Published:Updated:

ரஜினியின் அரசியல் வருகையைக் கொண்டாடும் பா.ஜ.க... காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை பா.ஜ.க-வினர் உள்ளிட்ட வலதுசாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதன் பின்னணி அரசியல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசியல் கட்சியை ஜனவரியில் ஆரம்பிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பை பா.ஜ.க-வினர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தனையாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ரஜினியின் அறிவிப்பு, அவரின் அரசியல் நிலைப்பாடு ஆகியவை குறித்து தி.மு.க-வினர், இடதுசாரிகள் உள்ளிட்டோர் விமர்சனங்களை வெளியிட்டுவருகிறார்கள். சமூக வலைதளங்களில் ரஜினியின் அறிவிப்பை விமர்சிக்கும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

ரஜினி
ரஜினி

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம். ``நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை ஆதரிப்பவர்கள் யார், எதிர்ப்பவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். ஆதரிப்பவர்கள் அனைவரும் பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தங்கள் கட்சிக்குத் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமும் வசீகரமும் உள்ள ஒருவர் தேவை என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே, நடிகர் ரஜினியின் வருகைக்காக நீண்டகாலம் அவர்கள் காத்திருந்தனர். இப்போது, அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி சொல்லிவிட்டார்.

தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகள் பெரும் செல்வாக்குடன் இருக்கும் மாநிலத்தில், நடிகர் ரஜினியை இன்னொரு பெரிய சக்தியாகக் கொண்டுவந்து நிறுத்துவது பா.ஜ.க-வின் நோக்கம். தமிழ்நாட்டின் அரசியல் களத்தை பன்முனைக் களமாக மாற்றுவதற்கு ரஜினியைவைத்து முயலலாம் என்று பா.ஜ.க பார்க்கிறது. மாநில உரிமைகளைப் பேசக்கூடிய, அத்தகைய சித்தாந்தங்களைக் கொண்டிருக்கிற மாநிலக் கட்சிகளைச் சிதைத்துவிட வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கம். அதற்குத் தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிற ரஜினி தனக்கு ஏற்றவராக இருப்பார் என்று பா.ஜ.க கருதுகிறது.

காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அயோத்தி விவகாரம் எனப் பல விவகாரங்களில் பா.ஜ.க-வை ஆதரிப்பவராகவே ரஜினி இருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சபரிமலை பிரச்னை என ஒவ்வொன்றிலும் பா.ஜ.க-வின் இன்னொரு முகமாகத்தான் ரஜினி பேசிவந்திருக்கிறார். மற்றபடி, வேறு மாற்றுக் கருத்து எதையும் அவர் சொல்லவில்லை. ஆன்மிக அரசியல் என்று அவர் சொல்வதெல்லாம் பா.ஜ.க-வின் மதவாத அரசியலைத்தான். எனவேதான், பா.ஜ.க-வினர் அவரை ஆதரிக்கிறார்கள். கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அவரின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் அவர்கள் கொண்டாடுவதற்கு இதெல்லாம்தான் காரணம்” என்றார் வன்னி அரசு.

வன்னியரசு
வன்னியரசு

``ஒரே கொள்கை கொண்ட ரஜினியின் வருகையால், பா.ஜ.க-வின் வாக்குவங்கிதானே பாதிக்கும்... பிறகு எதற்காக அவர்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள்?’’ என்ற கேள்வியை வன்னி அரசுவிடம் வைத்தபோது, ``தேர்தல் வெற்றி, தோல்வி பற்றி பா.ஜ.க-வுக்குக் கவலையில்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் அஜெண்டாவைச் செயல்படுத்துகிற ஒருவர் அவர்களுக்குத் தேவை. அந்த நபரைக் கையில் வைத்துக்கொண்டு அவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலை நிகழ்த்துவார்கள். அ.தி.மு.க-வே அதற்கு உதாரணம். அ.தி.மு.க என்பது தனியான ஓர் அரசியல் இயக்கம். அதைவைத்து பா.ஜ.க தன் அரசியல் நோக்கங்களைச் செயல்படுத்தியது. பீகாரில், சமூகநீதியைப் பேசும் ஒரு கட்சியின் தலைவரான நிதிஷ் குமாரைவைத்து, தங்களின் அரசியலை பா.ஜ.க-வினர் நடத்தினார்கள். முடிந்தால் நேரடியாகச் செயல்படுத்துவது, முடியாத இடங்களில் தங்களுக்கு வசப்படுகிற நபர்களைவைத்து செயல்களை நிகழ்த்துவது என்பதுதான் பா.ஜ.க-வின் நடைமுறையாக இருக்கிறது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தால், அது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களின் அஜெண்டா தோல்வியடைக் கூடாது என்பதில்தான் அவர்கள் அக்கறை காட்டுவார்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது பற்றி மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கரிடம் பேசினோம். ``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பா.ஜ.க தலைவர்கள் மேடையில் முழங்கலாம். ஆனால், யதார்த்தத்தில் தமிழகத்தில் ஒருபோதும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. இது அவர்களுக்கே தெரியும். எனவே, நடிகர் ரஜினியைப் போன்ற ஒரு பிரபலத்தைவைத்து தமிழக அரசியல் களத்தில் அடிப்படையான ஒரு சிறிய மாற்றத்தை உண்டாக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மிக வலுவான கட்சிகள். பெரும்பாலான சட்டமன்றத் தேர்தல்களில் இந்த இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்த வாக்குகளில் 80 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு வலுவான வாக்குவங்கியைக் கொண்டிருக்கும் நிலையில், அதில் ஓர் உடைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக ரஜினியை இறக்குகிறார்கள்.

விஜயசங்கர்
விஜயசங்கர்

`எந்த அணியின் வாக்குகளை அவர் உடைப்பார்...’ என்பது முக்கியமான கேள்வி. தி.மு.க-வின் வாக்குவங்கி அப்படியே இருக்கிறது. தி.மு.க தலைமையிலான அணி தற்போது அப்படியே இருக்கிறது. அதனால், தி.மு.க அணியின் வாக்குவங்கிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தி.மு.க மற்றும் அதன் அணியின் வாக்குகள் ஒரு சதவிகிதம்கூட ரஜினிக்குப் போகாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க வாக்குவங்கியில் லேசான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க வாக்குகளில் கொஞ்சம் ரஜினிக்குப் போகலாம்.

மற்றபடி, தமிழகத்தின் ஒட்டுமொத்தமான வாக்குவங்கியில் பெரிய அளவுக்கு உடைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், மிகப்பெரிய ஃபோர்ஸாக இருக்கிற ஒருவரால்தான் முடியும். ரஜினிக்கு `சூப்பர் ஸ்டார்’ என்ற இமேஜ் இருக்கிறது என்றாலும், தமிழகத்தின் வாக்குவங்கியை உடைக்கும் அளவுக்கு ஒன்றும் பெரிய ஃபோர்ஸ் கிடையாது. அவர் என்ன வசனம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், கள அரசியல் என்பது வேறு. வாக்குச்சாவடி அளவிலான செயல்பாடுகள்தான் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும். அதில் தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் அடித்துக்கொள்ள தமிழகத்தில் ஆளில்லை.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் ஆட்சி... என்.டி.ஆர் பாணியில் சாதிப்பாரா ரஜினி?

இந்த இரு கட்சிகளுக்கும் வாக்குச்சாவடிகள் அளவில் வலுவான கட்டமைப்புகள் உண்டு. அப்படியான ஒரு கட்டமைப்பை ரஜினியால் நான்கு மாதங்களில் ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்றால், வாக்குசாவடிகளுக்கு எத்தனை பேரைக் கொண்டுபோகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ரசிகர் மன்றங்களைவைத்தெல்லாம் இதைச் செய்ய முடியாது

ரஜினி
ரஜினி

தமிழகத்தின் தேர்தல் அரசியல் களம் உடைக்க முடியாத ஒரு கோட்டையாக இருக்கிறது. அதில் ரஜினியைவைத்து உடைப்பை ஏற்படுத்த முடியாது. அரசியல்ரீதியாகவும், கொள்கைரீதியாகவும், அமைப்புரீதியாகவும் அவருக்கு அந்த அளவுக்கு பலம் கிடையாது. திராவிட இயக்கத்தால் நூறு ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்துக்கு அடிப்படையாக இட ஒதுக்கீடு என்பது இருக்கிறது. அதை உடைக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும். ரஜினியின் அரசியல் வருகையால் குறிப்பிட முடியாதபடி சிறிய அளவிலான பலன்கள் ஏதாவது பா.ஜ.க-வுக்குக் கிடைக்கலாம்” என்றார் விஜயசங்கர்.

விவசாயிகள் போராட்டம்; தமிழகத்திலும் தொடங்கியது - எடப்பாடி அரசுக்குப் புதிய நெருக்கடி!

ரஜினியின் அரசியல் வருகை குறித்த பா.ஜ.க-வினரின் மகிழ்ச்சி மற்றும் எதிர்த்தரப்பினரின் விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் குமரகுருவிடம் பேசினோம்.

``நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இவரைப் போன்ற ஓர் ஆன்மிக நம்பிக்கையுள்ள, நேர்மையான மனிதர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும். இவரைப் போன்ற நல்லவர்கள், ஆன்மிகவாதிகள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

குமரகுரு
குமரகுரு

`ரஜினியை பா.ஜ.க இயக்குகிறது’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் அப்படித்தான் விமர்சிப்பார்கள். எங்களுக்கும் ரஜினிக்கும் கொள்கைரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு மதத்தை ஆதரிப்பது, சிறுபான்மையை தாஜா செய்வது என்பதெல்லாம் எங்கள் அரசியலில் இல்லை. ரஜினியும் அப்படித்தான். சாதி, மதம் இல்லாத ஓர் அரசியலை முன்னெடுக்கப்போவதாகத்தான் அவர் சொல்கிறார். அவற்றுடன் நாங்கள் மொழியைக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்கிறோம்.

அவர் அரசியலுக்கு வருவதால், தேர்தலில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க மீது வெறுப்பில் இருக்கிற வாக்காளர்களும், பொதுப்படையான வாக்காளர்களும் ரஜினிக்கு வாக்களிக்கலாம். எங்களுக்கான வாக்குகள் என்றைக்கும் எங்களிடம்தான் இருக்கும். ரஜினியின் வருகை தமிழகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு