Published:Updated:

`சரண்டரா... சாணக்கியத்தனமா?' - எடப்பாடியின் டெல்லி விசிட் பின்னணி!

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே டெல்லி விசிட்டை முடித்து, திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில், ``சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்று அவர் வீசிய குண்டு, தமிழகத்தில் அதிர்வை உருவாக்கியிருக்கிறது. என்ன நடந்தது டெல்லியில்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நவம்பர் 21-ம் தேதி சென்னை வந்து சென்ற பிறகு தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ரஜினியும், `அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என்று அறிவித்ததால், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி ஏறக்குறைய உறுதியான நிலையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசும்போது, ``ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் மறைந்த பிறகு, ஆட்சியைத் தக்கவைத்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைக் காட்டுகிறது” என்று புகழாரம் சூட்டினார். இந்த விழாவில்தான், ``தி.மு.க-வை வீழ்த்துவதற்கு சசிகலாவின் உதவியையும் அ.தி.மு.க பெற்றுக்கொள்ள வேண்டும். தீயை அணைக்க கங்கையை மட்டுமல்ல, சாக்கடைத் தண்ணீரையும் பயன்படுத்தலாம்” என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது சர்ச்சையானது. `அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு உறுதியாகிவிட்டது, சசிகலா பொதுச்செயலாளர் ஆகப்போகிறார்’ என்று செய்திகள் றெக்கை கட்டிய நிலையில், ஜனவரி 18-ம் தேதி டெல்லி கிளம்பினார் எடப்பாடி.

எடப்பாடியை வரவேற்கும் கே.பி.முனுசாமி
எடப்பாடியை வரவேற்கும் கே.பி.முனுசாமி

ஷாக் கொடுத்த கே.பி.முனுசாமி

தம்பிதுரை, தளவாய் சுந்தரம், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் எடப்பாடியுடன் பயணித்தனர். சசிகலா வகையறாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, டெல்லியில் முதல்வரை வரவேற்றதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போதே, `இணைப்பு சாத்தியமா?’ என்கிற சந்தேக ரேகைகள் படர ஆரம்பித்துவிட்டன. இரவு 7:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, உடன் வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, கூட்டணி சீட் பங்கீடு, சசிகலா விவகாரம், ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழா தொடர்பாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆலோசனையை முடித்துவிட்டு அமைச்சர் ஜெயக்குமாரை மட்டும் உடன் அழைத்துக்கொண்ட எடப்பாடி, கிருஷ்ண மேனன் மார்க்கிலுள்ள அமித் ஷாவின் வீட்டுக்குப் புறப்பட்டார்.

விழுப்புரம்: `சசிகலாவின் காலை வாரியவர் முதல்வர் எடப்பாடி!' - உதயநிதி ஸ்டாலின்

இரவு 7:30 மணிக்கெல்லாம் அமித் ஷாவின் வீட்டுக்குள் நுழைந்தவர், ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகே அமித் ஷாவைச் சந்திக்க முடிந்திருக்கிறது. இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் தலைவர் ஒருவர், ``அமித் ஷாவுக்கும் எடப்பாடிக்கும் இடையே 20 நிமிடங்கள் சந்திப்பு நடந்தது. கூட்டணி சீட் பங்கீடு தொடர்பாகப் பேச்சு எழுந்தபோது, பா.ஜ.க தரப்பில் 40 தொகுதிகளை எதிர்பார்த்தனர். அதற்கு, `சீட் பங்கீடு தொடர்பாக நாங்கள் இன்னும் யாருடனும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இன்னும் எந்தெந்தக் கட்சிகள் புதிதாகக் கூட்டணிக்குள் வருகின்றன என்பதும் தெரியவில்லை. முதலில், ஜெயலலிதாவின் நினைவிட திறப்புவிழாவுக்கு வந்து, நம் கூட்டணியின் உறுதியைக் காண்பியுங்கள். பிறகு எல்லோரும் அமர்ந்து பேசி, சீட் பங்கீட்டில் சுமுகமான ஒரு முடிவுக்கு வருவோம்’ என்று நாசுக்காகத் தட்டிக் கழித்துவிட்டார் எடப்பாடி. சசிகலாவையும் அ.ம.மு.க-வையும் அ.தி.மு.க-வில் இணைப்பது தொடர்பாக பேச்சு எழுந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சசிகலாவை ஏற்க மாட்டார்கள்!

பா.ஜ.க தரப்பில், `அ.ம.மு.க பிரிந்து நிற்பதால், தென் மாவட்டங்களிலும் டெல்டாவிலும் அ.தி.மு.க-வுக்கு பெரிய இழப்பு ஏற்படுமென்று ஐ.பி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. சசிகலாவை உடன் வைத்துக்கொண்டால் பலம்தானே’ என்றிருக்கிறார்கள். அதற்கு, `அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், ஜெயலலிதாவால் நீக்கிவைக்கப்பட்டவர்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், செப்டம்பர் 2017-ல் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை அ.தி.மு.க-விலிருந்து நீக்கியும்விட்டோம். மீண்டும் அவரைச் சேர்த்தால் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அ.ம.மு.க-வின் வேட்பாளர்கள் பிரித்த வாக்குகளை அடிப்படையாக வைத்துத்தான், அவர்களால் வரும் 2021 தேர்தலில் ஆபத்து என்று கூறுகிறீர்கள். உண்மை அதுவல்ல. நிலைமை நிறையவே மாறியிருக்கிறது. டி.டி.வி.தினகரன் சம்பந்தப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் வழக்கை துரிதப்படுத்தினால், தேர்தல் நெருக்கத்தில் அ.ம.மு.க தடுமாறிவிடும்’ என்று எடப்பாடி கூறவும், மேற்கொண்டு அமித் ஷா எதுவும் பேசவில்லை.

சசிகலா : திறந்த சிறைக்கதவுகள்... சந்திக்க புறப்பட்ட உறவுகள்!

தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்குப் பணிநீட்டிப்பு வழங்கி உடன் வைத்துக்கொள்ள முதல்வர் விரும்புகிறார். பணிநீட்டிப்பை மத்திய அரசுதான் கொடுக்க வேண்டுமென்பதால், அமித் ஷாவுடன் அது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழாவை பிப்ரவரியில் வைத்துக்கொள்வதாகவும், விழாவுக்கு வர வேண்டுமென்றும் அமித் ஷாவுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். ஆனால், ஜனவரி 29-ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதால், வருவது சாத்தியமில்லை என்று அமித் ஷா மறுத்துவிட்டார். புத்தாண்டு வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டு தலைவர்கள் விடைபெற்றனர். அன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் சசிகலா விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மனம்விட்டு சில விஷயங்களை கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டுத்தான் தூங்கச் சென்றிருக்கிறார் முதல்வர்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
பழைய படம்

ஜனவரி 19-ம் தேதி காலை 10:30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்துவைக்கவும் பிரதமருக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். ஏப்ரல் 8-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தத் திட்டமிட்டிருப்பதால் நினைவிடத் திறப்புவிழாவுக்கு வர இயலாது என்று மறுத்த பிரதமர், பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஓய்வுக் காலமென்பதால், அந்தச் சமயத்தில் திட்டங்களைத் தொடங்கிவைக்க தமிழகம் வருவதாக உறுதியளித்தாராம். இருவரின் இந்த 15 நிமிட சந்திப்பில், சசிகலா, அ.ம.மு.க இணைப்பு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். இதற்கிடையே, பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த எடப்பாடி, ``சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை மீண்டும் சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை’’ என்று சரவெடியைப் பற்றவைத்தது தமிழகத்தை அதிரச்செய்திருக்கிறது.

எடப்பாடியை மிரட்டிய பன்னீர்!

சரண்டரா... சாணக்கியத்தனமா?

சசிகலா தொடர்பாக எப்போது கேள்வி எழுப்பினாலும், மழுப்பலான பதிலையே அளிக்கும் எடப்பாடி, முதன்முறையாக, சசிகலாவுக்கு எதிராக தைரியமாகப் பேசியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து எடப்பாடிக்கு மிகவும் வேண்டப்பட்ட எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வில் இப்போது இரட்டைத் தலைமைதான் என்றாலும், அதிகாரம் முழுவதும் எடப்பாடியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஒருவேளை சசிகலாவை உள்ளே அனுமதித்தால், எடப்பாடியின் அதிகாரம் காணாமல் போய்விடும். தவிர, இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்க பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்து `பி ஃபார்ம்’-ல் கையெழுத்து போட்டாக வேண்டும். இந்த அதிகாரத்தை எவருக்காகவும் விட்டுத்தர எடப்பாடி தயாராக இல்லை. சமீப நாள்களாக தினகரன் டெல்லிக்குச் செல்வதாகவும், அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு நடந்துவிடும் என்றும் மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போன்றவர்கள் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தனர். இந்தச் சர்ச்சைக்கு முடிவுகட்டத்தான் டெல்லிக்குப் பயணமானார் எடப்பாடி.

சசிகலா
சசிகலா

டெல்லியைச் சரணடைந்தவர் சாணக்கியத்தனமாக சசிகலா சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதன் மூலமாக, கட்சி நிர்வாகிகளிடம் தனது ஆளுமை பெரிதாக உயரும் என்பது அவர் எண்ணம்” என்றவரிடம், ``இதற்கு பா.ஜ.க ஒப்புக்கொண்டதா?” என்றோம். அதற்கு, ``அவர்கள் யார் ஒப்புக்கொள்வதற்கு... எங்கள் கட்சியின் முடிவை நாங்கள்தான் எடுப்போம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில்போது, பா.ஜ.க-வுக்கு நாங்கள் அடிபணிந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஐந்து சீட் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கினோம். ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, `சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு உரிய மரியாதையை அளிப்போம். அதற்காக நாங்கள் அவர்களுக்கு அடிமையாகிவிடவில்லை’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். மற்றபடி, அ.தி.மு.க-வின் கட்சி நடவடிக்கைகளில் பா.ஜ.க தலையிட முடியாது. ஜெயலலிதா இறந்தபோது இருந்த சூழலுக்கும், இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது” என்றார்.

மிஸ்டர் கழுகு: கட்டி உருளும் கிச்சன் கேபினெட் பிரமுகர்கள்! - தலைவலியில் ஸ்டாலின்...

பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்தித்துவிட்டு வந்து, தனக்கு டெல்லி சப்போர்ட் இருப்பதுபோல ஒரு பிம்பத்தைக் காட்டி, சாணக்கியத்தனமாக சசிகலாவை ஓரங்கட்டிவிட்டார் எடப்பாடி. அப்படியும் பதற்றம் தணியாதவர், சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27-ம் தேதியே ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழாவுக்கும் நாள் குறித்துவிட்டார். சசிகலா விடுதலையாகி வரும்போது, அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளின் கவனமெல்லாம் ஜெயலலிதா நினைவிடம் மீதுதான் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை தீட்டியிருக்கிறாராம் எடப்பாடி. மீறி யாராவது சசிகலாவை அன்று வரவேற்கச் சென்றால், `அம்மாவை உதாசீனப்படுத்திவிட்டார்கள்’ என்று குண்டு வீசவும் ரெடியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். சசிகலாவுடன் நேரடியாக மோதி தனது தலைமைப் பண்பை நிரூபிக்கப் பார்க்கிறார் எடப்பாடி. இன்னும் ஏழு நாள்களில் வெளியே வரப்போகும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்துத்தான் காட்சிகள் மாறும்.

அடுத்த கட்டுரைக்கு