Published:Updated:

கொரோனா: 2,000 மினி கிளினிக்... டெங்கு எச்சரிக்கை! - அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதல்வர்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் பழனிசாமி, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் படுக்கைகளை அதிகரிப்பது முதல், புதிய மருத்துவ ஊழியர்கள் நியமிப்பது வரை பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் அதிகாரிகளோடு தமிழகத்தில் நிலவும் இன்றைய சூழல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதல்வர், அதிகாரிகளும் மக்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினார். அவை...

எடப்பாடி பழனிசாமி - கொரோனா ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி - கொரோனா ஆலோசனை
  • தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் 85,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அதிக பரிசோதனை செய்வதின் மூலம் நோய்ப் பரவல் தடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. சென்னையில் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டதன் காரணமாகத்தான், நோய்ப் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது, நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருக்கிறது.

  • தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  • அரசு உயரதிகாரிகளும், மருத்துவர்களும் அரசுக்குப் பக்கபலமாக இருந்து, அனைத்துத் துறையினரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதன் விளைவாக, தமிழகத்தில் நோய்ப் பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

  • தமிழகத்தில் தற்போது எல்லாக் கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்பட்டுவிட்டன. எனவே, அனைத்துத் துறையினரும் கவனமாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளுமே கவனமாகச் செயல்பட வேண்டும். மக்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதால் நோய் எவ்வாறு பரவும் என்றே கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

  • இ-பாஸ் மற்றும் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், யார் எங்கு செல்கிறார்கள் என்று தெரியும். ஆனால் தற்போது முன்பிருந்த நிலை இல்லை. எனவே, அனைத்து அதிகாரிகளும், நோய் பரவுவதைக் கட்டுப்பாட்டில் வைத்து தொற்றைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

  • முன்பிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்து வருகின்றன. அதுபோலவே இப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்க வேண்டும். அந்தப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பகுதிகளிலிருந்து மற்ற பகுதிக்கு நோய் பரவாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொரோனா
கொரோனா
  • சுகாதாரத்துறையில் ஏற்கெனவே காலியாக இருந்த இடங்களுக்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்பதற்குத் தயாராக உள்ளது.

  • மக்கள் பயன்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 2,000 மினி கிளினிக் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள சூழல் காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் சிகிச்சையளிக்கத் தயங்குவதாக அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், இந்த மினி கிளினிக்குகளுக்குச் சென்று மக்கள் பயன்பெறும் வகையில் இவை செயல்படவுள்ளன.

  • இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் மற்றும் அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் இந்த கிளினிக் அமையும்.

  • இன்றைய நிலையில் முகக்கவசம் என்பது மிக முக்கியமான ஒன்று. பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவேண்டும். இதற்காக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முடிந்த அளவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும்.

  • ஊரடங்கு இல்லாத சூழலில் கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றுவருகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் கூட்டம் கூடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கடற்கரையில் மக்கள் கூடாமல் காவல்துறை கண்காணிக்க வேண்டும். நிலவும் நிலைமையை எடுத்துக் கூறி கடற்கரைக்கு வருபவர்களைத் திரும்பி அனுப்ப வேண்டும்.

  • தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் யாரேனும் கொரோனா தொற்றின் காரணமாகச் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை அனுமதித்து உடனடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

  • மழைக்காலம் தொடங்கவிருக்கிறது. கொரோனா மட்டுமல்ல, டெங்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மழை பெய்யும்போது தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். பொதுக்கழிப்பறைகளைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • தற்போதைய நிலையில் காய்ச்சல், கொரோனா தொற்று உள்ளவர்களை எளிதில் கண்டறிய உதவுகிறது. டெங்கும் பரவிவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும். டெங்கு பரவாமல் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

  • தற்போதைய சூழலில் நோய்ப் பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் படுக்கை வசதிகளையும், கொரோனா கண்காணிப்பு மையங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • அனைத்துத் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. அந்தத் துறைசார் அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்குச் சென்று, அங்கு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து, ``தமிழகத்தில் ஓர் உயிரைக்கூட இழப்பதற்கு அரசு அனுமதிக்காது. ஒவ்வோர் உயிரும் அரசுக்கு முக்கியம். அதற்காகத்தான் அரசு இன்றுவரை செயல்பட்டுவருகிறது. அரசுக்கு எவ்வளவு செலவானாலும், எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் பரவாயில்லை. மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அரசின் கடமை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அரசாங்கம் எவ்வளவுதான் முயன்றாலும், என்ன நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. அரசு வலியுறுத்தும் நடைமுறைகளை முழுமையாக மக்கள் பின்பற்ற வேண்டும்., அப்போதுதான் விரைவாக இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்” என்றார் முதல்வர் பழனிசாமி!

அடுத்த கட்டுரைக்கு