Published:Updated:

இடிந்து விழும் வீடுகள்; அச்சத்தில் மக்கள் - குடிசை மாற்று வாரியம் செய்யத் தவறுவது என்ன?!

குடிசை மாற்று வாரியம்
News
குடிசை மாற்று வாரியம்

``திருவொற்றியூர் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு முக்கியக் காரணம் அந்தக் கட்டடம் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மட்டும்தான்" என்கிறார்கள் கட்டுமானத்துறை நிபுணர்கள்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கடந்த 1970-ம் ஆண்டு, அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம். சென்னையிலுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கொண்ட குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதுதான் இந்த வாரியத்தின் முதன்மையான நோக்கம். சென்னையில் மட்டும் செயல்பட்டுவந்த இந்தத் திட்டம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள பெருநகரங்கள் தொடங்கி பேரூராட்சி வரை என்று அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள்
குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள்

வெறும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கச் செய்வதும்தான். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர், `தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புளியந்தோப்பில் கேசவன் பிள்ளை பூங்கா பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாகக் கட்டப்பட்ட குடியிருப்பு சிதிலமடைந்த காரணத்தால், அதை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு ரூ.112.26 கோடி, 2020-ம் ஆண்டு ரூ.139.13 கோடி மதிப்பில் மொத்தம் 1,056 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கித் தரப்பட்டன. அங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள், அந்தக் குடியிருப்புக் கட்டடங்கள் விரிசல் அடைந்தும், தொட்டாலே உதிர்த்து விழும் நிலையிலும் உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஐ.ஐ.டி நிபுணர்குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், தரமற்ற வகையில் குடியிருப்பு கட்டப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்தக் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்கவும் அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.

இடிந்து விழுந்த குடியிருப்பு
இடிந்து விழுந்த குடியிருப்பு

சென்னை திருவொற்றியூர் அருகிலுள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் நான்கு பிளாக்குகளாக மொத்தம் 336 வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகள் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்வை. இதில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தில் ஏற்கெனவே இருந்த விரிசல் திடீரெனப் பெரிதானது. அங்கு குடியிருந்த பலரும் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், மற்றவர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்தில், அடிக்கிவைத்த சீட்டுக்கட்டுபோல மொத்தக் கட்டடமும் சரிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ``சமீபத்தில் நடத்திய ஆய்வில், சென்னையில் சுமார் 23,000 கட்டடங்கள் இடிக்கவேண்டிய சூழலில் இருக்கின்றன. இந்தக் கட்டடங்கள் அனைத்தும் 40 முதல் 50 வருடங்கள் பழைமையான கட்டடங்கள். இந்தக் கட்டடங்கள் விரைவில் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும்" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடிசை மாற்று வாரிய கட்டடங்களின் உறுதித்தன்மை தொடர்பாக அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ராமபிரபுவிடம் பேசினோம். ``ஒரு குடியிருப்புக் கட்டடம் குறைந்தபட்சம் 50 ஆண்டுக்காவாது வலுவாக இருக்க வேண்டும். தரமான பொருள்களைக்கொண்டுதான் கட்டடம் கட்டப்படுகிறதா என்பதை அப்போதே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதைவிட மிக முக்கியமான ஒன்று, கட்டடத்தைப் பராமரிப்பது. ஒரு கட்டடம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முறையாக பெயின்ட் அடிக்கப்பட்டு, சரியாகப் பராமரிக்கப்படவேண்டியது அவசியம். பராமரிப்பு சரியாக இருந்தால்தான் அந்தக் கட்டடம் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். ஆனால், பெரும்பாலான குடிசை மாற்றுக் குடியிருப்புக் கட்டடங்கள் முறையாகப் பரராமரிக்கப்படுவதே கிடையாது" என்றார்.

ராமபிரபு
ராமபிரபு

தொடர்ந்து பேசியவர், ``முன்பெல்லாம், கட்டடம் பெரும்பாலும் செங்கல் கொண்டு கட்டப்படும். தற்போது பெரும்பாலான கட்டடங்கள் சுவர் மைவான் டெக்னலாஜி மூலம்தான் கட்டப்படுகின்றன. தற்போது வரும் டெண்டரில்கூட மைவான் டெக்னலாஜி சுவர்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். கே.பி.பார்க்கில் கட்டப்பட்டதும் மைவான் டெக்னலாஜி சுவர்கள்தான். அங்கு சுவர்களில் பிரச்னை இல்லை. சுவரில் செய்யப்பட்ட பிளாஸ்டிங்தான் சரியாக இல்லை. திருவொற்றியூர் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு முக்கியக் காரணம் அந்த கட்டடம் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மட்டும்தான். அனைத்துக் குடியிருப்புக் கட்டடங்களையும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதன் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு கட்டடங்களுக்குப் பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு தரமாகக் கட்டினாலும், அந்தக் கட்டடங்கள் வலுவிழந்து போகும் என்பதுதான் உண்மை. அதேநேரத்தில், கட்டடம் கட்டும்போதே, தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் அப்போதே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.