Published:Updated:

கர்ணனென தீரம்சூட வேண்டும், காங்கிரஸின் அடுத்த தலைவன்!

நேற்று 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க-வால், இன்று 303 இடங்களைப் பிடிக்க முடியும் என்றால், இன்று 52 இடங்களைப் பெற்றிருக்கும் காங்கிரஸால் நாளைக்கு 500 இடங்களைக்கூடப் பிடிக்க முடியும். என்ன, அதற்கு நம்பிக்கை கொள்ளவேண்டும். விடாமல் முயலவேண்டும்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

காங்கிரஸ் கப்பல், தரைதட்டி நிற்கிறது. நங்கூரமிட்டுக் கப்பலைத் திருப்பவேண்டிய கேப்டன், இறங்கியோடிவிட்டார். இதுவரை கப்பலில் சொகுசாகப் பயணித்தவர்கள், கேப்டன் பொறுப்பை ஏற்கும் துணிவின்றி தூர நிற்கிறார்கள். ‘மூழ்கும் கப்பலில் முக்கியப் பொறுப்பை எடுக்க நாங்கள் என்ன முட்டாள்களா..’ என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. அதுவும் சரிதான். ஆனால், அறிக்கையில் பெயர் போடுவதற்கேனும் ஒரு தலைவரை விரைவில் அடைந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, காங்கிரஸ்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அமரீந்தரை அமர்த்தலாம் என்றால், அவருக்கு வயதாகிவிட்டது. வேணுகோபாலைக் கொண்டுவரலாம் என்றால், அவர் மதியூகி மட்டுமே... மக்கள் தலைவர் அல்லர். சசிதரூரும் அறிவுஜீவிதானே தவிர, அரசியல்வாதி இல்லை. இப்படி, ‘இன்சப்ஷன்’ படத்தில் கனவுக்குள் சிக்கித்தவிக்கும் நாயகனைப்போல, திசை தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது, காங்கிரஸ். இந்தியாவை 60 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சியால், தலைமைக்கு ஆள் தேட முடியவில்லை என்பது அவமானம் அல்ல, அவலம்!

செய்தி அறிந்திருப்பீர்கள். சமீபத்தில், டெல்லியில் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. ஆளுங்கட்சியின் முதலமைச்சர்கள் கூட்டம், `பில்லா' படம் வெளியான திரையரங்குபோல நிரம்பி வழிய, காங்கிரஸ் மாநாடோ 'பில்லா பாண்டி' வெளியான திரையரங்கு மாதிரி அம்போவெனக் கிடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் தலைமை. பத்துக்குப் பதினாறு அறையில் ஒரு மேசையில் அமர்ந்து, வெறும் நாலே நாலு முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், அவர். இப்போது, காங்கிரஸ் தயவில் முதல்வராக இருந்த குமாரசாமியும் அவுட்டாகிவிட, முதல்வர்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்துவிட்டது. என்ன சொல்வது? வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் ஆயிரம் ஜன்னல் வீட்டைப்போல பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டுமானால், காங்கிரஸ் தேடவேண்டியது ஒரு தலைவனை அல்ல; ஒரு மீட்பனை!

காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்
காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்

அடிப்படையில், இது ’கர்மா’! 1998-ம் ஆண்டுவாக்கில் காங்கிரஸ் ஓர் அறமீறலைச் செய்தது. அப்போது, சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தார். ஒருநாள் அவருக்கே தெரியாமல் காரிய கமிட்டி கூட்டத்தைக் கூட்டினார், பிரணாப் முகர்ஜி. அந்தக் கூட்டத்தில்தான், சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவராக ஆக்குவதென முடிவெடுத்தார்கள். பதறியடித்து அக்பர் சாலைக்கு ஓடிவந்தார், கேசரி. அவரது முகம் முழுக்க அவமான ரேகைகள். ’எனக்கே தெரியாமல் எப்படி அடுத்த தலைவரை அறிவிப்பீர்கள்’ என்று அவர் கேட்டபோது, அறையில் படமாக வீற்றிருந்த காந்தி கண்ணீர்விட்டார். காங்கிரஸ் சட்டத் திட்டங்களின்படி, பொறுப்பில் இருக்கும் தலைவர் விலகாமல், இன்னொரு தலைவரை கொண்டுவர முடியாது. ஆனால், சோனியாவுக்காகக் கட்சியின் சட்டதிட்டத்தை சட்டை பட்டனெனக் கழற்றி மாட்டினார்கள்.

அடுத்த சில நாள்களில், கொல்கத்தாவில் இருக்கும் பிரணாப் முகர்ஜியின் வீட்டில் ஒன்றுகூடி சோனியாவை புதிய தலைவராக அறிவிப்பு செய்தார்கள். திருட்டுத்தனத்தை மறைவாகத்தானே செய்யவேண்டும்! அதனால், கட்சி அலுவலகத்தைத் தவிர்த்துவிட்டு அங்கே கூடினார்கள். கேசரி அதை அறிந்து இன்னும் அதிக கோபம் கொண்டார். ‘தனி மனிதருக்காக ஒரு கட்சியின் அரசியலமைப்பையே கேலிக்கூத்தாக்குவதா...’ என்று வெடித்தார். அவருடன் அன்று சரத்பவாரும், தாரிக் அன்வரும் துணை நின்றார்கள். அத்தனை பேரையுமே கட்சியைவிட்டு வெளியேற்றினார், சோனியா காந்தி. இந்தப் பாவம்தான், காங்கிரஸை இன்று பாதாளத்தில் படுக்கவைத்திருக்கிறது. ராகுலின் ராஜினாமாவை ஒரு பிராயச்சித்தமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. காந்தியின் அனைவரையும் உள்ளடக்கிய தேசியத்தை, பெயரளவுக்கேனும் பேசும் கட்சியாக காங்கிரஸ் மட்டுமே வாழ்கிறது. ஆகவே, காங்கிரஸ் எழுந்தாக வேண்டும். அது சீக்கிரமே நடந்தாக வேண்டும்.

பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி
பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி

ஆயிரம் இருந்தாலும், காங்கிரஸ் இயக்கம் இப்போது இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லைதான். ஆனால், காங்கிரஸால் மட்டுமே எந்தவோர் அமைப்பையும் நாடு தழுவிய அளவில் எதிர்க்க முடியும். கட்சிக்கு மாநிலங்களிலும்கூட மக்கள் பிரதிநிதிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், கட்சி இருக்கிறது; கட்சிக்கு அமைப்புகள் இருக்கின்றன; அமைப்புகளுக்கு அலுவலகங்கள் இருக்கின்றன. அந்த அலுவலகத்தில் காலைதோறும் காந்தி படத்தை வணங்கிவிட்டுப் பணியைத் தொடங்கும் சில கதர்ச்சட்டைகள் எஞ்சி நிற்கிறார்கள்.

காந்தியின் அனைவரையும் உள்ளடக்கிய தேசியத்தை, பெயரளவுக்கேனும் பேசும் கட்சியாக காங்கிரஸ் மட்டுமே வாழ்கிறது. ஆகவே, காங்கிரஸ் எழுந்தாக வேண்டும். அது சீக்கிரமே நடந்தாக வேண்டும்.

சசிதரூர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், சில முக்கியமான சங்கதிகளை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ‘காங்கிரஸ் தலைவன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் மற்றும் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவன் இளம்ரத்தமாக இருக்க வேண்டும்’. சந்தேகமே இல்லாமல், சசிதரூர் காங்கிரஸுக்குள் ஒரு கலகத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஆண்டாண்டுக் காலமாக, காங்கிரஸின் தலைவனை காரிய கமிட்டிதான் நியமித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காரிய கமிட்டியின் உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர்கள் நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார், சசிதரூர். ‘ஓர் உட்கட்சித் தேர்தலை நடத்துங்கள். தனக்கு யார் தலைவனாக வேண்டுமென்று தொண்டன் முடிவு செய்யட்டும்’ என்கிறார், அவர். இங்கிலாந்துக்காரனிடம் சுரண்டலுக்கு நியாயம் கேட்டதற்கு அடுத்தபடியாக, சசி வெடித்திருக்கும் முக்கியமான வெடி இது. அதுவும், ’உங்களை தனிமைப்படுத்துவார்களே’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘கட்சியே தனிமைப்பட்டுத்தான் கிடக்கிறது. என்னை என்ன தனியாய்த் தனிமைப்படுத்துவது?’ என்று அவர் சொன்ன பதில், இன்னும் அல்டிமேட்.

சசிதரூர்
சசிதரூர்

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சசிதரூர் ’இதைச் செய்யுங்கள்’ என்று அறிவுரை சொல்லவில்லை. ‘இதைச் செய்யுங்கள். இல்லாவிட்டால் இது நடக்கும்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். சோனியாவுக்காகச் சட்டத்தைத் திருத்தமுடியும் என்றால், சசிதரூருக்காக ஏன் சட்டத்தைத் திருத்த முடியாது? ஆக, இனியும் அகமது படேல்களின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கமுடியாது. மக்களிடம் சென்றே ஆக வேண்டும். மக்களின் நம்பிக்கையை அடைந்தே ஆகவேண்டும். அதற்கு, தலைமைப் பதவியில் இருந்தே சீர்திருத்தம் தொடங்குவது நல்ல அறிகுறியே. அறிக... அழிவு என்பது தீ போன்றது. பற்றிவிட்டால், பத்து நொடிக்குள் பஷ்பமாக்கிவிடும். காங்கிரஸின் அழிவுத் தீ ஏற்கெனவே பற்றிக்கொண்டுவிட்டது. இனியும் உணராவிட்டால், பஷ்பம்தான்.

சசிதரூர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ‘வருகின்ற தலைவன் தொண்டர்களுக்கு ஊக்கமளிப்பவனாகவும், மக்களை காங்கிரஸ் பக்கம் திருப்புபவனாகவும் இருக்கவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை ’twin duties’ என்று அழகாக வரையறுக்கிறார், சசி. அவர் தெளிவாக அடிக்கிறார். வேகமும் விவேகமும் கொண்ட, மரபையும் நவீனத்தையும் புரிந்த, தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் பிரித்துக்காட்டத் தெரிந்த ஒருவனை அவர் கேட்கிறார். அதாவது, ’காந்தியையும் நேருவையும் கலந்த மாதிரி ஓர் ஆள் வேண்டும்’ என்கிறார். ஆனால், எதையுமே புரிந்துகொள்ள முயலாமல், மீண்டும் பிரியங்கா, பிரியங்காவின் கணவன் வதேரா, பிரியங்காவின் பிள்ளைகள் ரைகான், மிராயா என்றே பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள்.

ராகுலே, ‘தலைவனை வெளியே தேடித் தொலையுங்கள்’ என்று அறிவுறுத்தியும், ‘அதெல்லாம் முடியாது’ என்று அடம்பிடிக்கிறார்கள். ’அடிமைத்தனம் என்பது ஒரு தீராவியாதி. வந்தால் போகவே போகாது’ என்பதை, திரும்பவும் நிரூபிக்கிறார்கள்.
காந்தி, நேரு
காந்தி, நேரு

சசிதரூரின் இரண்டாம் கூற்றும் சரியே. காங்கிரஸுக்கு இப்போது தேவை ஒரு இளம்தலைவன்! அவன், உழைப்புக்குத் தயங்காதவனாக, போராட்டத்துக்குச் சளைக்காதவனாக, விமர்சனங்களுக்கு அஞ்சாதவனாக, எந்தநிலையிலும் சோர்ந்து அமராதவனாக இருக்க வேண்டும். ஏனென்றால், இலக்கு பெரிது. அதை அடைய முடிகிறவனும் பெரியவனாகத்தான் இருப்பான். ஆனால், அப்படிப்பட்ட இளம்தலைவன் யாரும் காங்கிரஸில் இப்போது இல்லை என்பதே சோகமான செய்தி. ஏனென்றால், தனித்துவமிக்க தலைவர்கள் யாரையுமே கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையில் இருந்தவர்கள் உருவாக்கவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பைக்கு வரும், அவர்கள் சட்டியே இல்லாமல் இருக்கிறார்கள்! ’ஒரு தலைவன் ஒரு தத்துவமாக நிலைகொள்ள வேண்டும்’ என்று உலகுக்கு உணர்த்தியவர் காந்தி. அப்படிப்பட்டவர் வளர்த்தெடுத்த இயக்கத்துக்கு இன்று தலைமைப்பஞ்சம் என்பது தரித்திரம்.

