Published:Updated:

தமிழகத்தில் களமிறக்கப்படுமா மின்சாரப் பேருந்துகள்! சாதக, பாதகங்கள் என்னென்ன?

மின்சாரப் பேருந்து

உலக அளவில் 2.5 லட்சம் மின்சாரப் பேருந்துகள்தான் இயக்கத்தில் உள்ளன. அவற்றில் 2.3 லட்சம் பேருந்துகள் சீனாவில் இயங்கிவருகின்றன. மீதமுள்ள பேருந்துகள்தான் உலகம் முழுவதும் இயக்கத்தில் உள்ளன.

தமிழகத்தில் களமிறக்கப்படுமா மின்சாரப் பேருந்துகள்! சாதக, பாதகங்கள் என்னென்ன?

உலக அளவில் 2.5 லட்சம் மின்சாரப் பேருந்துகள்தான் இயக்கத்தில் உள்ளன. அவற்றில் 2.3 லட்சம் பேருந்துகள் சீனாவில் இயங்கிவருகின்றன. மீதமுள்ள பேருந்துகள்தான் உலகம் முழுவதும் இயக்கத்தில் உள்ளன.

Published:Updated:
மின்சாரப் பேருந்து

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 1972-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் எட்டுக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 1.3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவிலேயே அதிக அளவு பேருந்துகள் இயங்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திலுள்ள 22,000 அரசுப் பேருந்துகளில் நாளொன்றுக்கு 1.75 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். இருந்தபோதிலும் போக்குவரத்துத்துறை பெரும் நஷ்டத்தில் செயல்பட்டுவருகிறது. போக்குவரத்துத்துறையின் நஷ்டம் குறித்து `அதலபாதாளத்துக்குச் செல்கிறதா தமிழக போக்குவரத்துத்துறை?' என்று 7 மார்ச், 2020-ம் தேதி வெளியான ஜூ.வி-யில் ஆர்.டி.ஐ ஆதாரங்களோடு விரிவாக எழுதியிருந்தோம்.

தமிழக போக்குவரத்துத்துறை
தமிழக போக்குவரத்துத்துறை

ஏற்கெனவே போக்குவரத்துத்துறை பெரும் நஷ்டத்தில் செயல்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிதிச்சுமையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் முக்கிய நகரங்களில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இன்னொரு பிரச்னையாக உருமாறிவருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. மத்திய அரசு 'ஃபேம்' திட்டத்தின்கீழ் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை, லண்டனைத் தலைமையிடமாகக்கொண்ட சி-40 என்னும் நிறுவனத்துடன் 500-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்தை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின்சாரப் பேருந்துகளின் சோதனை முறை சேவையை, தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மின்சாரப் பேருந்தைப் பொறுத்தவரை டீசல் பேருந்தைவிட ஐந்து மடங்கு வரை விலை அதிகம். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வரை ஓடும் திறன்கொண்டது. அதோடு, இந்தப் பேருந்தில் குளிர்சாதன வசதி, தானியங்கிக் கதவுகள், ஜி.பி.எஸ்., ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு போன்றவற்றைக் கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மின்சாரப் பேருந்து
மின்சாரப் பேருந்து

1,600 கோடி ரூபாய் மதிப்பில் 2,313 மின்சாரப் பேருந்துகளை வாங்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் 2019-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அன்றைய முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டது. பேருந்துகளை வாங்கவும், அந்தப் பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பைக் கொண்டுவரவும், செயல்பாட்டை மேம்படுத்தவும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் தமிழகத்துக்கு 1,600 கோடி ரூபாய் கடன் வழங்கும் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா டோரோதியா மெர்க்கெல் (Angela Dorothea Merkel) கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலாவதியான பேருந்தும் தமிழகமும்:

ஒரு பேருந்தைப் பொறுத்தவரை ஆறு லட்சம் கிலோமீட்டர் ஓட்டலாம் அல்லது ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாகிவிடும் என்று அரசுத் தரப்பு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அதிக காலாவதியான பேருந்துகளை இயக்கும் முதல் மாநிலமாக பீகாரும், இரண்டாவது மாநிலமாகத் தமிழகமும் இருக்கின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் 3,365 பேருந்துகளில் 56 சதவிகிதத்துக்கும் அதிகமான பேருந்துகள் காலாவதியானவைதான் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. அதேபோல சென்னையில் நடைபெறும் பேருந்து விபத்துகளில் அரசுப் பேருந்துகளால் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2019-ம் ஆண்டு எம்.டி.சி பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்தவர்கள் 71, உயிரிழந்தவர்கள் 26. டி.என்.எஸ்.டி.சி (TNSTC) பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்தவர்கள் 6, உயிரிழந்தவர்கள் 7. தனியார் பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்தவர்கள் 49, உயிரிழந்தவர்கள் 13 என்று பதிவான வழக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அதிக விபத்து ஏற்படும் முதல் மாநிலம் எது தெரியுமா? தமிழகம்தான். 2019-ம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற மொத்த சாலை விபத்து 57,228. இந்தச் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,525. இந்தியாவில் அதிக சாலை விபத்து நடைபெறும் முதல் நகரம் சென்னைதான். இங்கு 2019-ம் ஆண்டில் மட்டும் 6,871 விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில், 1,252 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு மின்சாரப் பேருந்துகளை இயக்குவது குறித்து சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். `` மின்சாரப் பேருந்துகளை இயக்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை இயக்க கோரப்பட்ட டெண்டர் ஆண்டுக்கணக்கில் அப்படியேதான் இருக்கிறது. தவிர இதுவரை யாரும் டெண்டர் எடுக்கவில்லை. ஒரு சாதாரண டீசல் பேருந்தைக்காட்டிலும் மின்சாரப் பேருந்தின் விலை மிக அதிகம். சென்னையில் சோதனை செய்ய இயக்கப்பட்ட மின்சாரப் பேருந்தும் ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

