Published:Updated:

கெடுவைத்து கறார் காட்டிய எடப்பாடி... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன?!

எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் மே 17-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:

கெடுவைத்து கறார் காட்டிய எடப்பாடி... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன?!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் மே 17-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க-வில் அமைப்புரீதியில் 75 மாவட்டங்கள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆன பின்னர், அடிக்கடி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார். அதன்படி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில், மே 17-ம் தேதி மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி நடத்தியிருந்தார். இது தொடர்பாக சீனியர் மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். ``பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தற்போதிருக்கும் நிலைமைக்கு இது போன்ற கூட்டங்களை அடிக்கடி நடத்தினால்தான், கட்சியின் அடுத்தகட்ட பணிகளில் தொய்வு இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதன்படிதான், மாதம் ஒரு முறை மா.செ-க்கள் கூட்டம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலக் கட்சிக்கும் 1.5 கோடி உறுப்பினர்கள் இல்லை. அதற்கு அம்மாதான் காரணம். அதேபோல, தான் பொதுச்செயலாளராக இருக்கும்போது, உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று எடப்பாடி எண்ணுகிறார். அதற்கான பணிகளை ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கினார். ஆனால், திட்டமிட்டப்படி உறுப்பினர்கள் சேர்க்கயை விரைவாகச் செய்து முடிக்க முடியவில்லை.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

அதற்குக் காரணமும் இருக்கிறது. அ.தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணி என்பது பழைய நடைமுறையின்படி, படிவம் பூர்த்திசெய்யும் முறையில் இருப்பதால், சற்றுக் கடினமாக இருக்கிறது. முன்புபோல, கட்சிக்காரர்களை இதில் முழுமையாக ஈடுபடுத்த முடியவில்லை. அதேபோல கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. ஆளுங்கட்சியான தி.மு.க-வும் இந்தப் பணியில் திணறிவருகிறது.

மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கூட்டத்துக்கு முன்பாக, உறுப்பினர் சேர்க்கைப் பணியை முடித்துவிட்டு, பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதற்காகத்தான் மா.செ-க்கள் கூட்டத்தில் இதைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் எடப்பாடி. தற்போது நடந்த கூட்டத்தில், ஜூன் 20-ம் தேதிக்குள் பூர்த்திசெய்த படிவங்களை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கறாராகக் கூறியிருக்கிறார். அதேபோல, பிற கட்சிக்காரர்களைக் கழகத்தில் இணைக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி

மா.செ-க்கள் கூட்டம் நிறைவடைந்த பின்னர், சீனியர்களுடன், பொதுச்செயலாளர்கள் அறையில் தனியாக ஒரு கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் மாளிகையின் முதல் தளத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  மாலை 5:10-க்குத் தொடங்கி 6 மணிக்கெல்லாம் நிறைவுபெற்றுவிட்டது. இதையடுத்து, சீனியர்களை மட்டும் தனது அறைக்கு அழைத்த எடப்பாடி, கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக, திமுக-வுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்துப் பேசினார். அதன்படி, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வரும் 22-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவாகியிருக்கிறது. அப்போது, சில அமைச்சர்களுக்கு எதிரான புகார்களையும் கொடுக்கவிருக்கிறார் எடப்பாடி" என்றார் விரிவாக.