தேடிப்பார்த்ததில், இரண்டே இரண்டுபேர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார்கள்... சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்யே சிந்தியா! ’ஏன் இவர்கள் இரண்டு பேரும்’ என்றால், இவர்கள்தான் இரண்டு பெரிய மாநிலங்களில் காங்கிரஸைக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இருவருக்கும் வழங்கவேண்டிய மரியாதையை காங்கிரஸ் தலைமை வழங்க மறுத்தது. அப்போதே அது சர்ச்சையும் ஆனது. முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும், ‘சமுதாயம் என்ன போடா...’ என்று, பாட்டுபாடிக்கொண்டே வீட்டுக்கு நடந்துபோனார், சச்சின். ‘என்னமோ போடா சச்சு...’ என்று அங்கலாய்த்துக்கொண்டே, மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் ஆசையைப் பலிகொடுத்த ஜோதிராதித்யே சிந்தியாவும் கூடவே போனார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

இங்கே எதிர்த்தரப்பு என்ன செய்தது என்பதைப் பார்க்க வேண்டும். திரிபுராவில் பா.ஜ.க-வை அரியணை ஏற்றிய பிப்லாப் தேபைத்தான் முதலமைச்சராக்கியது, பா.ஜ.க. உத்தரப்பிரதேசத்தில் அவர்கள் யோகியை வளர்க்கிறார்கள். ஒடிசாவில் தர்மேந்திர பிரதானை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் காங்கிரஸோ, ராஜீவ் காலத்தில் காட்டிய முகங்களையே ராகுல் காலத்திலும் காட்டிச் சாவடிக்கிறது. அதுவும் கமல்நாத்தெல்லாம் இந்திரா காலத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்டவர். இப்படியிருந்தால் ஏதாவது உருப்படுமா என்ன? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இரண்டு பேருமே இன்னும் மனம் தளராமல்தான் இருக்கிறார்கள். எதிர்முகாமிலிருந்து ஆசைகாட்டப்பட்ட போதும் ‘என் உடலில் ரத்தமென ஓடுவது காந்தியின் பன்மைத்துவம், இதயமெனத் துடிப்பது நேருவின் மதச்சார்பின்மை’ என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள். ’கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்?!’ என்பதே முன்வைக்கும் முக்கியக் கேள்வி!

உணர்க... ஆபத்து நிறைந்த அடர்காட்டில் பயணிக்கும்போது, நமக்கு எதிரே வரும் விலங்குகளே நம் திட்டங்களைத் தீர்மானிக்கின்றன. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை காந்தி எதிர்க்கத் தீர்மானித்தபோது, அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஒத்துழையாமை இயக்கமோ, உப்புச் சத்தியா கிரகமோ, வெள்ளையனே வெளியேறு இயக்கமோ, எல்லாமே காந்தி நடக்க ஆரம்பித்த பிறகு கண்டடைந்த திட்டங்கள். அட, காந்தி வரைக்கும் எதற்குப் போக வேண்டும்? ஒரு சினிமா போதும்! 'Fast and Furious' படத்தில் ஒரு காட்சி வரும். அதில், ஒரு வங்கியைத் தாக்க ஆரம்பத்திலிருந்தே திட்டம் போடுவார்கள், வின் டீசல் குழுவினர். ஆனால், தவறிக்கொண்டே இருக்கும். இறுதிக் காட்சியும் வந்துவிடும். வின் டீசல் சொல்வார், ‘நாளை காரியத்தை முடிக்கப்போகிறோம்'. நண்பர்கள், ‘எப்படி? என்ன திட்டம் வைத்திருக்கிறோம்’ என்று கேட்பார்கள். வின் டீசல் நிதானமாக மீண்டும் சொல்வார், ‘எந்தத் திட்டமும் இல்லை. போறோம், தூக்குறோம். அவ்வளவுதான்’!

