Published:Updated:

`கிசான் முறைகேடு முதல் நின்றுபோன தேர்தல் வரை...’  - கடைசி நாளில் கலகலத்த சட்டசபை!

கலைவாணர் அரங்கம் - சட்டசபை
கலைவாணர் அரங்கம் - சட்டசபை

கொரோனா தாக்கம் ஒருபுறம் ஆளும்கட்சியைத் திணறடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சட்டசபையில் ஆளும் அரசுக்கு எதிராக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை எழுப்பி சட்டசபையைத் திணறடித்தனர் எதிர்க்கட்சியினர்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று துணைபட்ஜெட் உட்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழக சட்டமன்றம் மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கள்கிழமையன்று (14-ம் தேதி) சட்டசபை கூடியது. முதல் நாள் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஐந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று, ஆளும்கட்சியினர் தங்கள் துறையின் மசோதாக்களைத் தாக்கல் செய்து முடித்துவிட வேண்டும் என்று வேகம்காட்ட, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்விதத்தில் தங்களது எதிர்ப்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் கச்சைகட்டியதால் சட்டசபை பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நடந்தேறியது.

சட்டசபை
சட்டசபை

நீட் விவகாரத்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றதை எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்ட முயன்றனர். ஆனால், அ.தி.மு.க உறுப்பினர் இன்பதுரை, ``நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் கல்லறைமீது அவர்கள் மரணத்துக்குக் காரணம் `காங்கிரஸ் -தி.மு.க கூட்டணி’ என்று எழுத வேண்டும்’’ என்று கூறியது செவ்வாய்க்கிழமை காலையிலேயே சர்ச்சையானது. அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகர் உத்தரவையடுத்து சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில் நேற்று சட்டசபை கூட்டம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது.

குறிப்பாக கிசான் திட்டத்தில் முறைகேடு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு என ஆளும்கட்சிக்கு எதிராக அடுத்தடுத்த அஸ்திரங்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தது தி.மு.க. காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ``விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிதியில் 110 கோடி ரூபாய் முறைகேடாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மத்திய அரசு கொடுப்பதாக அறிவித்த 6,000 ரூபாய் முழுமையாக விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதற்காகப் போராடிய அப்பாவி விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மோசடி செய்த உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். கடந்த சில நாள்களாகவே கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தமிழக அரசுக்குப் பெரும் சிக்கலாகி வரும்நிலையில் அது சட்டசபையிலும் எதிரொலித்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைக்கண்ணு, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகளின் பதிவுகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்துவருவதாகவும் பதிலளித்தார். உடனே ராமசாமி, ``110 கோடி ரூபாய்க்குத் தவறு நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன என்பதையும், பணத்தை எவ்வாறு மீட்கப்போகிறீர்கள் என்பதையும் கூற வேண்டும்’’ என்று அழுத்தம் கொடுக்க, அதற்குத் துறை அமைச்சர் துரைக்கண்ணு ``கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதைப் பயன்படுத்தி சில தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டனர். 41 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார். கிசான் திட்ட முறைகேடு குறித்து தி.மு.க சார்பில் பொன்முடியும் கேள்விகளை எழுப்பினார்.

பொன்முடி பேசும் போது, ``இந்தத் திட்டத்தில் ஐந்து லட்சம் போலி பயனாளிகள் இருப்பதாக முதலமைச்சரே கூறியிருக்கிறார். அரசு செயலாளர் ஆறு லட்சம் போலி பயனாளிகள் இருப்பதாகவும் 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த முறைகேட்டில் ஆளும்கட்சியின் ஆதரவு இருக்குமோ என்ற ஐயப்பாடு இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

தி.மு.க உறுப்பினர்கள்
தி.மு.க உறுப்பினர்கள்

இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை தி.மு.க கிளப்பியது. டி.ஆர்.பி ராஜா இது குறித்துப் பேசும்போது, ``மன்னார் குடிப் பகுதியில், வீடு வழங்கும் திட்டத்தில் 140 வீடுகள் கட்டித்தரப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 10 வீடுகள் மட்டுமே கட்டித்தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் 400 கழிவறைகள் காணாமல் போயிருக்கின்றன. 2018-ல் இறந்த ஒருவருக்கு 2019-ல் வீடு வழங்கப்பட்டிருக்கிறது’’ என்று குற்றசாட்டுகளை அடுக்கினார். அதேபோல் தி.மு.க தரப்பிலிருந்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பு மறுத்துவிட்டது. ``மும்மொழிக் கொள்கையை அ.தி.மு.க அரசு ஆதரிக்கிறதா?’’ என்ற கேள்வியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ``இரு மொழியைக்கொள்கைதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்று மத்திய அரசுக்கு உறுதியாகத் தெரிவித்திருக்கிறோம். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்று கூறியிருந்தனர். எடப்பாடியும் இருமொழியைக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே இரண்டு குழுக்கள் இந்தக் கல்விக் கொள்கை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்த பிறகு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்” என்று தெரிவித்தார்.

வேதா இல்லம்: `நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!’ - அரசுடமையானது ஜெ. வாழ்ந்த வீடு

துணை பட்ஜெட் உட்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது குறித்த சட்ட முன்வடிவும், அதற்கு அமைக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளையை சட்டபூர்வமாக்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இதைத் தாக்கல் செய்தார். இந்த மசோதா உடனே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனை ஏழு ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே தமிழகத்தில், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. ஆனால், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மசோதாவில், ``கொரோனா தொற்று பரவலால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்த முடியவில்லை. எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலமானது இந்த ஆண்டு ஜூன் முதல் மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்கச் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா தொற்று முடிந்த பிறகு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு