Published:Updated:

“கூட்டணிக் கணக்கு... குழப்பத்தில் தலைமை” - என்ன நடந்தது அ.தி.மு.க தலைமைக் கழகக் கூட்டத்தில்?

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அமித் ஷா சந்திப்பில் கூட்டணி குறித்துப் பேசப்பட்டால் மட்டுமே கூட்டணிக் கணக்கு அ.தி.மு.க-வில் இறுதி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம் உப்புசப்பில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. `பா.ஜ.க-வின் பிடி தெரியாமல் நாம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்'' என்று அ.தி.மு.க தலைமை, கட்சி நிர்வாகிகளிடம் உத்தரவிட்டிருக்கிறது.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 20-ம் தேதி மாலை நடைபெற்றது. அமித் ஷா வருகைக்கு முதல் நாள் இந்தக் கூட்டம் நடந்ததால், பல எதிர்பார்ப்புகள் இந்தக் கூட்டத்துக்கு இருந்தது. இதனால் தலைமைக் கழகத்தில் மதியம் முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் இறுதியாக வந்த பிறகு கூட்டம் தொடங்கியது. வரவேற்புரையை வழக்கம்போல் முனுசாமி பேசி அமர்ந்தார். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பேசிய பேச்சுகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே இருந்திருக்கிறது.

``கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவியதால், அதேநிலை வரும் தேர்தலிலும் வரும் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாம்தான் உற்சாகத்துடனும், உள்ளார்ந்த அர்ப்பணிப்புடனும் தேர்தல் வேலையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வேலையை இப்போதே தொடங்கிவிடுங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் நமது அரசு செய்திருக்கும் திட்டங்களை முதலில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். இந்தக் கூட்டம், கூட்டணி குறித்துப் பேசுவதற்கெல்லாம் இல்லை. தேர்தலுக்கு முன்பாக நமது கட்சியை வலுப்படுத்தும் பணிகள் குறித்தே இந்தக் கூட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்குள் பல கோஷ்டிப் பூசல்கள் உருவாகியுள்ளன. அவை தலைமை வரை புகாராக வந்திருப்பது கவலையாக இருக்கிறது. அவற்றை முதலில் நாம் களைய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலுள்ள பிரச்னைகளை அந்தந்த மண்டலப் பொறுப்பாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்த்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்” என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். ஆனால், அவர் பேசியதற்குக் கூட்டத்திலிருந்த நிர்வாகிகள் மத்தியில் ரியாக்‌ஷன் குறைவாகவே இருந்திருக்கிறது.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

கூட்டத்தில் வேறு என்ன பேசப்பட்டது என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டபோது, ``கூட்டத்தில் முழுக்க தேர்தல் பணிகள் பற்றி மட்டுமே பேசப்பட்டன. வேறு எந்த சர்ச்சைகளுக்கும் இடமளிக்கவில்லை. இதனால் நிர்வாகிகளைப் பேசவே அழைக்கவில்லை. ஏற்கெனவே இளைஞர் பாசறை மூலம் வாக்குச்சாவடிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, அடுத்ததாக பெண்களைவைத்து வாக்குச்சாவடிக் குழுக்கள் அமைப்பதற்கான அறிவிப்பும் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். வாக்குச்சாவடிக் குழுக்களைப் பல அணிகளாகப் பயன்படுத்தும் எண்ணம் கட்சித் தலைமைக்கு இருக்கிறது. அதேபோல், இனி மாநிலத் தலைமையிலிருந்தே அடுத்தடுத்த பணிகள் குறித்து அறிவிப்புகள் வரிசையாக வரும். அவற்றை முறையாகச் செயல்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அது குறித்து தக்க நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும்” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

பா.ஜ.க - அ.தி.மு.க இடையே கூட்டணி தொடருமா, இல்லையா? என்கிற கேள்வி அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் இன்னும் சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர் கட்சி நிர்வாகிகள். ஆனால், அது குறித்து எதுவும் பேசப்படாமல் போனது நிர்வாகிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள் இது குறித்து வேறுவிதமாகச் சொல்கிறார்கள். ``அமித் ஷா சென்னை வந்தவுடன் முதல்வரும், துணை முதல்வரும் அவரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள். அப்போது கூட்டணி குறித்தும் பேசப்படும். இன்றைய நிலையில் அ.தி.மு.க தரப்பு பா.ஜ.க-வைக் கழற்றிவிடும் போக்கில் இல்லை. ஆனால், அவர்கள் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி, ஐம்பது தொகுதி என்றெல்லாம் கணக்குப் போட்டால் அது சிக்கலாகிவிடும். எங்கள் கூட்டணியில் இப்போதும் பா.ம.க இருக்கிறது என்று நம்புகிறோம்.

அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்
அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

அவர்களுக்கும் கணிசமான தொகுதியைத் தர வேண்டும், தே.மு.தி.க கூட்டணிக்குள் வந்தால் அவர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். இதையெல்லாம் மனதில்வைத்தே சீட் பங்கீடு இருக்கும். எனவே, பா.ஜ.க தரப்பிடம் முதலில் கூட்டணியை முடிவு செய்வது மட்டுமே தலைமையின் தற்போதைய முடிவாக இருக்கும். அமித் ஷாவுடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் மற்ற நிர்வாகிகளின் காதுகளுக்கு வரும்'' என்கிறார்கள்.

அமித் ஷா வியூகம்; கோடிகளில் புதிய திட்டங்கள்... பா.ஜ.க-வின் பீகார் `டெக்னிக்' தமிழகத்தில் எடுபடுமா?
அமித்ஷா -எடப்பாடி
அமித்ஷா -எடப்பாடி

கூட்டணி குறித்து நிர்வாகிகளிடம் இப்போதே கருத்துக் கூறி, தேவையில்லாத சிக்கல்களைச் எதற்காகச் சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். கூட்டணி குறித்து பன்னீரும், தானும் முதலில் முடிவெடுத்துவிட்டு, அதன் பிறகு நிர்வாகிகளிடம் பேசலாம் என்று நினைக்கிறார் எடப்பாடி. இதன் காரணமாகவே நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தல் பணிகளைத் தாண்டி வேறு எந்த கருத்துக்குள்ளும் போகாமல் நாசுக்காக நழுவிக்கொண்டுவிட்டார். எடப்பாடி சொன்ன கருத்தை வழிமொழியும் வகையில் பன்னீரும் பேசிவிட்டு அமைதியாகிவிட்டார். ''அமித் ஷாவுடனான சந்திப்பில் பா.ஜ.க கூட்டணி குறித்துப் பேசப்பட்டால் மட்டுமே கூட்டணிக் கணக்கு அ.தி.மு..க வில் இறுதி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அடுத்த கட்டுரைக்கு