Published:Updated:

``அண்ணன் சொல்றதைக் கேக்கலைன்னுதானே இங்க பேசுறேன்...” - கட்சிக் கூட்டத்தில் காட்டமான ஸ்டாலின்

ஸ்டாலின்

மே 14-ம் தேதி காணொளி வாயிலாக தி.மு.க மா.செ-க்கள் கூட்டம், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன பேசினார்... என்ன நடந்தது?

Published:Updated:

``அண்ணன் சொல்றதைக் கேக்கலைன்னுதானே இங்க பேசுறேன்...” - கட்சிக் கூட்டத்தில் காட்டமான ஸ்டாலின்

மே 14-ம் தேதி காணொளி வாயிலாக தி.மு.க மா.செ-க்கள் கூட்டம், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன பேசினார்... என்ன நடந்தது?

ஸ்டாலின்

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை நடத்துவது குறித்தும், ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை குறித்தும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் பெயரைச் சொல்லி அழைத்து செம்ம டோஸ் விட்டதாகச் சொல்கிறார்கள்.

காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்
காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது எனக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

“ ‘பலருக்கும் அமைச்சர் கனவு இருக்கிறது. ஆனால், உங்களுக்கு மட்டும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தலைமை உங்கள்மீது எந்தளவு மரியாதை வைத்திருக்கிறது என்பதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்’ என எடுத்த எடுப்பிலேயே தலைவர், அமைச்சர்கள்மீது அனலைக் கக்கினார். `அதேபோலத்தான் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் அமைச்சர் கனவு இருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால், பல ஆண்டுகளாகக் கட்சியில் உழைத்தவர்களுக்குக் கிடைக்காத சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பு உங்களுக்குக் கட்சியால் கிடைத்திருக்கிறது என்றால் அதன் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்’ என எம்.எல்.ஏ-க்களுக்கும் குட்டுவைத்தார்.

அதன் பிறகு மாவட்டச் செயலாளர்கள் பக்கம் திரும்பியவர், அமைச்சர்கள் உள்ளடக்கிய 10 மாவட்டச் செயலாளர்களை அழைத்துக் கொதித்துவிட்டார்” என்றவர்...

ஸ்டாலின்
ஸ்டாலின்

`விருப்பம் இருந்தால் வேலைசெய்யுங்கள். இல்லையென்றால் அந்த வேலையை எப்படிப் பார்க்க வேண்டும் என எனக்குத் தெரியும்’ எனச் சொன்னதும் ஆடிப்போய்விட்டார்கள்” என உள் விவகாரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆலோசனைக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், ``தலைவர் பேசும்போது குறுக்கிட்ட அமைச்சர் ஒருவர், ‘அண்ணன் சொல்றதைச் செஞ்சுட்டுத்தான் இருக்கோம்’ எனச் சொல்ல, `அண்ணன் சொல்றதைக் கேக்கலைன்னுதானே சிலரோட பெயர்களைச் சொல்லியே இங்கே பேசுறேன். மா.செ-க்களாக இருக்கும் அமைச்சர்கள், துறை வேலையை மட்டும் சரியா பாத்தா போதாது. கட்சி வேலையையும் சரியாகப் பார்க்க வேண்டும்’ எனச் சொல்ல, வெலவெலத்துப் போனார்கள்.

மற்றொரு சென்னை மா.செ-வை அழைத்தவர், ‘கட்சி வேலை பார்க்கத் தெரியுமா... பார்க்க விருப்பமிருக்கா?’ என்றே கேட்டுவிட்டார். ‘இரண்டே இரண்டு தெருக்கள்தான் இருக்கின்றன. அதில்கூட வேலை பார்க்கத் தெரியவில்லை என்றால், எதற்கு உங்களைப் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்’ எனக் கேட்டவர் மற்றவர்களையும் எச்சரித்தார். ‘ஆட்சியைவிட எனக்கு கட்சிதான் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆளுங்கட்சியின் கட்சிப் பொறுப்பில் இருப்பதாலேயே சர்வாதிகாரிகளாக உங்களை நினைத்துக்கொள்ளக் கூடாது.” என்றவர்...

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“ ‘நான் நினைத்தால் வேலை செய்யாத யாரையும் எப்போது வேண்டுமானாலும் அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிந்துவிடுவேன்’ எனச் சொல்ல யாரிடமும் பேச்சு மூச்சு இல்லை’ ” என விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் தொடர்ந்தவர், “சில நிர்வாகிகள், `வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களைச் சேர்க்கச் சொல்வதில்தான் சிக்கல் இருக்கிறது தலைவரே’ எனச் சொன்னார்கள். அவர்கள் பக்கம் திரும்பிய தலைவர், `வீட்டில் இருந்தபடியே நாலு பேரை வைத்துக்கொண்டு பத்தே நாளில் ஒரு கோடிப் பேரை நான் கட்சியில் சேர்க்கவா... உறுப்பினர் சேர்க்கை என்பது கட்சிக்கு ஆள்பிடிக்க அல்ல. தெருத் தெருவாகச் சென்று மக்கள் ஆட்சி குறித்து என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான். கட்சிக்காரனின் புலம்பலைக் கேட்டுக்கொள்ளத்தான். உங்களால் முடியவில்லை எனச் சொல்லிவிட்டால் அதை எப்படிச் செய்து முடிப்பது என எனக்குத் தெரியும்” என வறுத்தெடுத்துவிட்டார்.

தொகுதிப் பார்வையாளர்கள்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு. யாரிடமும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். எனக்கு வேலை நடக்க வேண்டும். தேர்தலில் வெற்றி வேண்டும். கட்சியும் தொண்டர்களும் வலுவாக இருக்க வேண்டும்” என கொதித்துவிட்டார்” என்றவர்...

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“ ‘தலைமை சொன்னதைக் கேட்டு நடந்தால் நல்லது, இல்லையென்றால் பதவி தப்புவது கடினம்தான். தொகுதிப் பொறுப்பாளர்கள் பலரும் தங்கள் வேலையை முழுமையாக முடிக்கவில்லை, அதை முடியுங்கள். பூத் கமிட்டி அமைக்க வேண்டும், அணிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். செய்ய விரும்பாதவர்கள் கட்சியில் நீடிப்பது கஷ்டம்’ என முதல்வர் காட்டமாக முடித்துக்கொண்டார்” என்றார்.