Published:Updated:

நாகாலாந்து சம்பவம்: `எங்களை யாரும் நிற்கச் சொல்லவில்லை' -காயமடைந்தவர்... பொய் சொல்கிறாரா அமித் ஷா?!

நாகாலாந்து சம்பவம்
News
நாகாலாந்து சம்பவம்

அமித் ஷா கொடுத்த விளக்கம்... காயமடைந்தவரின் வாக்குமூலம்... கூட்டணிக் கட்சியின் கண்டனம்... நாகாலாந்து சம்பவத்தில்அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!

நாட்டையே உலுக்கிய நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகாலாந்து சம்பவத்தில் என்ன நடந்தது என்று நாடாளுமன்றத்தில் விவரித்தார். அவர் சொன்ன சம்பவங்களும், களத்திலிருந்தவர்கள் சொல்லும் சம்பவங்களும் வெவ்வேறாக இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்திருக்கின்றன.

அமித் ஷா கொடுத்த விளக்கம்!

நாகாலாந்து சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய காரணத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிசம்பர் 6-ம் தேதி அன்று இது குறித்து விளக்கமளித்தார் அமித் ஷா. சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து அமித் ஷா அளித்த விளக்கத்தில், ``கடந்த டிசம்பர் 4-ம் தேதி, நாகாலாந்தின் மோன் மாவட்டத்திலிருக்கும் ஒடிங் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, பயங்கரவாதிகளை எதிர்பார்த்து ஒடிங்-டிரு சாலையில் காத்திருந்தனர் ராணுவ வீரர்கள். அதே சமயத்தில், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களின் வாகனமும் வந்திருக்கிறது. ராணுவ வீரர்கள், அந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் செல்லவே, அது பயங்கரவாதிகளின் வாகனம் என்று தவறுதலாக நினைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் ஆறு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

தவறு நடந்ததை உணர்ந்து, காயமடைந்த இருவரையும் பாதுகாப்புப் படையினர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில், கிராம மக்கள் பலரும் ராணுவ வீரர்களைச் சுற்றி வளைக்க, நிலைமை மோசமாகியிருக்கிறது. பொதுமக்கள் தாக்குதல் நடத்த, ராணுவ வீரர்கள் தற்காப்புக்காக மீண்டும் பொதுமக்களை நோக்கிச் சுட்டிருக்கின்றனர். இதில் 7 பொதுமக்களும், ஒரு ராணுவ வீரரும் பலியாகியிருக்கின்றனர். இதையடுத்து டிசம்பர் 5-ம் தேதி, பொதுமக்களில் சுமார் 250 பேர் ராணுவ முகாம்களைத் தாக்கியிருக்கின்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி'' என்று பேசியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் சொல்வது என்ன?

அமித் ஷா அளித்த விளக்கமும், களத்திலிருந்து வரும் தகவல்களும் முரணாக இருக்கின்றன. ஒடிங் கிராம மக்கள் சிலர், ``துப்பாக்கிச்சூடு நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்தோம். அப்போது ராணுவத்தினர், இறந்தவர்களின் உடல்களை தார்பாலின் கொண்டு மறைத்து, அவர்களின் வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதை மீட்கச் சென்றபோதுதான் எங்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்'' என்றிருக்கிறார்கள்.

நாகாலாந்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும் கிட்டத்தட்ட இதே தகவல்கள்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. ``சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை. காவல்துறையின் ஒத்துழைப்பை ராணுவத்தினர் கேட்கவும் இல்லை. எனவே, குடிமக்களைக் கொல்வதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்திருக்கிறது'' என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ``பாதுகாப்புப் படையினர் இறந்தவர்களின் உடலை ராணுவ முகாமுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டதாலேயே பொது மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது'' என்று காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

நாகாலாந்து தாக்குதல்
நாகாலாந்து தாக்குதல்

பா.ஜ.க தலைவரின் குற்றச்சாட்டு!

மோன் மாவட்டத்தின் பா.ஜ.க தலைவர் கோன்யக் சொல்லியிருக்கும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. ``ஆறு பேர் இறந்த செய்தி கேட்டு, அந்த இடத்துக்குச் சென்றேன். காரில் கட்சிக் கொடி இருந்தும், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். நான் அந்த இடத்துக்குச் சென்றபோது, ஒரு டிரக் முழுவதும் ரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்தது. அதில், உயிரிழந்தவர்களின் உடைகளை நீக்கிவிட்டு, அவர்களுக்குக் காக்கி உடையை அணிவித்துக் கொண்டிருந்தனர் ராணுவத்தினர். அதை நேரில் பார்த்த காரணத்தால்தான் எங்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர்'' என்றிருக்கிறார். அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல், ராணுவத்தினர் அதை மறைக்கவும் முயன்றதாக எழுந்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டுப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

ராணுவத்தினர் நடத்திய முதல் தாக்குதலில் உயிர்பிழைத்த இரண்டு பேரில் ஒருவரான ஷெய்வாங் (Sheiwang) ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், ``எங்கள் வாகனத்தை யாரும் நிறுத்தச் சொல்லி சிக்னல் தரவில்லை. அவர்கள் எங்களை நேரடியாகச் சுடத் தொடங்கிவிட்டனர். எவ்வளவு நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், சிறிது நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மதியம் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது இருட்டாகக்கூட இல்லை. இருந்தும், எங்களை நோக்கி அவர்கள் சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். நாங்கள் அனைவரும் வாகனத்துக்குக் கீழ்ப்பகுதியில் குனிந்துகொண்டோம். என் சகோதரர் உட்படச் சிலர் உயிரிழந்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. பின்னர், எங்கள் அனைவரையும் வேறொரு வாகனத்துக்கு (டிரக்) மாற்றினார்கள்'' என்றிருக்கிறார் ஷெய்வாங்.

பொய் சொல்கிறாரா அமித் ஷா?

அமித் ஷா விளக்கத்தில், `வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்றதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது' என்றிருக்கிறார். ஆனால், துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளானவர் `எங்களை யாரும் நிறுத்தச் சொல்லவேயில்லை' என்கிறார். இதையடுத்து `அமித் ஷா பொய் சொல்கிறாரா?' என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

அமித் ஷா, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்த அன்றே, `இது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை' என எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து, இது குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ``மக்களவையில், உள்துறை அமைச்சர் தவறான தகவல்களைச் சொல்கிறார். காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் சொல்வதும், அமைச்சர் சொல்வது வேறாக இருக்கிறது. ஏன் அப்பாவி பொதுமக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஏன் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார் என்ற கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை'' என்றார்.

மக்களவை  எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
மத்திய அரசு, லக்கிம்பூர் கேரிக்கு செல்லும்போதும் காங்கிரஸ் தலைவர்களைத் தடுத்து நிறுத்தியது. இப்போது நாகாலாந்திலும் மோன் மாவட்டத்துக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை மோசமடைந்து கொண்டேபோகிறது!
ஆதிர் ரஞ்சன் செளத்ரி

கண்டனம் தெரிவித்த கூட்டணிக் கட்சி!

மேகாலயாவில் பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் தேசிய மக்கள் கட்சி (NPP), அமித் ஷாவின் அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ``அமித் ஷா உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார். நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம். ஒடிங்-டிரு சாலை மிகவும் மோசமானதாக இருந்தது. 10 கி.மீ வேகத்துக்கு மேல் அந்தச் சாலையில் செல்லமுடியாது. எனவே, அந்த வாகனத்தில் வந்த தொழிலாளர்கள் யாரும் தப்பிச் செல்ல முயன்றிருக்க வாய்ப்பேயில்லை. அந்த காரின் முன்பகுதியிலுள்ள கண்ணாடியில் தோட்டாக்கள் துளைத்திருக்கின்றன. தப்பிச் சென்றவர்களை, எப்படி முன் பக்கம் நின்று சுட்டிருக்கமுடியும்?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறது தேசிய மக்கள் கட்சி.

நாகாலாந்து தாக்குதல்
நாகாலாந்து தாக்குதல்
``மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ராணுவமே, 14 அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம், சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் அளிக்க முடியாத கறை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்'' என்கிறார்கள் நாகாலாந்து சமூக ஆர்வலர்கள். நாட்டு மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருக்கிறது! மத்திய அரசு அதைச் செய்யுமா?