ஜோதிராதித்யே சிந்தியா
ஜோதிராதித்யே சிந்தியா

ஆக, இதில் ஆலோசிப்பதற்கு எதுவும் இல்லை. சசிதரூர் சொன்னபடி கட்சித் தேர்தலை அறிவியுங்கள். ’யார் சரி வருவார்’ என, கைக்காசைப் போட்டு கட்சிக்குக் கொடிகட்டும் அடிமட்டத் தொண்டன் முடிவு செய்யட்டும். அவன் மீண்டும் ராகுலையேகூடக் கைகாட்டக் கூடும். அப்படிக் கைகாட்டினால், ராகுல் அந்த ஆணையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். மீண்டும் சின்னப்பிள்ளை மாதிரி, ’இல்லை... முடியாது...’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தால், அடுத்த தேர்தலில் 52 இருக்கும் இடத்தில் 2 தான் இருக்கும். அதுவும், ராகுலும் சோனியாவும் மட்டுமேவாகத்தான் இருக்கும்.

அடுத்து வர இருக்கும் காங்கிரஸ் தலைவனின் முன்னால் மூன்று முக்கியப் பணிகள் இருக்கின்றன. முதலாவது, முன்னால் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் செய்த அலட்சியப்படுத்தும் அரசியலை மறுதலிப்பது. தெரியுமா... மோதிலால் நேருவும் சித்தரஞ்சன் தாஸும் காங்கிரஸிலிருந்து விலகி தனி இயக்கம் நடத்தியபோது, காந்தி அவர்களைத் தொடர்ந்து சமாதானப்படுத்திக்கொண்டே இருந்தார். ’அவர்களுக்காக எப்போதும் நான் காத்திருப்பேன்’ என்றும் அறிவிப்பு செய்தார். இதற்கு, காந்திதான் காங்கிரஸ்! ஆனாலும், அவர் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் கட்டியணைக்கத் தயாராக இருந்தார். ’நாம் விடுதலையை நோக்கிய பெரும்பயணத்தில் இருக்கிறோம். எந்த ஆற்றலையும் வீணாக்கிவிடக்கூடாது’ என்று சொன்னவர், அவர். தேடிப்பார்க்கவும். எவரையும் அவர் அலட்சியப்படுத்தியதும் இல்லை, தனிமைப்படுத்திப் பார்த்து அற்பசுகம் கண்டதுமில்லை. ஏனென்றால், இந்தியாவை ஒட்டுமொத்தமாகப் பார்த்த பரந்தபார்வை அவருடையது.

காந்தி
காந்தி
அடுத்த காங்கிரஸ் தலைவன், காந்தியைப்போல ஒட்டுமொத்த பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும்.

இரண்டாவது, கட்சியினரிடையே போராட்டக்குணத்தை வளர்த்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பதும் அவசியம். போராட்டம் என்பதை ஏதோ காலை அமர்ந்து மாலை எழும் அலுவலகப் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றைய காங்கிரஸ் நிர்வாகிகள். அவர்களுக்கு ’போராட்டம் என்றால் என்ன, அதன் வலிமை எப்படிப்பட்டது’ என்பதை வரும் தலைவன் உணர்த்தியாக வேண்டும். இதோ, இப்போது அருமையான ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. தேசியப் புலனாய்வு முகமை திருத்தச் சட்டத்தை அறிவித்திருக்கிறது, மத்திய அரசு. இது, ஆங்கிலேயனால் இந்திய மக்களின்மீது ஏவப்பட்ட ரவுலட் சட்டத்தை நினைவுபடுத்துவதாக அச்சம் தெரிவிக்கிறார்கள், அறிவார்ந்தோர். ஆனால், காங்கிரஸ் கடலாழமென அமைதி கொண்டிருக்கிறது. நினைவிருக்கிறதா? காந்தி முதன்முதலில் ரவுலட் சட்டத்துக்கு எதிராகவே மக்கள்திரள் போராட்டத்தை அறிவித்தார். 1918-ம் ஆண்டிலேயே சம்பராணில் சத்தியா கிரகத்தை ஆரம்பித்துவிட்டார், அவர். ஆனால், இந்திய அளவில் அவரிடமிருந்து வந்த முதல் போராட்ட அழைப்பு ரவுலட் சட்டத்துக்காகவே. அதை மறந்துவிடக்கூடாது. காந்தி நடந்த பாதை இன்னும் காலடி படாமலேயே கிடக்கிறது. அதில், அடியெடுத்துவைத்து வந்தால் மட்டுமே காங்கிரஸ் தலைவன் வெல்லமுடியும், இந்தியாவை!

மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சீரமைக்க வேண்டும், வரவிருக்கும் தலைவன். வெளியே ஆயிரம் விவகாரங்கள் பற்றிக்கொண்டு எரிகிறது. ஆனால், ‘ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமா, கூடாதா’ என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார், அழகிரி. ‘போருக்குப் போடா’ என்று போர்வாளைக் கொடுத்தால், அதை எடுத்து முதுகு சொறிந்தானாம் ஓர் அரசன். அதுபோலவே இருக்கிறார், அழகிரி. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை வைத்துக்கொண்டு எத்தனை போராட்டங்கள் நடத்தலாம்.. எத்தனை மக்கள் சந்திப்புக் கூட்டங்களைக் கூட்டலாம்.. ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா என்பதுதான், அவருக்கு அவசிய சங்கதியாக இருக்கிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இப்படி, எங்கே என்ன நடந்தாலும், ’சாப்பிட்டு சாயங்காலம் தேடலாம்..’ என்றிருந்தால், சத்தியமூர்த்தி பவன் இன்றல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் காத்து வாங்கிக் கொண்டுதானிருக்கும். அழகிரியாவது பரவாயில்லை. ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவருவதில் அர்ஜுன் சம்பத்தைவிட அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் கராத்தே தியாகராஜன். காந்தி இருந்திருந்தால், ‘காலக்கொடுமை’ என்று தலையில் கைவைத்து அமர்ந்திருப்பார்.

ஆகட்டும். இங்கே முடியாது என எதுவுமில்லை. நேற்று இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க-வால் இன்று 303 இடங்களைப் பிடிக்க முடியும் என்றால், இன்று 52 இடங்களைப் பெற்றிருக்கும் காங்கிரஸால் நாளைக்கு 500 இடங்களை கூடப் பிடிக்க முடியும். என்ன, அதற்கு நம்பிக்கை கொள்ளவேண்டும்; விடாமல் முயலவேண்டும்; அஞ்சாமல் முன்செல்ல வேண்டும். ’தடை அதை உடை’ என்று கொண்ட லட்சியத்தை நோக்கி வெறிநடை நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

மீண்டும் ஒரு மகாபாரத உதாரணம். களமாடல் நிகழ்வு முடிந்ததும் குந்தி தேவியைச் சந்திக்கப் போவான், கர்ணன். அன்னையும் மகனும் நிறைய நேரம் கதை பேசுவார்கள். கர்ணன், ‘விடை கொள்கிறேன் மாதா‘ என எழும்போது, ‘இங்கே விலக வேண்டிய இருள்கள் நிறைய இருக்கிறது மைந்தா...’ என்பாள் குந்தி. கர்ணன் திரும்பி, ‘விலகா இருளென எதுவுமில்லை மாதா. எல்லா இருளும் விலகும், எல்லா நாளும் விடியும்’ என்று சொல்லிச் செல்வான். அவனை அந்த வார்த்தையைச் சொல்லவைத்தது அவன்கொண்டிருந்த அசுர நம்பிக்கை.

‘என்னை வீழ்த்தி மகிழ்கிறது விதி. ஆனால், வீழும்தோறும் எழுவது என் குணம். வெல்வேனா என அறியேன். ஆனால், போராடுவேன்’ என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறான் கர்ணன். அவனுக்கு எதிரிகள் அவனைவிட வலுவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவன் போராடினான். வில்லேந்தி விண்முறித்த வீரத்தால் அல்ல, தன்னுடன் தான் கிழித்து அளித்த தானத்தால் அல்ல, கடைசிவரை களம்நின்று போராடிய தீரத்ததாலாயே, கர்ணன் காவியநாயகன் ஆனான்.

கர்ணனென எதையும் எதிர்கொள்ளும் தீரம்சூடி களத்திற்கு வரவேண்டும் காங்கிரஸ் பேரியக்கத்தின், அடுத்த தலைவன்!