Published:Updated:

ஜி-20 தலைமை ஏற்கும் இந்தியா; சர்வதேச அரங்கில் எப்படிப் பார்க்கப்படுகிறது? - ஒரு பார்வை

ஜி-20 - இந்தியா - மோடி ( ட்விட்டர் )

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை அடைய இந்தியாபல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

ஜி-20 தலைமை ஏற்கும் இந்தியா; சர்வதேச அரங்கில் எப்படிப் பார்க்கப்படுகிறது? - ஒரு பார்வை

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை அடைய இந்தியாபல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

Published:Updated:
ஜி-20 - இந்தியா - மோடி ( ட்விட்டர் )

1999-ம் ஆண்டு ஜி-20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு முதன்மையாகப் பொருளாதார மாற்றங்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்துச் செயல்பட்டு வருகிறது. 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றன. பொருளாதாரத்தைக் கடந்து காலநிலை மாற்றம் உலகளாவிய கடன், நாடுகளுக்குத் தேவையான மின் ஆற்றல் தொடர்பான விவாதங்களும் இந்தக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தலைமை தாங்கி இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டை வழிநடத்திச் செல்லும். அந்த வகையில் இந்தாண்டு 17-வது மாநாட்டை இந்தோனேசியா நடத்தி முடித்திருக்கிறது.

G20 மாநாடு
G20 மாநாடு
ட்விட்டர்

ஜி-20 தலைமை ஏற்கும் இந்தியா!

அடுத்த ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா தலைமை தாங்கவிருக்கிறது. நடந்து முடிந்த உச்சிமாநாட்டில் ஜி-20 தலைமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அடையாளபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு, 2022 டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 தலைமையை இந்தியா முறைப்படி ஏற்கும். தலைமை ஏற்கப் போவதால் ஜி-20 உறுப்பு நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

சமமான மற்றும் நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடு, காலநிலை நிதி உதவி, உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என இவை அனைத்தும் இந்தியாவுக்கு ஜி-20 மாநாட்டில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இவை இந்தியா முன்னிருக்கும் சவால்கள் என்கிறார்கள்.

மேலும், உறுப்பு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளை சுமுகமாக முடித்து, கூட்டமைப்பு நாடுகளை ஒற்றுமையாக வைத்து, வழிநடத்துவதும் இந்தியாவின் பொறுப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் இந்தியா திறம்பட கையாள வேண்டும்.

ஜி20 மாநாடு
ஜி20 மாநாடு

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை அடைய இந்தியா மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்துப் பார்க்கலாம்.

உக்ரைன்-ரஷ்யா போர்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா-உக்ரைன் போருக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பைப் புறக்கணித்து நடுநிலை வகித்தது இந்தியா. அமைதி ஏற்படப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி பிரச்னையிலிருந்து விலகி நின்றது. இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவளிக்காமலிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் பலரும், `ரஷ்யா-இந்தியா நட்பு நாடுகளாக இருந்து வரும் சூழலில் அதற்கு எதிராக இந்தியா வாக்களிக்க விரும்பவில்லை' எனக் கூறினர். இந்த முடிவு அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவை விரிசலடையச் செய்யும் எனக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், நடந்து முடிந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க-இந்திய உறவு சீராக இருப்பது உறுதியானது. ஆனால், இந்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டில் ரஷ்யா சார்பாக அந்த நாட்டின் அதிபர் புதின் கலந்துகொள்ளவில்லை... எனவே, அடுத்த ஆண்டு அவரை கலந்துகொள்ளவைக்கத் தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது.

ஐநா சபை
ஐநா சபை

திரும்பிப் பார்க்க வைக்கும் இந்தியா!

பொருளாதார திறன், எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுக்குப் பொருளாதார உதவி, பாதுகாப்பு, செல்வாக்கு இவற்றின் அடிப்படையில் உலகில் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகளைக் கடந்து பொருளாதார முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம்

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு கூடியிருக்கிறதா என்பது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரமேஷ் சேதுராமனிடம் பேசினோம். "உச்சி மாநாட்டில் நாடுகள் தலைமை தாங்குவது என்பது இயல்பான ஒன்று. அதில் குறிப்பாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தலைமை பொறுப்பு என்பது நமக்குச் சவாலானதே. காரணம் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. அதனால், உலக வங்கியில் அதிக கடன் வாங்கும் சூழல் அனைத்து நாடுகளுக்கும் உருவானது. அதன் பட்டியலும் சமீபத்தில் வெளியானது. இவை அனைத்தையும் சரி செய்வது இந்தியாவின் பொறுப்பு. எனினும், இந்தியா நடத்தவிருக்கும் கூட்டங்கள் வாயிலாக இதற்கான தீர்வு எட்டப்படும். அதேபோல் கடந்த காலங்களில் இந்தியா கொரோனா காலத்திலும் தன் பொருளாதாரத்தின் நிலையைக் கடந்து நாடுகளுக்கு மருந்துகளை அளித்தது.  இதனால், உலக அளவில் இந்தியா முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
லிங்கிடு இன்

அதேபோல் இந்தியாவின் மக்கள்தொகை என்பது உலக நாடுகளை கணக்கிடும்போது, அதிக நுகர்வோர்கள் கொண்டது. அதனால், எது சார்ந்த தொழிலாக இருப்பினும்... அனைவரின் முதல் தேர்வாக இந்தியாவே இருக்கிறது. மற்றொரு மக்கள்தொகை அதிகம் கொண்ட சீன நாட்டில் தொழில் தொடங்குவதில் இருக்கும் கட்டுப்பாடுகளால் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் இருப்பு அவசியமாகிறது" என்றார்.

கொரோனா தடுப்பூசியைத் தயாரிப்பதில் முதல் நாடாக இருந்தது இந்தியா. நம் நாட்டின் தேவையைக் கடந்து, 98-க்கும் அதிகமான நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. குறிப்பாக,  பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்புவதில் இந்தியா கவனம் செலுத்தியது. இதில், வங்காள தேசம், மியான்மர், நேபால், பூட்டான், மாலத்தீவு,  பிரேசில், இலங்கை, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, காங்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த போதும் இந்தியா மற்ற நாடுகளுக்குச் செய்த உதவிகள்... உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தன. இதனால்தான் உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.