Published:Updated:

ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன... 3 நாட்களின் ஸ்பாட் ரிப்போர்ட்! #JamiaProtests

ஜாமிய மிலியா இஸ்லாமியா
ஜாமிய மிலியா இஸ்லாமியா

`` 'இந்தப் பல்கலைக்கழகம் எங்களுக்கு வீடு போன்றது. எங்கள் வீட்டிலேயே நாங்கள் தாக்கப்பட்டோம்' என்கிற எண்ணம் ஒரு அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் மக்கள், குறைந்தபட்சம் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையாவது தாருங்கள்."

இந்தியாவின் தலைநகரில் உள்ள நாட்டின் பழைமையான ஜாமியா பல்கலைக்கழகத்தில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் தேசத்தையே உலுக்கியுள்ளன. அங்கே, இதுவரைக்கும் என்ன நடந்தது? ஸ்பாட் ரிப்போர்ட்!

என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர், 15:

மதியம் மூன்று மணி அளவில், `டெல்லியிலுள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தினுள் போலீஸார் அத்துமீறி புகுந்துவிட்டார்கள்’, `அவர்கள் மாணவர்களைத் தாக்குகிறார்கள்’ என்ற தகவல் முதலில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலமாக வேகமாக பரவத்தொடங்கியது. தகவல்களை ஒரு வாட்ஸ் அப் குழுவில் பார்த்ததும், உடனடியாக ஜாமியாவில் முதுகலை ஆங்கிலம் பயிலும் என் தோழி அப்ராவுக்குத் தொடர்புகொண்டேன், ``போலீஸார், தங்கள் வளாகத்திற்குள் புகுந்துவிட்டார்கள், பாதுகாப்பிற்காக நூலகத்திற்குள் வந்துள்ளோம். ஆனால், இங்கேயும் கண்ணீர்ப்புகைக் குண்டு போட்டுவிட்டார்கள். நான் அப்புறம் பேசுகிறேன்’’ என்று சொல்லி காலை கட் செய்தார்.

அடுத்த சில மணி நேரத்திற்குள் ஏராளமான வீடியோக்கள்... போலீஸார் ஒரு மண்ணெண்ணெய் கேனிலிருந்து, ஆளில்லாப் பேருந்தில் எதையோ ஊற்றுவதுபோல, பல்கலைக்கழக வளாகத்தினுள் கண்ணீர் புகைக்குண்டு பரவி புகைமண்டலமாகி இருப்பது போல, மாணவர்களை கொடூரமான முறையில் அடிப்பது போல, துப்பாக்கியால் சுடுவது போல, குண்டடிபட்ட மாணவர்கள் வலியால் துடிப்பது, வாகனங்களை லத்தியால் அடிப்பது போன்ற பல காணொளிகள் வேகமாக பரவத்தொடங்கின. இவை வைரலாகவே, மெதுவாக ஊடங்களும் சமூக வலைதளங்களில் பரவிய இந்தக் காணொளிகளைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிடத்தொடங்கின.

காவல்துறையினரின் வன்முறையின் போது
காவல்துறையினரின் வன்முறையின் போது

கடந்த ஒரு வாரமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ எதிர்த்துப் போராடிவந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவின் மிகப் பழைமையான கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும், இந்தப் போராட்டத்தில் தொடக்கம் முதல் பங்கெடுத்துவந்தனர். ஜாமியா மிலியா, இஸ்லாமியர்கள் அதிகம்பேர் பயிலக்கூடிய, மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகம். டிசம்பர் 15 அன்று, அதற்கு முந்தைய நாள் போராட்டங்களின் தொடர்ச்சியாக, மதியம் மூன்று மணியளவில் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள மக்கள் வாழும் பகுதியில், பொதுமக்களோடு சேர்ந்து தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர்வலமாகச் சென்றனர். அப்படிச் சென்ற அந்த இடத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக பெரிய அளவில் திரண்ட போலீஸாரோடு திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அதுவே அடுத்து நடந்த மிகக் கொடுமையான நிகழ்வுகளுக்கு வித்திட்டது என்றும் மாணவர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இரவு 9 மணியளவில், அந்த இடத்தை நோக்கி நான் புறப்படவே, பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன என்னும் செய்தி வந்தது. ஆட்டோக்காரர் ஒருவரின் உதவியோடு அந்த இடத்தைச் சென்ற டைந்தேன். பல்கலைக்கழகம் அமைந்துள்ள அந்த மிக நீண்ட சாலையில், வழியெங்கும் கண்ணாடித் துகள்களும் சாலையின் நடுவே இருந்த தடுப்புகள் கீழே சாய்ந்தும், சாலையின் இருபுறமும் உள்ள வாகனங்கள் சேதமடைந்த நிலையிலும் கிடந்ததைக் காண முடிந்தது. மாணவர்கள் யாருமே தென்படவில்லை. சுமார் 1 கி.மீ முன்னிருந்தே கையில் நீண்ட லத்தியுடன் போலீஸார் தென்பட்டனர். அந்தச் சமயம், கிட்டத்தட்ட 500 போலீஸாராவது அந்தச் சாலையில் இருந்திருப்பர். இயல்பாக 7,000 / 8,000 பேர் கூடும் அந்தப் பல்கலைக்கழக வீதியில், முதன்முறையாக ஒரு பெரும் நிசப்தத்தை உணரமுடிந்தது.

