Published:Updated:

`தலைமையிடம் ஊடகங்களின் வழியாகப் பேசாதீர்கள்’ - காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது என்ன?

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
News
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ( Twitter )

இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், இன்று சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, உத்தராகண்ட் போன்ற மாநிலங்களவை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்றது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Twitter

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதை அடுத்து அப்போதைய தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்யக் கோரிக்கையும் வைத்திருந்தனர். தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸில் பல்வேறு சர்ச்சைகள் புகைந்து கொண்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்நிலையில், இன்று காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இன்று காலை சோனியா தலைமையில் கூட்டம் தொடங்கியது. கொரோனா பேரிடருக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் முதல் கூட்டம் இதுவே. பா. சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஜி-23 உறுப்பினர்கள் (காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்களின் குழு) உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Twitter

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ``சில தினங்களுக்கு முன்னர், தேவையில்லாத அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு விற்கப்படும் என்று மோடி பேசியிருந்தார். இந்தியாவில் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்பதற்கான அடையாளம் தான், பல தசாப்தங்களாக பெரும் முயற்சியுடன் கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும், பொருளாதார முன்னேற்றத்துக்கு மட்டுமில்லாது, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் வலுவடைய வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்த எதையுமே மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், ``அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு நூறு ரூபாய், எரிவாயு சிலிண்டரின் விலை 900 ரூபாயாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா? இந்த விலை உயர்வு நாடு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சமீபத்தில் லக்கிம்பூர்-கேரியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் பாஜக-வின் மனநிலை என்ன என்பதைக் கூறுகிறது. சமீப காலமாக, ஜம்மு -காஷ்மீரில் திடீரென கொலை வழக்குகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர் தெளிவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்'' என்றார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Twitter

மேலும், `` புதிய தலைவர் தேர்வு செய்வது தொடர்பாகவும், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பை வெளியிடுவார். நமக்கு முன்பு பல்வேறு சவால்கள் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், நாம் ஒற்றுமையாக இருப்பதுதான் நமக்கு பலம். ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், கட்சியின் நலனில் மட்டுமே கவனம் செலுத்தினால், தேர்தல் முடிவுகள் நன்றாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கட்சித் தலைமையிடம் ஊடகங்களின் வாயிலாகப் பேசாதீர்கள். எதுவாக இருந்தாலும், வெளிப்படையான விவாதத்திற்குத் தயாராக இருப்போம்" என்று பேசி முடித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ``தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்று யாரும் கட்சியில் இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. நாங்கள் ஜி-23 குழுவைச் சேர்ந்தவர்கள். என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்க மாட்டோம். பிரச்னைகள் குறித்துக் கேள்வியெழுப்புவோம்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Twitter

கூட்டம் முடிந்த பின்னர், ``ராகுல் காந்தி தலைவர் ஆகவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதையே அனைவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். இனி முடிவு அவருடையது. ஜி-23 குறித்து அங்குக் குறிப்பிடவே இல்லை. அவர்களும் அந்த கூட்டத்திலிருந்தனர். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி பேசியிருந்தார். மேலும், `சோனியா காந்தி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமை யாரும் சந்தேகப்படவில்லை' காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தொடர் சரிவினை சந்தித்துவரும் சூழல், இன்று அந்த கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.