Published:Updated:

இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

Narendra Modi
Narendra Modi ( Twitter / PIB_India )

சீனா விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு நிலைமையை விளக்கினார்.

இந்தியா, பல கட்சிகள், பல்வேறு நிலைப்பாடுகள், வெவ்வேறு கொள்கைகள், பல்வேறு அணுகுமுறைகள் என அரசியல் பன்மைத்துவம் நிறைந்த நாடு. இந்தியா, தன்னகத்தே இந்த வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், அந்நிய பூமியிலிருந்து வரும் ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்னையை எதிர்த்து நிற்க, ஒரு புள்ளியில் இணைந்து நின்று யோசிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கம் நிறைவேறும் விதமாக நேற்று (19.06.2020) மாலை, மத்திய பா.ஜ.க அரசு, சீனாவுடனான எல்லை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியிருந்தது.

லடாக் பகுதியில் மே மாதம் முதல்வாரத்தில் தொடங்கிய இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து, ஜூன் 15-ம் தேதி அன்று நடந்த ஒரு மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 45 சீன வீரர்கள் இறந்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னை இருந்தாலும், 1975-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் உயிரிழப்பு வரைக்கும் போயிருக்கிறது. இந்த நிலையில், இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், இந்தியாவின் தலைவர்களும் ஒன்றிணைந்து இதுகுறித்து விவாதித்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு நிலைமையை விளக்கினார். தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சிகள், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வைத்திருக்கும் கட்சிகள், மத்திய மந்திரிகள் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள், இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள சுமார் 15 கட்சியின் தலைவர்கள் பங்குபெற்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர், திரிணாமூல் கட்சியின் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேகாலயா முதல்வர் கொன்ராத் சங்மா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், பிஜு ஜனதா தள் கட்சியின் பினாகி மிஸ்ரா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். காங்கிரஸ் கட்சி பல கேள்விகளை முன்வைத்து, அரசின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு உடன் நிற்பதாக உறுதியோடு கூறியிருக்கிறார்கள். நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து அக்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajnath Singh
Rajnath Singh

கூட்டத்தின் தொடக்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போதைய எல்லை நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக, எல்லையில் எல்லா சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியப் பாதுகாப்புப் படைகள் தயார்நிலையில் இருப்பதாக அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மற்ற தலைவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, ``அமெரிக்காவுடன் இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி சேரக் கூடாது" என வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

மேகாலயா முதல்வர் கொன்ராத் சங்மா, ``எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்புப் பணிகள் நிறுத்தப்படக்கூடாது" என வலியுறுத்தியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர், இந்த நேரத்தில் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் பேசினர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், ``சீனப் பொருள்களின் மீது 300 சதவிகிதம் வரி விதிக்க வேண்டும்" என வலியுறுத்தினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மோடி அவர்களே நமது பலம். அவரது செயல்பாடுகளால்தான் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கூட்டம் தொடங்கியது முதல், பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ``லடாக்கில் சீனத் துருப்புகள் எந்தத் தேதியில் ஊடுருவினர்; நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை நம் அரசு எப்போது கண்டுபிடித்தது; உளவுத்துறை தோல்வியினால்தான் இந்த அசம்பாவிதங்கள் நிகழ்ந்தனவா?" எனக் கேள்வியெழுப்பியவர், தொடர்ந்து ``எல்லை நிலைமை பற்றிய செயற்கைக்கோள் படங்கள் அரசுக்கு சரியாகக் கிடைக்கின்றனவா?" என்றும் கேட்கத் தவறவில்லை.

Sonia Gandhi
Sonia Gandhi
Twitter/@INCIndia

மேலும், ``அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு நல்குவோம், இருந்தபோதிலும் இன்னும் முன்கூட்டியே மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்திருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் முடிவில், பேசிய பிரதமர் மோடி, ``இந்தியா சமீபத்தில் எந்த நிலப் பகுதியையும் சீனாவிடம் இழக்கவில்லை. நமது எல்லைக்குள் யாரும் நுழையவில்லை, எந்த எல்லை காப்பகத்தையும் சீனா கைப்பற்றவில்லை, நமது வீரர்கள் 20 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், நமது பாரதத்தை எதிர்க்கத் துணிவு இருந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

1962 முதல் 2020 வரை இந்தியா - சீனா எல்லையில் என்ன நடந்தது? ஒரு விரிவான அலசல்!

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு பதிலடியாக, காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, எதிர்ப்பு தெரிவித்து இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ``பிரதமர், சீனத் தாக்குதலுக்குப் பணிந்து இந்தியப் பகுதியைச் சீனாவிடம் இழந்துவிட்டார்.

ஒருவேளை தாக்குதல் நடந்த பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்றால்,

1. நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்?

2. எந்த இடத்தில் கொல்லப்பட்டார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul gandhi tweet
Rahul gandhi tweet
Twitter

அதாவது, இந்தியப் பகுதியில் சண்டை நடந்திருந்தால், சீன வீரர்கள் எல்லை தாண்டியிருக்கிறார்கள், சீனப் பகுதியில் நடந்திருந்தால் இந்திய வீரர்கள் எல்லை தாண்டியிருக்கிறார்கள், இரண்டில் எது நடந்தது என்பதே அவரது கேள்வியாக இருக்கிறது.

தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், ஜூன் 15-ம் தேதி நடைபெற்றே தாக்குதலுக்குப் பிறகே யாரும் நம் எல்லைக்குள் ஊடுருவவில்லை என பிரதமர் பேசியதாகவும், ஆனால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இருபது வீரர்களைப் பலிகொடுத்த துயரத்திலிருக்கும் மக்களுக்கு எல்லையில் நடப்பதைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரிவிக்கப்படுவதும், மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையும், அனைத்துக் கட்சிகளின் ஒன்றிணைந்த செயல்பாடுகளும் அவசியம். அதேசமயம், இவ்வாறான அனைத்துக் கட்சி கூட்டங்களில்... அவரவர் தங்கள் எதிர்ப்பு, ஆதரவு மனநிலையை மட்டும் வெளிப்படுத்துகிறார்கள். அப்படியில்லாமல், ஆக்கபூர்வமான சில விவாதங்களை மேற்கொண்டு, அதன் வழி ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். அப்போதுதான், வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், இந்த அனைத்துக் கட்சி கூட்டங்களின் நோக்கம் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு