Published:Updated:

`போனால் போகட்டும் போடா முதல் கட்சிக்குள் சி.ஐ.டி வரை!' - பாமக பொதுக்குழுவில் நடந்தது என்ன?

ராமதாஸ் - அன்புமணி
News
ராமதாஸ் - அன்புமணி

``இந்திய அளவில் சமூக நீதிக்காக உழைக்கின்ற கட்சி பா.ம.க. எல்லாத் தகுதியும் இருந்தும் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆனபின்னும் நம்மால் ஆட்சியைப் பிடிக்கமுடிக்கவில்லை. வலிக்கிறது." - அன்புமணி

ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடைபெறும் பா.ம.க-வின் சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. '2026-ம் ஆண்டு பா.ம.க தலைமையில் தனி அணி அமைப்போம்' என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருப்பதுதான் கூட்டத்தின் மிகமுக்கிய ஹைலைட்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப்பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலப் பொறுப்புகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விடுவிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாவட்ட வாரியாக தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்தக் கூட்டங்களில் மருத்துவர் ராமதாஸின் கடுமையான பேச்சுக்கள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன.

பொதுக்குழு
பொதுக்குழு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில், உள்ள அண்ணா அரங்கத்தில் அந்தக்கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், 'நீட் விலக்குக்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒப்புதல், எழுவர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க சட்டப்போராட்டம்' உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. '2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் மக்கள் பணியாற்றி, பா.ம.க-வை வலுப்படுத்துவோம்' எனத் தனியாக அரசியல் தீர்மானமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை மருத்துவர் ராமதாஸ் வாசித்தார்.

சமீபகாலமாக நிர்வாகிகள் கூட்டத்தில், மருத்துவர் ராமதாஸ் மிகக் கடுமையாப் பேசிவந்த நிலையில், இந்தக்கூட்டத்தில் அன்புமணியின் பேச்சில் அனல் பறந்தது. ``இரண்டு ஆண்டுகளாக உங்களைச் சந்திக்கவேண்டும் என்கிற துடிதுடிப்பு இன்று ஓரளவுக்கு அடங்கியிருக்கிறது'' என்று பேச்சைத் தொடங்கியவர், ``மாவட்டத்தில் இரண்டு பேர் அதிகார மையங்களாக இருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்தது. அதனால்தான் மாவட்டச் செயலாளருக்கே முழு அதிகாரம் வழங்கி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதேபோல, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிடுக்கப்பட்டவர்கள், தங்களை நீக்கிவிட்டார்கள் என நினைக்கக் கூடாது. இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்'' என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டதற்கும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவது குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கமளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ``வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆளவேண்டும் ஆகிய இரண்டு இலக்குகள்தான் ஐயாவுக்கு (ராமதாஸ்) இருந்தன.

அன்புமணி
அன்புமணி

அதில் முதல் இலக்கு ஓரளவுக்கு நிறைவேறிவிட்டது. அதற்கு தற்காலிகமாக ஒரு தடை வந்திருக்கிறது. அதை நிச்சயமாக நீக்கிவிடுவோம். ஆனால், இரண்டாவது இலக்கான நாம் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது இன்னும் நிறைவேறவில்லை. அந்த இலக்கு பதவி ஆசைக்கானது அல்ல. முதலமைச்சர் ஆகவேண்டும் என்கிற பதவிவெறி நம்மிடம் இல்லை. நம்மிடம் மைக்ரோ அளவில் திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தும் அதிகாரம் இன்னும் நம்மிடம் வரவில்லை. ஒருமுறை நம்மிடம் அதிகாரம் கிடைத்தால், மிகச்சாதாரணமாக தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிவிடலாம். ஐயாவின் இலக்கு, 2026-ல் பா.ம.க-வின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரவேண்டும். கிராமங்களுக்குச் செல்வோம், மக்களைச் சந்திப்போம், மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம்'' என்றவர் தொடர்ந்து, ``வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்ததற்கு தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும், எந்தவொரு அமைப்பும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்குச் சோறு போடும், ரோடு போடும், கூலி வேலை சமூகம் தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. அந்த சமுதாயம் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதை ரத்து செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என எந்தக் கட்சியும், எந்தவொரு அமைப்பும் பேசவில்லை. அவர்களின் ஓட்டு வேண்டும். உங்களுக்கு கோஷம் போடவேண்டும், போஸ்டர் ஒட்ட அவர்கள் வேண்டும், ஆனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற வேண்டாமா?'' எனக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ``இந்திய அளவில் சமூக நீதிக்காக உழைக்கின்ற கட்சி பா.ம.க. எல்லாத் தகுதியும் இருந்தும் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆனபின்னும் நம்மால் ஆட்சியைப் பிடிக்கமுடிக்கவில்லை. வலிக்கிறது'' என வருத்தத்தோடு பேசி முடித்தார். அவருக்கு அடுத்ததாக, அரசியல் தீர்மானத்தை வாசித்து பேசத் தொடங்கிய மருத்துவர் ராமதாஸ்,

``இனிவரும் காலங்களில் கூட்டணி என்று சொன்னால், நம்முடைய தலைமையில்தான் கூட்டணி. வந்திருக்கின்ற எல்லோரும் உறுதியாக ஒரு விஷயத்தை எண்ணிக்கொள்ள வேண்டும். நாம் அங்கே போவோமா, இங்கே போவோமா, இப்போது இப்படிச் சொல்லிவிட்டு பின்னால் மாறிவிடுவோமா என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. நம்முடைய தலைமையை ஏற்றுக்கொண்டு வருபவர்களுடன்தான் இனி கூட்டணி.

ராமதாஸ்
ராமதாஸ்

இதை மனதில் ஏற்றிக்கொண்டு அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், எல்லா வார்டுகளிலும் நாம் போட்டியிடவேண்டும். லோக்கல் அன்டர்ஸ்டான்டிங் செய்துகொள்ளலாம் என யாராவது நினைத்தால், கட்சிக்குள் நாங்கள்போட்டு வைத்திருக்கிற சி.ஐ.டி-க்கள் எங்களிடம் சொல்லிவிடுவார்கள்.

இதுவரை நாங்கள் மன்னித்தோம். இனி அது நடக்காது உங்கள் பதவிகள் பறிபோய்விடும். அடுத்த கட்சிகளுக்குப் போய்விடலாம் என யாராவது நினைத்தால், போனால் போகட்டும் போடாதான். எலும்புத்துண்டுகளுக்காக ஓடும் நாய்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய வலிமை இளைஞர் சக்திதான். குறைந்தது 60,70 தொகுதிகளில் நம் கட்சி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறோம். அதை முறையாகப் பின்பற்றி கடுமையாக உழையுங்கள். மாவட்டச் செயலாளர்களின் ஒவ்வொரு நாள் செயல்பாட்டையும் நம் கட்சியில் அமைக்கப்பட்டுள்ள உளவுத்துறை கண்காணிக்கும். ஒருநாள் வீட்டில் படுத்துத் தூங்கினார் என செய்தி வந்தால் பதவி போய்விடும். 2026 நம் கனவு நினைவாகிற ஆண்டு. சமூக ஊடகம், திண்ணைப் பிரசாரம் இது இரண்டையும் வைத்துக்கொண்டு, பா.ம.க ஆட்சி அமைத்தது என இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் பேசவேண்டும். மற்ற கட்சிகள் நம்மை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' எனப் பேசி முடித்தார்.