Published:Updated:

சூப், முறுக்கு உபசரிப்பு... காய்ச்சி எடுக்கப்பட்ட கிருஷ்ணசாமி... அனைத்துக் கட்சிக் கூட்ட காரசாரம்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

10 சதவிகித இடஒதுக்கீட்டுக்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அந்த இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய பி.ஜே.பி தலைவர் தமிழிசை பேச்சுகூடப் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
அனைத்துக் கட்சிக் கூட்டம்

கல்வி, வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது, தமிழக அரசு. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்றன. காரசாரம், நகைச்சுவை எனக் கலகலப்பாகவே நடந்துமுடிந்தது கூட்டம்.

கூட்டத்தை நடத்திய பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர்
கூட்டத்தை நடத்திய பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர்
விகடன்

முதலில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். விஜயபாஸ்கருக்குச் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்தான் குறிப்புகளையும் புள்ளிவிவரங்களையும் அமைச்சருக்கு எடுத்து, கொடுத்துக்கொண்டிருந்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அங்கே பெரிய ரோல் இல்லை. விஜயபாஸ்கர்தான் கூட்டத்தை முறைப்படுத்திக் கொண்டுபோயிருக்கிறார்.

விஜயபாஸ்கர் ஆரம்பத்தில் சம்பிரதாயமாக உரையாடி முடித்தபிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காங்கிரஸ், பி.ஜே.பி., மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சித் தலைவர்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினார்கள். மற்ற 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

கூட்டத்தில் தமிழிசை
கூட்டத்தில் தமிழிசை

``வரலாற்றுப் பிழையைச் செய்துவிடாதீர்கள். இந்த ஆட்சியைப் பாதுகாக்கத் தடைகள் இருந்தால், அதையெல்லாம் தகர்த்துவிட்டு, இடஒதுக்கீட்டுக்காகப் போராடுங்கள். பி.ஜே.பி-யின் சூழ்ச்சி வலையில் சிக்கிவிட வேண்டாம்'' என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சொன்னதும், உடனே பி.ஜே.பி. தலைவர் தமிழிசை, ``சூழ்ச்சி, வலை போன்ற வார்த்தைகளை தொல்.திருமாவளவன் பயன்படுத்த வேண்டாம்'' என்றார்.

``இடஒதுக்கீட்டில் மத்திய அரசு காட்டும் முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கிறது'' என தொல்.திருமா சொல்ல... ``ஏமாற்றம் அல்ல. மாற்றம் அளிக்கிறது'' என்றார் தமிழிசை. இப்படி இருவருக்கும் இடையே விவாதம் தொடர்ந்துகொண்டிருந்தபோது பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, ``இடஒதுக்கீடு தொடர்பாக மட்டும் பேசுங்கள்'' என வலியுறுத்தினார். உடனே தொல்.திருமாவளவன், ``அன் பார்லிமென்ட் வார்த்தைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை'' எனச் சொன்னார். உடனே தமிழிசை, ``அது மரியாதைக்குரிய வார்த்தை இல்லை'' என்றார்.

10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்து பி.ஜே.பி சார்பாகப் பேசிய தமிழிசைகூட, காரசாரமான கருத்துகளை முன்வைக்கவில்லை. ஆனால், பி.ஜே.பி-யைவிட ஆக்ரோஷமாகக் கருத்துகளை முன்வைத்தார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அதனால் அவருக்குக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மற்றவர்களின் கருத்துகளில் புகுந்து வாதம் செய்தபடியே இருந்தார், கிருஷ்ணசாமி. ம.தி.மு.க-வின் மல்லை சத்யா, ``10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய கட்சிகள் 5 தான். ஆனால், 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே அதற்கு ஆதரவு இல்லை. முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இங்கே மைனாரிட்டி ஆகிவிட்டது'' என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ``இதையே சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவந்து, 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன எனச் சேர்க்க வேண்டும்'' என்றார். உடனே புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ``பெரும்பான்மை இதுவல்ல. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்'' என்றார். ``பொதுமக்களின் பிரதிநிதிகளாகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்'' என மல்லை சத்யா சொல்ல... ``ஒன்றிய வாரியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்றார் கிருஷ்ணசாமி.

இனிப்பு மற்றும் காரக் கொழுக்கட்டை, முறுக்கு, வடை, கேக் என அடுத்தடுத்து சுவையான பலகாரங்கள் பரிமாறப்பட்டிருக்கிறது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் இப்படி உபசரிப்பு நடந்ததில்லை.

தொடர்ந்து கிருஷ்ணசாமி குறுக்கிட்டுக் கொண்டிருந்தபோது கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ``நீட் தேர்வுக்கு இப்படி வாக்கெடுப்பு நடத்தலாமா?" என தனியரசு கேட்டார். ``பார்த்துப் பேசுங்கள்..'' என்றார் கருணாஸ். தமிமுன் அன்சாரி, ``சாத்தியமுள்ள விஷயங்களைப் பேசுங்கள்'' என கிருஷ்ணசாமியைப் பார்த்துச் சொன்னார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் சிலரும் கிருஷ்ணசாமியின் நடவடிக்கையை முணுமுணுத்தார்கள்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி
விகடன்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியபோது, "முன்னேறிவிட்டவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?'' எனக் கேள்வி எழுப்பினார். "சாதியே இல்லை என்கிற நிலை வரும்போது சமத்துவத்தைப் பற்றிப் பேசலாம். அது இருக்கும்போது எப்படி இயங்க முடியும். இன்னும் ஆணவக் கொலைகளும் இரட்டைக் குவளை முறையும் அமலில் இருக்கிறது'' எனச் சீமான் சீற... உடனே கிருஷ்ணசாமி, "அந்தப் பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து நீக்கிவிடலாமா? ஆணவக் கொலைகளைச் செய்கிறவர்களை நீங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?'' என கிருஷ்ணசாமி கேட்க... "ஏற்றுக்கொள்ள மாட்டோம்!'' என்றார் சீமான்.

``அவர்கள் அல்வா கொடுக்கவில்லை.. ஃபெவிகால் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சாப்பிட்டால் வாய் ஒட்டிக் கொள்ளும். அதன்பிறகு சமூகநீதி பற்றிப் பேசவே முடியாது'' என தமிமுன் அன்சாரி சொன்னதும் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். ``100 நாள் வேலை திட்டத்தில், எந்த முன்னேறிய சாதியினர் வேலை பார்க்கிறார்கள்... சாலைப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்களில் முன்னேறிய சமூகத்தினர் யாராவது இருக்கிறார்களா... அவர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றா... பசித்தவனும் ஏப்பம் விடுபவனும் ஒன்றா?'' எனக் கேள்வி எழுப்பினார் தமிமுன் அன்சாரி.

``ஒரு சொட்டு வேர்வை துளி சிந்தாமல், உண்ணாவிரதம் இருக்காமல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என ஒரு போராட்டம் நடத்தாமல் எளிதாக இடஒதுக்கீட்டை வாங்கிக்கொண்டு போகிறார்கள் இது என்ன நீதி? அந்த அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது'' எனக் கொதித்தார் தனியரசு.

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு
கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு
விகடன்

வாதங்களை ஸ்டாலின் தொடங்கிவைக்க, நிறைவாகத் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி முடித்துவைத்தார். நிறைய குறிப்புகளுடன் புள்ளிவிவரங்களோடு வீரமணி ஆழமாக பேசியபோது அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். 40 நிமிடம் அவர் பேசியபோது பெரிய குறுக்கிடு எதுவும் வரவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மூன்று பேரையும் இடஒதுக்கீட்டுக்காகப் புகழ்ந்து பேசினார். ``கூட்டணி, தேர்தல் அரசியலை எல்லாம் ஒதுக்கிவிட்டுத் திறந்த மனதோடு இந்த விஷயத்தை நாம் பேச வேண்டும். `தலைக்கு ஒரு சீக்காய். தாடிக்கு ஒரு சீக்காய் எனப் போட முடியாது' என தந்தை பெரியார் சொல்வார். அப்படி முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 69-ல் இருந்து எடுக்கக் கூடாது. 31 சதவிகிதமே முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டாகத்தான் இருக்கு.

சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்றபோது பேசிக் கொண்டிருந்தபோதே ஊசி போட்டுவிட்டார். 'என்ன டாக்டர் எனக்கு அவகாசமே கொடுக்காமல் ஊசி போட்டுவிட்டீர்கள்'னு கேட்டேன். அதற்கு டாக்டர், `பேசிக்கொண்டிருக்கும்போது ஊசி போட்டால்தான் உங்களுக்கு வலி தெரியாது' என்றார். அப்படித்தான் இந்த நடவடிக்கை இருக்கிறது'' என வீரமணி சொல்ல... அமைச்சர் விஜயபாஸ்கர், ``நாங்க.. ஊசியைக்கூடக் கையில் எடுக்கவில்லை. அந்த இடத்துக்கே நாங்கள் இன்னும் வரவில்லை'' எனப் பதில் அளித்தார்.

10 % இட ஒதுக்கீட்டில் அரசின் நிலைப்பாடு என்ன? - பேரவையில் ஓ.பி.எஸ் விளக்கம்

``அம்மாவின் வழியில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவோம். 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவுசெய்வோம்'' என பன்னீர்செல்வம் அறிவித்ததும் கூட்டம் நிறைவடைந்தது. பொதுவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பது வழக்கம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் மிஸ்சிங். இரண்டு நாள்கள் முன்புதான் `நீட் தேர்வுக்கு ஆதரவு' என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், தே.மு.தி.க. சார்பில் பங்கேற்ற இளங்கோவன் எதிர்த்துப் பேசியது ஆச்சர்யம். செ.கு.தமிழரசனின் குடியரசு கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி எனச் சில கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அ.தி.மு.க. சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ ஆனவர்கள். அவர்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தவர்கள் மற்றவர்களை ஏன் அழைக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு முதலில் வெல்கம் டிரிங்ஸாக மாம்பழ ஜூஸ் கொடுத்திருக்கிறார்கள். கூட்டம் ஆரம்பித்தபிறகு, இரண்டு முறை காபி தரப்பட்டிருக்கிறது. கூட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த நிலையில், அதன்பிறகு சூப் விநியோகம் நடந்திருக்கிறது. இனிப்பு மற்றும் காரக் கொழுக்கட்டை, முறுக்கு, வடை, கேக் என அடுத்தடுத்து சுவையான பலகாரங்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.

”69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது!”- மு.க.ஸ்டாலின்

கூட்டம் முடிய தாமதமானதால் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ``அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் போங்கள்'' என விஜயபாஸ்கர் சொன்னார். சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வாசலில் நின்று, அனைவரையும் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார். ஆனால், பலர் சாப்பிடவில்லை.