக்கை. அடுத்த கோரிக்கை, `ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டிக்கு பொறுப்பாளராக இருக்கும் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’ என்பது. `2018-ம் ஆண்டு அசோக் கெலாட் முதல்வர் பதவியில் அமர்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அவினாஷ் பாண்டே’ என்று சொல்லப்படுகிறது. பொறுப்பாளர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டால், அடுத்த முறை முதல்வர் நாற்காலியைப் பிடித்துவிடலாம் என்பது சச்சின் பைலட்டின் கணக்கு.

சச்சின் தரப்பின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு ஒரு கமிட்டியை அமைக்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்தபோதிலும், சச்சினின் நிபந்தனைகள் பிளாக் மெயில் செய்வதுபோல இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்கள் கருதுகிறார்கள். `சச்சின் பைலட் மிரட்டலுக்கு இணங்கி அவர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றினால், பிறகு மற்ற மாநிலங்களிலும் இதுபோல ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று சீனியர்கள் கூறுகிறார்கள். `காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பிவரும் சச்சினுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியோ, துணை முதல்வர் பதவியோ மீண்டும் தரப்படாது’ என்றும், `அவருக்கு வேறு ஏதாவது ஒரு பதவி தரப்படும்’ என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

`இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இளம் தலைவர்களிடம் இருக்கிறது. `இளைஞர்கள் பொறுமைகாக்க வேண்டும்’ என்ற எண்ணம் சீனியர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில், சச்சின் பைலட் நடத்திய கலகத்தால் அவர்மீது கடும் கோபத்திலிருந்தார் முதல்வர் கெலாட். சச்சினுடன் ஏற்பட்ட சமாதானப் படலத்துக்குப் பிறகு இப்போது அவர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

``காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ-க்கள் குதிரைப் பேரத்துக்கு அடிபணியவில்லை. அவர்கள் வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள்’’ என்று தெம்பாகப் பேசியிருக்கிறார் கெலாட்.

மேலும், ``அமைதியும் சகோதரத்துவமும் காங்கிரஸ் கட்சியில் நிலவுகின்றன. தற்போது எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் எதிர்காலத்துக்கான பாதை வகுக்கப்படும். ஐந்தாண்டுகளை முழுமையாக எங்கள் ஆட்சி நிறைவுசெய்யும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெறும். அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பாதுகாவலனாக விளங்குவேன். காங்கிரஸ் கட்சியின் தலைமைமீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். அவர்களின் அனைத்துக் குறைகளையும் தீர்ப்பதற்கு முயல்வோம்” என்று கெலாட் உற்சாகமாகப் பேட்டியளித்துள்ளார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

சச்சின் பைலட்டும், ``என் வாழ்க்கையில் ஒருபோதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டது கிடையாது. எல்லாமே கொள்கை அடிப்படையிலான பிரச்னைகள்தான். இதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். கட்சி நலன்களுக்காக இந்தப் பிரச்னைகளை எழுப்புவது அவசியம் என்று நினைத்தேன்’’ என்று கூறியிருக்கிறார்.

சீனியருக்கு எதிராக இளம் தலைமுறை ஆரம்பித்த கலகம் சமாதானத்தில் முடிந்தபோதிலும், இதில் சீனியரே சிக்ஸர் அடித்திருக்கிறார். அவர், சி.எம் சீட்டையும் உறுதிசெய்திருக்கிறார்.