 ஆறுமுக நயினார்
ஆறுமுக நயினார்

தொடர்ந்து பேசியவர்,``உலக அளவிலேயே 2.5 லட்சம் மின்சாரப் பேருந்துகள்தான் இயக்கத்தில் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் பேருந்துகள் சீனாவில் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள பேருந்துகள்தான் உலகம் முழுவதும் இயக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரப் பேருந்துகளைக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. நல்ல, தரமான மின்சாரப் பேருந்துகளை அரசு வெளிநாடுகளிலிருந்து டெண்டர் கோரி இறக்குமதி செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு பதில் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்தினால் மக்கள் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது அதிகரிக்கும். பல முன்னேறிய உலக நாடுகளிலுள்ள மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தில்தான் பயணிக்கிறார்கள்" என்று கூறினார்.

முந்தைய ஆட்சியில் மின்சாரப் பேருந்துகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலை குறித்து, போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு அவர் நம்மிடம் பேசினார். ``இதுவரை தமிழக அரசு எந்த மின்சாரப் பேருந்தும் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. முந்தைய ஆட்சியில் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடன் உதவியோடு 2,000 மின்சாரப் பேருந்துகளும், 12,000 டீசல் பேருந்துகளும் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிதி உதவி இன்னும் சில மாதத்தில் நமக்கு வந்து சேரும். இதற்காகத் தனிக்குழு ஒன்று செயல்பட்டுவருகிறது. கடன் தொகை வந்த பின்னர் டெண்டர் விடப்பட்டு பேருந்துகள் வாங்க இன்னும் நீண்ட காலம் ஆகும். முந்தைய ஆட்சியிலேயே மின்சாரப் பேருந்துகளுக்கு சார்ஜிங் பாண்ட் அமைப்பது தொடர்பாக அறிக்கைகள் தயார்செய்யப்பட்டுவிட்டன. மத்திய அரசின் நிதித் திட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்க டெண்டர் விடப்பட்டபோதும் இதுவரை அது நடைபெறவே இல்லை" என்றார்.

போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறை

மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், ``காரணம் அரசு சார்பில் பேருந்து நிறுவனங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த தொகை குறைவு என்பதுதான். மின்சாரப் பேருந்தை இயக்குவது நல்லதுதான். அதற்காக அரசு அதிகம் நிதி முதலீடு செய்யவேண்டியிருக்கும். அதை அரசு சரியாகச் செய்தால் மின்சாரப் பேருந்து செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. வெறும் கடனை வாங்கி, பெயருக்குப் பேருந்தை இயக்கினால் அது பெரும் தோல்வியில்தான் முடியும். காலாவதியான பேருந்துகளைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக அளவு பேருந்துகள் தமிழகத்தில்தான் ஓடுகின்றன. மற்ற மாநிலங்களில் சில ஆயிரம் பேருந்துகள் மட்டுமே உள்ளன. நம்மிடம் 22,000 அரசுப் பேருந்துகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை காலாதியானவைதான். அரசு விதிப்படி அவை அனைத்தும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வப்போது ஏற்படும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இன்னும் ஓட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. விபத்துகளுக்கு அது மட்டுமே காரணம் கிடையாது. அதுவும் ஒரு காரணம் மட்டுமே'' என்று கூறினார்.

மின்சாரப் பேருந்துகளைப் பொறுத்தவரை பல்வேறு நன்மைகள் இருப்பதுபோல, பல சிக்கல்களும் உள்ளன. சரியான திட்டமிடல், செயல்முறை அனைத்தும் தயார் செய்த பின்னர் திட்டத்தைச் செயல்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். இல்லையென்றால், ஏற்கெனவே போக்குவரத்துத்துறைக்கு இருக்கும் 33,000 கோடி கடனுக்கு மேல் இன்னும் கடனும் நஷ்டமும் அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism