Published:Updated:

உச்சகட்டத்தில் அதிமுக யுத்தம் - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-ஸின் கடைசி அஸ்திரங்கள் என்னென்ன?!

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

இதற்கு மறுப்பு தெரிவித்து, பதவியிலிருந்தவர்கள் காலமானால்தான், பதவியும் காலியானதாகக் கருத முடியும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

உச்சகட்டத்தில் அதிமுக யுத்தம் - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-ஸின் கடைசி அஸ்திரங்கள் என்னென்ன?!

இதற்கு மறுப்பு தெரிவித்து, பதவியிலிருந்தவர்கள் காலமானால்தான், பதவியும் காலியானதாகக் கருத முடியும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி பின்னர், பொதுக்குழு ஜூன் 23-ம் தேதி கூடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற முதல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பால் தொடரப்பட்டது. ஆனால், பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பைச் சார்ந்த சண்முகம் என்பவர் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக மேல் முறையீடு செய்தார். அன்று இரவே அந்த மனுமீது விசாரணை நடத்தப்பட்டது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அதை விசாரித்த நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் பற்றி மட்டும் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தனர். அதேநேரத்தில், புதிதாக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து எந்த முடியும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தீர்ப்பை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். இதையடுத்து நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். மேலும், தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடன் வெளியேறியபோது, அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அதேபோல, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்துப் பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடக்கும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளான எடப்பாடி கே.பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை தண்டிக்க வேண்டுமென்றும் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஏதுவாக அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென இரண்டாவதாக மேலும் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையில், ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டுமென எடப்பாடி தரப்பில் ஜூன் 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மேலும் ``அ.தி.மு.க-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறலாம். பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான இதர அம்சங்கள் குறித்த இடைக்கால மனுக்களை உரிமையியல் வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி முன்பாக முறையிடலாம். மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்படும்" என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதி முன்பாக 7-ம் தேதி நடைபெற்ற வழக்கு இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர், 8-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, 8-ம் தேதி பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் ஆதரவு இருப்பதாகவும், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் எடப்பாடி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

மேலும், கடந்த டிசம்பர் மாதம் செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் எனக் கட்சி விதி திருத்தப்பட்டது. செயற்குழுவுக்கு விதிகளைத் திருத்தும் அதிகாரமில்லாததால், பொதுக்குழுவின் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுக்குழுவில் இந்தத் திருத்தம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், உட்கட்சித் தேர்தல் செல்லாது. எனவே, இரு பதவிகளும் காலாவதியாகவில்லை; காலியாகிவிட்டன என வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, பதவியிலிருந்தவர்கள் காலமானால்தான், பதவியும் காலியானதாகக் கருத முடியும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட பின்னர், ஜூலை 11-ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று காலை 9.15-தான் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

69 மாவட்டச் செயலாளர்கள், 65 தலைமைக்கழக நிர்வாகிகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் என ஒரு பெரும் படையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியை, வக்கீல் அணியைவைத்து கதிகலங்கச் செய்துவந்தார் பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
OPS

ஆனால், கடந்த சில நாள்களாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளாக நடைபெற்ற யுத்தம் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடிக்குச் சாதகமாகவே அமைந்திருக்கின்றன. இந்நிலையில், எடப்பாடியை ஒற்றைத் தலைமை ஏற்கவிடாமல் தடுக்கும் கடைசி அஸ்திரமாகக் கருதப்பட்ட தனி நீதிபதி விசாரித்த வழக்கு தனக்குச் சாதகமாக இருக்கும் என்று மலைபோல் நம்பிருந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு, தீர்ப்பு ஒத்திவைப்பு பேரிடியாக விழுந்திருக்கிறது.

இது குறித்து ஓ.பி.எஸ் தரப்பு வக்கீல் ஒருவரிடம் பேசியபோது, "அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற வழக்கின் வாதங்களை நீதிபதி கூர்ந்து கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்குதான் நீதிமன்றத்தில் எங்களின் கடைசி அஸ்திரம். எங்கள் தரப்பில் மிக அழுத்தமான பல வாதங்களை முன்வைத்திருக்கிறொம். ஆனால், தீர்ப்பை ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு தள்ளிவைத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாகப் பொதுக்குழு ஏற்பாட்டை நிறுத்துவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால், எங்கள் தரப்பில் ஓர் அச்சநிலை ஏற்பட்டிருக்கிறது. தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் இது குறித்து வேறு எதுவும் பேச முடியாது" என்று முடித்துக்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதேநேரத்தில், பொதுக்குழுவுக்கான பணிகளை மிகத் தீவிரமாக செயல்படுத்தும் எடப்பாடி தரப்பின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கேட்டபோது, "அவ்வளவுதான். பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகளைச் செய்கிறோம். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் நிச்சயம் வரும். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது" என்றனர் அதீத நம்பிக்கையுடன்.

திட்டமிட்டப்படி பொதுக்குழு நடந்தால், பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்படுவதோடு, அதிமுக-விலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்படுவது நிச்சயம். அதேநேரத்தில் இரட்டை இலையை முடக்கும் பணியை ஓ.பி.எஸ் நிச்சயம் தொடங்குவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்