மாணவி அப்ராவைத் தொடர்புகொண்டபோது, தானும் தன்னோடு நூலகத்தில் உடனிருந்தவர்களையும் காவல்துறையினர் வீட்டுக்கோ, விடுதிக்கோ அனுப்பாமல் `பட்லா’ என்னும் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் இடத்திற்கு வலிந்து அனுப்பியதாகத் தெரிவித்தார். 2 கி.மீ தொலைவிலுள்ள பட்லா செல்லும்போது மணி 10 இருக்கும். எந்நேரமும் `ஜே ஜே' என்றிருக்கும் பெரிய பெரிய கடைவீதிகளைக் கொண்ட பட்லா, முழுவதுமாக இருள் ஏந்தியிருந்தது. அங்கிருக்கும் மக்கள், வீட்டுக்கு வெளியே வந்து இருட்டில் நின்று சாலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்ரா, அவரோடு படிக்கும் முகம்மது அலி ஜவகர் என்னும் மாணவர் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்தார். அங்கே 8 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் அங்கிருந்தனர். தன்னோடு வந்தவர்களில் சிலர் மட்டும்தான் இங்கிருக்கிறார்கள் என்றும், மற்றவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறையால் சேதமடைந்த நூலகம்
காவல்துறையால் சேதமடைந்த நூலகம்

என்ன நிகழ்ந்தது என்று கேட்கையில், ``துப்பாக்கித் தோட்டாக்கள் வெடிக்கும் சப்தங்கள் கேட்டன. கண்மூடித் திறப்பதற்குள் வளாகத்திற்கு வெளியே போடப்பட்டிருந்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போலீஸாரால் வளாகத்திற்குள்ளும் போடப்பட்டன. மாலை 5 மணியை நெருங்கியதால் பெரும்பாலான துறைகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் நூலகத்திலும், படிக்கும் அறையிலும் பாதுகாப்பிற்காகத் தஞ்சம் புகுந்தோம். ஆனால், அங்கேயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகை நுழைந்தது. காவலர்கள், மாணவர்களை இழுத்துவந்து அடித்துக்கொண்டிருந்தனர். நாங்கள் நூலகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு, போன் ஒளியைக்கூட பயன்படுத்தாமல் பயத்தோடு இருந்தோம். சுமார் 45 நிமிடங்கள் அதே நிலையில்தான் இருந்தோம். உள்ளே, கிட்டத்தட்ட 100 மாணவர்கள் இருந்தனர். என் நினைவின்படி ஏழெட்டு பேராவது கடுமையாகக் காயம்பட்டு அருகேயே இருட்டில் உட்கார்ந்திருந்தனர். சிறிதுநேரம் கழித்து, போலீஸார் கதவைத் தட்டினர். காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கும், மற்ற மாணவர்களை செல்போன்களை வெளியே எடுக்காமல், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பல்கலைக்கழக வாயிலில் இருக்கும் சாலை வரை ஏதோ குற்றவாளிகளைப் போல நடக்கவைத்தனர். எல்லோரையும் பட்லா நகருக்குள் வலிந்து தள்ளினார்கள். நாங்கள் உள் நுழைந்ததும், இங்கிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் வரலாம் என்று வழியெங்கும் உதவ முன்வந்தனர். என் வகுப்புத்தோழன் இங்கே இருந்ததால் என்னுடன் இருந்த 7 பெண்களையும் இங்கே அழைத்து வந்துவிட்டேன். எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஒரு சில கடைகளையும் மூடச்சொல்லி போலீஸார் கத்திவிட்டுச் சென்றனர். எனக்கு எல்லாவற்றையும்விட கடினமாக இருந்தது, எங்கள் வளாகத்தின் தொழுகை செய்யும் இடமான மசூதியையும் நாசம் செய்துள்ளனர் என்பதுதான்" என்றார் அவர்.

ஜாமியா மாணவர்கள்
ஜாமியா மாணவர்கள்

அதேவேளை, அந்த இரவில் டெல்லியில் இருக்கும் மற்ற பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடந்த இந்த தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், நள்ளிரவிலேயே போராட்டத்தை அறிவித்தனர். டெல்லி ஐ.டி.ஓ-விலுள்ள டெல்லி போலீஸாரின் தலைமையகத்தில் கூடுமாறு அறிவித்தனர். பட்லாவிலிருந்து கிடைத்த ஒரே ஆட்டோவின் துணையோடு அங்கு அரை மணி நேரத்திற்குள் சேர முடிந்தது.

மாணவர்களின் போராட்டம்
மாணவர்களின் போராட்டம்
`கலவரத்துக்குக் காரணமே, டெல்லி காவல்துறை மட்டும்தான்!' - கொதிக்கும் ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர்

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், வெவ்வேறு மாணவர் அமைப்புகள் என 2000-க்கும் மேற்பட்டோர் அதிகாலை 4.30 மணிவரை டெல்லி போலிஸாரை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பியும், ஜாமியாவுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்த அம்பேத்கர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாறு முதுநிலை தத்துவம் படிக்கும் அருணிடம் பேசுகையில், ``ஒரே நாளில் இந்தியாவின் இரண்டு பெரிய பழைமையான சிறுபான்மையினர் பல்கலைக்கழகங்களான ஜாமியா மிலியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகங்கள், ஒரே மாதிரியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. இவை இரண்டும் தனித்தனியே நடந்த நிகழ்வுகளாகப் பார்க்கமுடியவில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழவில்லை, இந்தியாதான் இஸ்லாமியர்களிடத்தே வாழ்கிறது. இதுதான் நம் அரசியலமைப்பு சட்டம் நமக்குக் காட்டும் நெறியாக உள்ளது” என்றார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்தாலும், போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. டெல்லியின் துணை முதலமைச்சரான ஆம் ஆத்மியைச் சேர்ந்த மனிஷ் சிசோடியா, நடந்த கலவரங்களுக்கு காவல்துறைதான் காரணம் என்று ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டம்
மாணவர்களின் போராட்டம்

இந்நிகழ்வு நடந்த அன்றிரவு, டெல்லி போலீஸின் தரப்பில் ஊடகங்களிடம் பேசிய டெல்லியின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த டி.சி.பி சின்மயி பிஸ்வால், ``தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், போராட்டம் செய்துகொண்டிருந்த மாணவர்களிடையே சிலர் வன்முறையைத் தூண்டியதால் நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம்" என்றும் தெரிவித்தார். வன்முறையைத் தூண்டியவர்கள் மாணவர்களா அல்லது வேறு சமூகவிரோதக் கும்பலா என்று தெரியவில்லை என்றார்.

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், ``நாங்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம், எங்களைக் கேட்காமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறை நுழைந்தது’ என்று தெரிவித்தனர்.

சிகிச்சைபெறும் மாணவர்
சிகிச்சைபெறும் மாணவர்
ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு? - மாணவர்கள் குற்றச்சாட்டும் காவல்துறை விளக்கமும்!

அதேவேளை, கல்கத்தா, மும்பை ஐ.ஐ.டி, டிஸ், பனாரஸ் பல்கலைக்கழகம் போன்று, நாடு முழுவதுமிருந்து பல கல்விநிறுவனங்களில் மாணவர்களும் இளைஞர்களும் நள்ளிரவில் அமைதி ஊர்வலங்களையும் போராட்டங்களையும் நடத்தினர்.

மறுநாள் டிசம்பர் 16, பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாஜ்மா அக்தர், பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடுசெய்தார். 'ஜாமியா சட்டத்தை நம்புகிறது. நீதித்துறைக்கு வழக்கை எடுத்துச் செல்வோம்' என்று அறிவித்தார். சுமார் 200 மாணவர்கள் காயம்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அதே நாள் மாலை, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியான பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் டெல்லி முழுவதும் உள்ள இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து, `அரசியலமைப்பை வாசிப்போம்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தினர். கூட்டத்தில் 2000- த்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். பல மாணவர் அமைப்புகள் குழுக்களாகச் சேர்ந்து, அரசியலமைப்பின் முகவுரையை உரக்க வாசித்தனர். அதில் சில மாணவர்கள், அங்கிருந்த காவலர்களிடம் சென்று வாசித்துக் காண்பித்தனர்.

அங்கு, ஜாமியா மிலியாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் முந்தைய நாள் நிகழ்வு பற்றி கேட்கையில், முதுகலை ஆங்கிலம் பயிலும் ஜெயலஷ்மி, ``நேற்று அந்நிகழ்வு நடக்கையில் நான் நொய்டாவில் இருந்தேன். தகவல் கிடைத்ததும் உடனே நண்பர்களுக்குத் தொடர்புகொண்டேன். பெரும்பாலான என் நண்பர்கள் நூலகத்தில் மாட்டிக்கொண்டனர். உடனே, பெண்கள் விடுதியில் உள்ள என் நண்பர்களுக்கு அழைத்தேன். அங்கு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால், மிகுந்த பயத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்கள். மனத்தளவில் பெரும் பயமும் பதற்றமும் எல்லோரிடமும் காணப்பட்டது. எங்களுடன் படிக்கும் ஒரு நண்பர், இரவு முழுவதும் பயமாக இருக்கிறது என்று சொல்லியதால், இன்னொரு நண்பர் இரவு முழுவதும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் எந்த அளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்றார்.

மற்றொரு மாணவி சித்ரா பிந்தே இஸ்லாம் பேசுகையில், ``இது இஸ்லாமியர்களின் பல்கலைக்கழகம் என்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஜே.என்.யு. பல்கலைக்கழகத்திலோ, வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இப்படி ஒன்று நடந்ததில்லை. நடந்திராது, இந்நிகழ்வை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த ஒரு செயல்” என்றார்.

தற்போது, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து வகுப்புகள், தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஜனவரி 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸார், இதுவரை 10 பேரை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர்கூட ஜாமியா பல்கலைக்கழக மாணவர் இல்லை.

போராட்டத்தில் மாணவர்கள்
போராட்டத்தில் மாணவர்கள்
`யார் அந்த ரெட் டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ்?' - ஜாமியா வன்முறையில் சிக்கிய 10 ரவுடிகள்! #CAA

டிசம்பர் 17, ஜாமியா பல்கலைக்கழகத்தின் வாயிலில் முன்னாள்-இந்நாள் மாணவர்கள், பல்கலைக்கழகத்தைச் சுற்றிவாழும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் தேசியக்கொடி ஏந்தி சாலை நெடுக நின்று, தங்களுக்கு நீதி வேண்டும் என்று உரத்த கோஷங்கள் எழுப்பினர். கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் ஆன நிலையில், மாணவர்களின் மனநிலையை அறிய அவர்களிடம் உரையாடினோம். முதுகலை சமூக நலப்பணி பயிலும் சையது மொஹம்மது ஹம்மார், ``தற்போது போலீஸார், வன்முறைக்கு ஜாமியா மாணவர்கள் காரணம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், எதற்காக அவர்கள் எங்கள் வளாகத்திற்குள் புகுந்தனர்? எதற்காக எங்களை இறக்கமில்லாமல் அடித்தனர்? இது இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து நடக்கவில்லை... இது, இந்திய அரசியலமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சாரா அப்துர் ரஹ்மான், ``இந்தப் பல்கலைக்கழகம் எங்களுக்கு வீடு போன்றது எங்கள் வீட்டிலேயே நாங்கள் தாக்கப்பட்டோம் என்னும் எண்ணம் ஓர் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் மக்கள், குறைந்தபட்சம் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையாவது தாருங்கள்” என்றார்.

"மாணவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தினார்கள்!" - நடந்ததைச் சொல்லும் டெல்லி ஜாமியா பல்கலை. மாணவர்கள் #SpotVisit வீடியோ: இனியன்

Posted by Vikatan EMagazine on Wednesday, December 18, 2019

பனாரஸ் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கோழிக்கோடு மற்றும் கொச்சின் பல்கலைக்கழகங்கள், மும்பை உள்ளிட்ட மூன்று ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், சென்னைப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை நியூ காலேஜ் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் ஜாமியா மற்றும் அலிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த அடக்குமுறைகளைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

உலக அளவில், ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு, யேல், எம்.ஐ.டி போன்ற உலகின் மிகமுக்கிய பல்கலைக்கழங்களிலிருந்து ஜாமியா-வில் ஏற்பட்ட இந்நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜாமியா நிகழ்வு பற்றி கேட்கையில், மாவோயிஸ்ட்டுகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள் மாணவர் போராட்டங்களில் கலந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``பொதுச்சொத்துக்கு யார் சேதம் விளைவைத்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்" என்று ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

வெளியேறும் மாணவர்கள்
வெளியேறும் மாணவர்கள்
மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video

பிரதமர் மோடி, ''இந்தப் போராட்டங்களைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாமல், மேலோட்டமாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்'' என்று மட்டும் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்கம், கேரளம், டெல்லி, போன்ற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள், தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலிருந்து தி.மு.க, மக்கள் நீதி மய்யம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் ஜாமியா மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவையும், நடந்த நிகழ்வுக்குக் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

ஜாமியா பல்கலைக்கழகம் 1920-ல் தொடங்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போரில் பெறும் பங்குவகித்தது. ஒரு முறை பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, மகாத்மா காந்தி இப்படிச் சொன்னார்...

``ஜாமியாவுக்காக எனில், நான் பிச்சைப்பாத்திரம் ஏந்தக்கூட தயார்"

இன்று 2019... மகாத்மா காந்தியை நம் தேசத்தின் தந்தையாக ஏற்ற நம் ஒவ்வொருவரையும் கவனிக்கிறார்கள், ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள்... நம் ஆதரவை எதிர்நோக்கி!

அடுத்த கட்டுரைக்கு