Published:Updated:

`திமுக, காங். எதிர்க்கும் அணைப் பாதுகாப்பு மசோதா; தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?!' - ஓர் அலசல்!

அணை
News
அணை

அணைப் பாதுகாப்பு மசோதாவால் தமிழ்நாட்டுக்கு என்னென்ன பாதிப்புகள்... அதை ஏன் தமிழ்நாட்டுக் கட்சிகள் எதிர்க்கின்றன என்பது தொடர்பாக ஓர் அலசல்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது நாட்டிலிருக்கும் அனைத்து அணைகளையும் ஒரே சீராகப் பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே பல்வேறு மாநிலங்கள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. சி.ஏ.ஏ., வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாநிலங்களவைக்குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், ``அணைப் பாதுகாப்பு மசோதா முன்வைக்கிற தேசியப் பாதுகாப்புக்குழுவின் உத்தரவுகள்தான் அணைகள் தொடர்பான விவகாரத்தில் இறுதியானவை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. அணைப் பாதுகாப்பு மசோதாவின் பல அம்சங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆகையால் இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அணைப் பாதுகாப்பு மசோதாவால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

திருச்சி சிவா- நவநீதகிருஷ்ணன்
திருச்சி சிவா- நவநீதகிருஷ்ணன்

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்த மசோதாவால் தமிழ்நாட்டுக்கு என்னென்ன பாதிப்புகள்... அதை ஏன் தமிழ்நாட்டுக் கட்சிகள் எதிர்க்கின்றன என்பது தொடர்பாக ஓர் அலசல்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அணைப் பாதுகாப்பு மசோதாவின் அம்சங்கள்!

நாடு முழுவதுமிருக்கும் அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது இந்த மசோதா. மத்திய அளவிலும், மாநில அளவிலும் அணைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. அணையை நிர்வகிக்கும் மாநிலத்தையே அணைப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக்குகிறது. அணைப் பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்திலிருந்தால், மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு செய்யவேண்டியவற்றை, தேசிய ஆணையம் செயல்படுத்தும். எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படக்கூடும் என்ற தகவல்களை வெளிப்படையாகவைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அணைக்கும் அபாய கணிப்பு அறிக்கை, நெருக்கடிகால நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படும் முன்பே உருவாக்க வேண்டும். தன்னிச்சையான நிபுணர்குழுவால் அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். முதல் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அணைப் பாதுகாப்புக் குழுவைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும். அணைப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தவறு ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதற்குப் பொறுப்பாவார், என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணைப் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பும், அதற்கான காரணமும்!

``ஒரு மாநிலத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு, மற்றொரு மாநிலத்திலிருக்கும் அணைகள் மீதான உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இந்த மசோதா மூலம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிடும் என்பதால் தமிழகத்தால் நிர்வகிக்கப்பட்டு, கேரளாவில் நிறுவப்பட்டிருக்கும் முல்லைப்பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம் போன்ற அணைகளின் மீதான நிர்வாக உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்படும் அபாயமிருக்கிறது. அணைகளின் மீதான மாநிலங்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகையும் இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. ஏற்கெனவே, அண்டை மாநிலங்களால் தமிழகத்துக்குரிய நதிநீர் உரிமைகள் மறுக்கப்படும் சூழலில், புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதா தமிழகத்துக்கு இருக்கும் நதிநீர் உரிமையில் மிகப்பெரிய தாக்குதலாக இருக்கும். இரு மாநிலத்துக்கு இடையேயான நெடுநாள் ஒப்பந்தங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் அண்டை மாநிலங்களுடனான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும். ஏற்கெனவே, சத்தீஸ்கர் மாநிலத்திலிருக்கும் ஷினோத் எனும் ஆற்றைத் தனியாருக்குக் கொடுத்ததுபோல எதிர்காலத்தில் நீர்வளத்தைத் தனியார் வசமாக்க இந்த மசோதா வழிவகுக்குமோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுகிறது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

அணைகள் பாதுகாப்பு - இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் உள்ளது. இந்த மசோதா மூலம் அணைகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயல்கிறது. அப்படி நடக்குமானால், இது இந்திய அரசியலமைப்பை மீறும் செயல். மேலும், வழக்கம்போல மாநிலங்களிடமிருந்து எந்தவித ஒப்புதலையும் பெறாமல் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது’’ என்று பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கின்றனர்.

அணைப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டுவந்த ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இது தொடர்பாக கூறுகையில், ``இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்கி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். முல்லைப்பெரியாறு அணை குறித்து ஏற்கெனவே சபையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாட்டில் இது போன்ற 14 அணைகள் இருக்கின்றன. இது போன்ற அணைகளின் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு. நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டுவிட மாட்டோம். இந்த மசோதா அணைகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுசெய்ய மத்தியக்குழுவுக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கும்” என்றார்.

ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

டிசம்பர் 2-ம் தேதி மக்களவையிலும், 3-ம் தேதி மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் விரைவில் இது சட்டமாகக் கொண்டுவரப்படும். மக்களுக்கு எது நன்மையோ அதை நோக்கி அரசின் பார்வையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!