Published:Updated:

அதிமுக: சட்டமன்றத் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்., கொறடா வேலுமணி!-எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

ஓ.பி.எஸ் - வேலுமணி
ஓ.பி.எஸ் - வேலுமணி

ஏற்கெனவே தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவிக்கும் சம்பிரதாயக் கூட்டமாகவே இருந்தது. ஆனால், இதுதவிர, முக்கியமான பல விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.

அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சித் து.தலைவர், கொறடா, பொருளாளர் உள்ளிட்ட ஆறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுக்கு நடந்தபோல் எந்தவிதக் களேபரமும் இல்லாமல், சுமுகமாகவே இந்தத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. ஆனால், மிக முக்கியமான பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 21-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கவிருக்கிறது. அ.தி.மு.க-வின் சார்பில் சட்டமன்றக் குழுத் தலைவர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டபோதும், து.தலைவர், கொறடா ஆகிய பொறுப்புகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமலேயே இருந்தனர். குறிப்பாக, சட்டமன்றத்தில் கட்சியின் கொறடா பொறுப்பு என்பது மிக முக்கியமானது. கட்சித் தலைமையின் கொள்கைகளின்படி, சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ தமது கட்சியின் உறுப்பினர்களை வழிநடத்தும் பொறுப்பு கொறடாவையே சேரும்.

வேலுமணி
வேலுமணி

இந்தநிலையில், இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. 12:15 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் 3 மணி வரைக்கும் நடைபெற்றது. முதலில், கீழ்த்தளத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ, வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு மேல்தளத்தில் ஏற்கெனவே வந்து காத்திருந்த எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் இறுதியில், அ.தி.மு.க சட்டமன்றத் துணைத் தலைவராக, ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணைக் கொறடாவாக அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுக்கு இரண்டு நாள்கள் கூட்டம், பல மணி நேரம் இழுபறி நீடித்ததுபோல் இல்லாமல் மிகவும் சுமுகமாகவே இந்தக் கூட்டம் நடந்து முடிந்தது. ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவிக்கும் சம்பிரதாயக் கூட்டமாகவே இருந்தது. ஆனால், இதுதவிர, முக்கியமான பல விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்,

''எந்தெந்தப் பொறுப்புக்கு யார் யார் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். சசிகலா தொடர்ச்சியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேசுவதுபோல் ஆடியோ வெளியிட்டுவரும் இந்த நேரத்தில் ஓ.பி.எஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வர வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் விருப்பம். ஒருபுறம், அவர் மட்டும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் தனித்திருந்தால், அது சரியாக வராது என எடப்பாடி நினைத்தார். அதேபோல, ஓ.பி.எஸ்-ஸும் `நான் சசிகலாவுடன் நெருக்கமாக இல்லை’ என்று தொண்டர்களிடம் நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எம்.எல்.ஏ-க்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தனக்கு வேண்டிய நபர் ஒருவர் கொறடாவாக வர வேண்டுமென நினைத்தார் எடப்பாடி. அந்த அடிப்படையில் தங்கமணி அல்லது வேலுமணி ஆகிய இருவரில் யாராவது ஒருவரை கொறடாவாகத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்த்தோம். அந்த வகையில் வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஒவ்வொரு சமூகத்துக்கும் பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் பட்டியல் சமூகத்திலிருந்து சு.ரவியும், நாயுடு சமூகத்திலிருந்து கடம்பூர் ராஜூவும், வன்னியர் சமூகத்திலிருந்து கே.பி.அன்பழகனும், நாடார் சமூகத்திலிருந்து மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனோஜ் பாண்டியனுக்கு கொறடா பதவி அளிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் சிறிது நேரம் பேசிப்பார்த்தார். ஆனால், இ.பி.எஸ் தரப்பில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்தக் கூட்டத்தில் சசிகலாவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துத்தான் அதிகமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 'நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே அந்தக் குடும்பத்துக்கு நாம் எவ்வளவோ செய்திருக்கிறோம். மீண்டும் அந்தக் குடும்பத்தின் பிடிக்குள் கட்சி சென்றுவிடக் கூடாது. அவர்களின் வீட்டு வாசலில் காலையிலிருந்து இரவு வரைக்கும் காத்துக் கிடந்திருக்கிறோம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக்கொண்டு இரவு, பகல் பாராமல் யார் யாரோ நம்மை ஆட்டிவைத்ததையெல்லாம் மறந்துவிடாதீர்கள். அம்மா கட்டிக் காத்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து காப்பாற்ற வேண்டும்' என உருக்கமாகப் பேசினார். அவர் பேசியதை அனைவரும் ஆமோதிக்கும் விதமாகவே இருந்தனர்.

அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?

தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் சார்பில் பேசுபவர்கள் தங்களின் இஷ்டத்துக்குப் பேசுவதைத் தவிர்த்து, கட்சி வழங்கும் வழிகாட்டுதல்படிதான் பேச வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இனி யாரும் அப்படி நடந்துகொண்டால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசன முடிந்து வெளியே வரும் நிர்வாகிகள்
ஆலோசன முடிந்து வெளியே வரும் நிர்வாகிகள்

அதன் தொடக்கமாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால், செய்தித் தொடர்பாளர் புகழேந்தி உள்ளிட்ட பலரையும் கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு