Published:Updated:

52 மணி நேர வீடியோ டேப்... ஸ்டிங் ஆபரேஷனுக்கு உதவிய திரிணாமுல் எம்.பி-`நாரதா' வழக்கில் நடந்தது என்ன?

நாரதா வழக்கு - Narada Case Timeline
நாரதா வழக்கு - Narada Case Timeline

52 மணி நேர வீடியோ டேப்... ஸ்டிங் ஆபரேஷனுக்கு நிதி அளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி... கைமாறிய ரூ.80 லட்சம்... சிக்கிய திரிணாமுல் காங்கிரஸின் 12 பெரும் புள்ளிகள் - `நாரதா' வழக்கில் என்னவெல்லாம் நடந்தன?

மம்தா ஹாட்ரிக் அடித்து மூன்றாவது முறையாக வங்கத்தைக் கைப்பற்றிய நிமிடம் முதலே, அங்கு பற்றிக்கொண்ட பரபரப்பு தற்போது வரை அடங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பா.ஜ.க-வினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக்கொண்டது தொடங்கி நேற்று திரிணாமுல் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டது வரை எல்லாமே பரபரப்புதான்!

நேற்றைய தினம், ஆளுநரின் ஒப்புதலோடு இரண்டு அமைச்சர்கள் உட்பட மூன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைக் கைதுசெய்தது சி.பி.ஐ. இதில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விஷயமறிந்த மம்தா சி.பி.ஐ அலுவலகத்துக்கு வந்து, ``என்னையும் கைதுசெய்யுங்கள்'' என்று ஆவேசம் காட்டினார். திரிணாமுல் தொண்டர்கள் சி.பி.ஐ அலுவலகத்துக்கு முன் குவிய, மேற்கு வங்கத்தில் பரபரப்போடு சேர்ந்து பதற்றமும் ஒட்டிக்கொண்டது.

சி.பி.ஐ அலுவலகத்தில் மம்தா
சி.பி.ஐ அலுவலகத்தில் மம்தா
ANI

2016-ம் ஆண்டு வெளியான நாரதா ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோ தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கில்தான், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்திருக்கிறது சி.பி.ஐ. நாரதா வழக்கில் என்ன நடந்தது... யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்... எவ்வளவு பணம் விளையாடியிருக்கிறது என்பதையெல்லாம் அலசுவதுதான் இந்தக் கட்டுரை!

நாரதா வழக்கில் நடந்தது என்ன?

2014-ம் ஆண்டில், மேத்யூ சாமுவேல் என்பவர் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகள் சிலருக்கு அறிமுகமாகிறார். தன்னைத் தொழிலதிபர் என்று அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட சாமுவேல், `இம்பெக்ஸ் சொல்யூஷன்ஸ்' என்றொரு நிறுவனத்தை மேற்கு வங்கத்தில் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார். இது குறித்து நேரில் பேச வேண்டுமென அப்பாயின்மென்ட் பெற்று திரிணாமுல் தலைவர்களை நேரில் சந்தித்திருக்கிறார் சாமுவேல்.

தன்னோடு ஏஞ்சல் ஆப்ரஹாம் என்பவரையும் அழைத்துச் சென்று மாநில அமைச்சர்கள், எம்.பி-க்கள் உள்ளிட்ட திரிணாமுல் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்திருக்கிறார் சாமுவேல். அனைவரிடமும் லஞ்சமாகப் பணம் கொடுத்து, இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு வேண்டிய சில விஷயங்களைச் செய்து தருமாறு கோரியிருக்கிறார். கட்டுக்கட்டாகப் பணத்தைப் பெற்றவர்கள், `வேண்டியதைச் செய்து தருகிறோம்' என்று ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு திரிணாமுல் எம்.பி-க்களான முகுல் ராய், சுவேந்து அதிகாரி, சுல்தான் அகமது, சவுகதா ராய், ககோலி கோஷ், அபாரூபா போதர், ப்ரசன் பானர்ஜி, அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, ஃபிர்ஹத் ஹக்கிம், மதன் மித்ரா, இக்பால் அகமது ஆகியோரிடம் பணம் கொடுத்திருக்கிறார் சாமுவேல். கொல்கத்தாவின் மேயராக இருந்த சோவன் சாட்டர்ஜியும், ஐ.பி.எஸ் அதிகாரி மிர்சாவும் பணம் பெற்றிருக்கின்றனர். திரிணாமுல் தலைவர் சங்கு டெப் பாண்டா, `எனக்கும் பங்கு வேண்டும்' எனக் கேட்க, அவருக்கும் பணம் தர ஒப்புக்கொண்டிருக்கிறார் சாமுவேல்.

மேத்யூ சாமுவேல்
மேத்யூ சாமுவேல்
டவிட்டர்
நாரதா வழக்கு: அமைச்சர்களைக் கைதுசெய்த சிபிஐ; `என்னையும் கைதுசெய்யுங்கள்!’ -ஆவேச மம்தா |நடந்தது என்ன?

திரிணாமுல் தலைவர்களும், ஐ.பி.எஸ் அதிகாரியும் பணம் பெற்றுக்கொண்டதையும், `வேண்டியதைச் செய்து தருகிறோம்' என்று சொன்னதையும் அவர்களுக்கே தெரியாமல் சாமுவேலும், ஏஞ்சல் ஆப்ரஹாமும் படம் பிடித்திருக்கின்றனர். மொத்தமாக 52 மணி நேரம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளை `தெஹல்கா' என்ற இந்திப் பத்திரிகை நிறுவனத்துக்காக ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தி படம் பிடித்திருக்கிறார்கள்.

2014 காலகட்டத்தில் `தெஹல்கா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்தான் சாமுவேல். தெஹல்காவிலிருந்து விலகி 2016 பிப்ரவரியில் `நாரதா நியூஸ்' என்கிற இணையதள ஊடகத்தைத் தொடங்கினார் சாமுவேல். தெஹல்காவுக்காக எடுத்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை நாரதா இணையதளத்தில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார் அவர். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்த வீடியோக்கள் வெளியானது, மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருந்தும், இம்பெக்ஸ் என்ற போலி நிறுவனத்துக்கு `வேண்டியதைச் செய்து தருகிறோம்' என்று சத்தியம் செய்து அமைச்சர்களும், எம்.பி-க்களும் பணம் பெற்றது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை. 2016 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸே வெற்றிவாகை சூடியது.

இந்த வீடியோ வெளியான பிறகு சில அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டுகளை வெளியிட்டார் மேத்யூ சாமுவேல். புலனாய்வு செய்து செய்திகள் வெளியிடும், தெஹல்கா பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான கே.டி.சிங் (Kanwar Deep Singh), திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி ஆவார். இவர்தான் தெஹல்கா நிறுவனத்துக்கு அதிக நிதி அளித்துவரும் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹல்கா நிறுவனத்துக்கு மட்டுமல்ல, திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனுக்கும் நிதிகளை வழங்கியது கே.டி.சிங்தான் என்ற அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டார் சாமுவேல்.

``இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கு நிதி அளித்த கே.டி.சிங்குக்கு, இது பற்றிய எல்லா தகவல்களும் தெரியும். முதலில் இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கு 25 லட்சம் செலவாகும் என கணித்திருந்தோம். ஆனால், செலவிட்டதோ 80 லட்சம் ரூபாய்'' என்று சாமுவேல் கூறினார். ஆனால், இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துவிட்டார் கே.டி.சிங்.
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

நாரதா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது எந்தக் கட்சியிலிருக்கிறார்கள்?

இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி சுல்தான் அகமது, 2017-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். முகுல் ராய் தற்போது பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவராகச் செயலாற்றிவருகிறார். இவர் பணம் பெற்றதுபோல வீடியோ எதுவும் இல்லை என்றாலும், ``ஒப்புகொண்ட பணத்தை எடுத்துக்கொண்டு என்னைக் கட்சி அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்'' என்று சொல்லும் வீடியோ காட்சிகள் இருக்கின்றன.

மேலும், இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட சுவேந்து அதிகாரியும் தற்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். சங்கு டெப் பாண்டா பா.ஜ.க-வில் இருக்கிறார். சோவன் சாட்டார்ஜி 2019-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர், 2021 தேர்தலில் சீட் வழங்கப்படாத காரணத்தால் பா.ஜ.க-விலிருந்தும் விலகிவிட்டார். மற்றவர்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸில் இயங்கிவருகின்றனர்.

சி.பி.ஐ விசாரணை!

இந்த வீடியோ டேப்கள் நாரதா இணையதளத்தில் வெளியான பிறகு, ``தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்பதற்காகச் சதித் திட்டம் தீட்டி போலி வீடியோக்களை சிலர் பரப்பிவருகிறார்கள்'' என்று திரிணாமுல் காங்கிரஸ், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தது. மேலும், சாமுவேல்மீது வழக்கு பதிவிட்டு கைது செய்தது மேற்கு வங்க காவல்துறை. இதையடுத்து இந்த வழக்கில் காவல்துறை விசாரிக்கத் தடை விதித்ததோடு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஏப்ரல் 16, 2017 அன்று, 12 திரிணாமுல் தலைவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது சி.பி.ஐ. அனைவர்மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது சி.பி.ஐ. அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தலையிட்டு விசாரணை நடத்தியது. அதன் பிறகு இந்த வழக்கில் பெரிதாக முன்னேற்றம் ஏதுமில்லை. இந்தநிலையில்தான், ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று, தற்போதைய மே.வங்க அமைச்சர்களான ஃபிரஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா, முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது சி.பி.ஐ.

இது குறித்து நாரதா ஊடக ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ``இது என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு சில கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார் அவர்...

சுவேந்து அதிகாரிக்கு ஐந்து லட்சம் ரூபாயும், முகுல் ராய்க்கு 15 லட்சம் ரூபாயும் பணம் கொடுத்தேன். பா.ஜ.க-விலிருக்கும் இவர்கள் கைதுசெய்யப்படாதது ஏன்?
மேத்யூ சாமுவேல், நாரதா நியூஸ்

பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சொல்வது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், ``இது முழுக்க முழுக்க பா.ஜ.க நடத்தும் அரசியல் நாடகம். பா.ஜ.க-வில் போய்ச் சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படாததே இதற்குச் சாட்சி. தேர்தலில் தோல்வியுற்ற விரக்தியில் இப்படிச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்'' என்று கூறிவருகின்றனர்.

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்
தீ…தி-1: கம்யூனிஸ்ட் கோட்டையில், காவிகளின் எதிர்ப்பில்… மம்தாவின் தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?

பா.ஜ.கவினரோ, ``இந்த வழக்கு நேர்மையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் அனைவரும் தண்டனை பெறுவார்கள்'' என்கிறார்கள் உறுதியாக.

`நாரதா' வழக்கு குறித்த உங்கள் பார்வையை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு