Published:Updated:

`தெளிவான திட்டமிடல் மிக முக்கியம்’ - பூரண மதுவிலக்கும் பீகார் கள்ளச்சாராய மரணங்களும்!

மதுவிலக்கு

``கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம்” - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

Published:Updated:

`தெளிவான திட்டமிடல் மிக முக்கியம்’ - பூரண மதுவிலக்கும் பீகார் கள்ளச்சாராய மரணங்களும்!

``கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம்” - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

மதுவிலக்கு

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அந்த வகையில் அந்த மாநிலத்தில் ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் மது விற்பனை செய்யவும், மது அருந்தவும் தடைவிதிக்கப்பட்டது. பார் லைசென்ஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்புக்குப் பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். பூரண மதுவிலக்குக்கு வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களின் புழக்கமும் அதிகரித்தது. இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. கடந்த ஆண்டு நவாடா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர். கள்ளச்சாராயம் குடித்து மாநில மக்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்துவருகின்றன.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

இந்தச் சூழலில், கடந்த 14-ம் தேதி பீகார் மாநிலம், சரண் மாவட்டத்துக்குட்பட்ட சாப்ரா பகுதியில் மதுப்பிரியர்கள் இரவு நேரத்தில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்திருக்கின்றனர். பின்னர், வீடு திரும்பிய அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நிலை மிக மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விவகாரம்  ஆளும் நிதிஷ் குமார்  அரசுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.  இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கும் பாஜக, நிதிஷ் குமாருக்கு  எதிராகக் குரல் கொடுத்துவருகிறது. 

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

இந்த நிலையில், நடப்பு பீகார் சட்டப்பேரவையிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பீகாரில்  மது விலக்கு அமலில் இருக்கும்போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் நிதிஷ் குமார் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும், கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்கத் தவறிவிட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் முழக்கமிட்டனர்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக பதிலளித்த  முதலமைச்சர் நிதிஷ் குமார், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம். அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்?

கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைவீர்கள், கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா, உத்தரப்பிரதேசம் என எங்கு சென்றாலும் அதே கதைதான். மற்ற இடங்களில் அவர்கள் இறக்கும்போது ஏன் தகவல் வெளிவருவதில்லை... நான் எல்லா இடங்களிலும் மீண்டும் வலியுறுத்துகிறேன், யாராவது மதுவுக்கு ஆதரவாகப் பேசினால், அது ஒருபோதும் பயனளிக்காது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இது போன்ற அவலங்கள் நடக்கும்போது ஊடகங்கள் பெரிதாகக் காட்டுகின்றன" என்றார்.

உயிரிழப்பு!
உயிரிழப்பு!
சித்திரிப்புப் படம்

இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், கள்ளச்சாராய விற்பனை கும்பலைக் கண்டறிவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.  தமிழகத்திலும் மதுவிலக்கு கோரிக்கை நீண்ட நாள்களாக எழுந்துவருகிறது. "அரசு மதுவிலக்கை அமல்படுத்தும்போது கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் தலையீடு அதிகரிக்காத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே தெளிவான திட்டமிடல்தான் பிரச்னைகள்  ஏற்படாமல் தடுக்க வழிசெய்யும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.