ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக, 2004 முதல் 2009 வரையிலான மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ தற்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. அதாவது, ஐ.ஆர்.சி.டி.சி ஊழலில், ரயில்வேதுறையில் வேலை பெற்றவர்களிடமிருந்து, லாலு நிலத்தை லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

2021-லேயே இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என விசாரணையை நிறுத்திக்கொண்ட சி.பி.ஐ., மீண்டும் இதைத் தோண்டியிருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான விசாரணை 2017-ல் நடந்தபோதே, அப்போது ஆர்.ஜே.டி-யுடன் கூட்டணியிலிருந்த ஜே.டி.யூ விலகி பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டது.
தற்போது மீண்டும் ஜே.டி.யூ, ஆர்.ஜே.டி-யுடன் இணைந்து ஆட்சியிலிருக்கும்போதுகூட, லாலு மட்டுமல்லாமல் அவரின் மனைவி ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., தற்போது லாலுவின் மகனும், பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யதாவுக்கு சம்மன் அனுப்பியிருப்பது குறித்து நான் என்ன சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய நிதிஷ் குமார், ``இது நடந்தது 2017-ல். அதன் பிறகு நாங்கள் (ஜேடியூ-ஆர்ஜேடி) பிரிந்து சென்றோம். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தபோது, மீண்டும் ரெய்டுகள் நடக்கின்றன. இதில் நான் என்ன சொல்ல முடியும்?" என்றார்.