Published:Updated:

பாஜக-வின் சரித்திர வெற்றி... குஜராத் மக்களின் தீர்ப்பு சொல்வது என்ன?!

பிரதமர் மோடி

குஜராத்தில் பா.ஜ.க பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர்கொள்ள பா.ஜ.க-வினரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

பாஜக-வின் சரித்திர வெற்றி... குஜராத் மக்களின் தீர்ப்பு சொல்வது என்ன?!

குஜராத்தில் பா.ஜ.க பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர்கொள்ள பா.ஜ.க-வினரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடி

குஜராத் சட்டமன்றத்துக்கான 182 தொகுதிகளில் 156 தொகுதிகளைப் பிடித்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. அங்கு, தொடர்ச்சியாக 7-வது முறையாக பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை இதற்கு முன்பு எந்தவொரு கட்சியும் அங்கு பெற்றதில்லை. 1984-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில், 149 இடங்களில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

மோடி
மோடி

தற்போது பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றியால், வரக்கூடிய ஐந்து ஆண்டுகளையும் கணக்கிட்டால், குஜராத்தில் 32 ஆண்டுகளுக்கு பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெறும். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சி 34 ஆண்டுகள் நடைபெற்றது. குஜராத்தில் அத்தகைய சாதனையை பா.ஜ.க நெருங்குகிறது.

அதேபோல, பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. 2017-ல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 49 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க., இந்த முறை 53 சதவிகிதம் பெற்றிருக்கிறது. கடந்த 27 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு ‘அளப்பரிய சாதனை’களைப் புரிந்திருப்பதால், இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அப்படிச் சாதனைகள் புரிந்திருந்தால், தேர்தல் பிரசாரத்தில் அந்தச் சாதனைகளையெல்லாம் பட்டியலிட்டு பா.ஜ.க தலைவர்கள் வாக்கு கேட்டிருப்பார்கள்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடியே, முந்தைய தேர்தலில் பிரசாரம் செய்ததைப்போல, பா.ஜ.க அரசின் சாதனைகள் என்று பெரிதாக எதையும் எடுத்துவைக்கவில்லை. ‘குஜராத்தில் நகர்ப்புற நக்சல்கள் ஊடுருவியிருக்கிறார்கள்‘, ‘காங்கிரஸ் கட்சியினரை என்னை மோசமாகப் பேசுகிறார்கள். எனவே, காங்கிரஸுக்குத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்’ என்கிற அளவுக்குத்தான் மோடியின் பிரசாரம் இருந்தது. அதேநேரத்தில், குஜராத் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பது தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன.

குஜராத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான உணர்வு மக்கள் மத்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன. அங்கு, பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. மகாராஷ்டிரா, குஜராத் பார் - தபி - நர்மதா ஆறு இணைப்புத் திட்டம் 2022 - 2023 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, தெற்கு குஜராத்தில் பழங்குடியினர் பகுதிகளில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால், மோடி, ராகுல் காந்தி
அரவிந்த் கெஜ்ரிவால், மோடி, ராகுல் காந்தி

விலைவாசி உயர்வு, வேலையின்மைப் பிரச்னை, கொரோனா நேரத்தில் கிளம்பிய பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னை என பா.ஜ.க அரசு பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. சமீபகாலத்தில், பணி நிரந்தரம் உட்பட பல முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை மாநில அரசு ஊழியர்கள் நடத்தினார்கள்.

இப்படியான சூழலில், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணம் பிரதமர் மோடிதான் என்று பா.ஜ.க வட்டாரத்தில் கூறுகிறார்கள். சட்டமன்றத் தேர்தலையொட்டி, குஜராத் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஏராளமான பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி, ஏராளமான ‘ரோடு ஷோ’க்களையும் நடத்தினார். ஒரு குஜராத்தியான மோடி, இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்... உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்துகொண்டிருக்கிறார் என்று மோடியை முன்வைத்தே பா.ஜ.க-வினரின் பிரசாரம் இருந்தது. இத்தகைய பிரசாரம் மக்களைக் கவர்ந்தது.

சாலையில் நடந்துவந்த மோடி
சாலையில் நடந்துவந்த மோடி

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மீறுகிறார் என்று மோடிமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல மணி நேரம் காரில் நின்றபடியே மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார். வாக்குச்சாவடியிலிருந்து தொலைதூரத்தில் தன் காரை நிறுத்திவிட்டு சாலையில் நடந்துசென்று வாக்களித்த பிரதமர் மோடி, வாக்களித்த பிறகு தன் சகோதரர் வீட்டுக்கு சுமார் இரண்டு மணி நேரம் நடந்தே சென்றார்.

அது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், பணபலமும் அதிகாரமும் பா.ஜ.க-வின் மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள். பிரதமரின் இந்தச் செயல்பாடுகள் வாக்குகளை அள்ளுவதற்கு உதவியிருக்கின்றன.

மோடி
மோடி

எத்தனை விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ஆறு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துவரும் கட்சிக்குச் சலிக்காமல் வாக்களித்திருக்கிறார்கள் குஜராத் மக்கள். பா.ஜ.க-வின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று மூன்று பேரைச் சொல்லாம். குஜராத் முழுக்க ஓடி ஓடி உழைத்த நரேந்திர மோடி... குஜராத் பக்கம் எட்டிக்கூட பார்க்காத காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி... இந்துத்துவா ஆதரவு கருத்துக்களைப் பேசிக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை அபகரித்து பா.ஜ.க-வின் வெற்றிக்கு உதவிய அரவிந்த் கெஜ்ரிவால்!