Published:Updated:

6 டிச.1992: 70,000 கரசேவகர்கள்… 195 துணை ராணுவக்குழுக்கள்… அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 4

அயோத்தி ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி

தயார்நிலையில் இருக்கவேண்டி 5 டிசம்பர் 1992 அன்று 195 குழுக்கள் அடங்கிய மத்திய துணை ராணுவப்படைகளை அயோத்தியில் களமிறக்கியது மத்திய அரசு. மற்றொரு பக்கம் மொத்தம் 70,000 கரசேவகர்கள் அயோத்தியில் குழுமியிருந்தார்கள்.

6 டிச.1992: 70,000 கரசேவகர்கள்… 195 துணை ராணுவக்குழுக்கள்… அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 4

தயார்நிலையில் இருக்கவேண்டி 5 டிசம்பர் 1992 அன்று 195 குழுக்கள் அடங்கிய மத்திய துணை ராணுவப்படைகளை அயோத்தியில் களமிறக்கியது மத்திய அரசு. மற்றொரு பக்கம் மொத்தம் 70,000 கரசேவகர்கள் அயோத்தியில் குழுமியிருந்தார்கள்.

Published:Updated:
அயோத்தி ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி

அயோத்தி தீர்ப்பு யாருடைய வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது அல்ல என ஒற்றுமை காக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் இன்றைய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால் இதே ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1949-ல் இந்து மகா சபா சிந்தித்திருந்தால் 1992-ல் விஷ்வ இந்து பரிஷத் சிந்தித்திருந்தால் மதம் என்றாலே மண்ணின் மக்கள் அச்சத்துடன் அணுகும் போக்கு ஏற்பட்டிருக்காது, மதம் என்றாலே அரசியலுக்கானது என்னும் பார்வை பதிந்திருக்காது. ஆனால் அன்று நடந்தது வேறு.

கல்யாண் சிங் கொடுத்த வாக்குறுதி 2 நவம்பர் 1991-ல் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் கூட்டத்திலேயே புதைக்கப்பட்டது எனலாம். ஏனெனில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய சர்ச்சைக்குரிய இடத்தின் சுற்றுப்பட்டு நிலத்தில் அதற்கடுத்த சில காலங்களிலேயே கரசேவகர்கள் தங்களது பணிகளைத் தொடங்கியிருந்தார்கள். ஜூலை 1992-ல் கோயில் கட்டுமானத்துக்கான பணிகளை கரசேவகர்கள் தொடங்கியிருந்தபோது மத்திய அரசு உத்தரப்பிரதேச அரசை அதுகுறித்துக் கேள்வி எழுப்பியது. 18 ஜூலை 1992-ல் நடைபெற்ற மற்றொரு தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. இருந்தும் கரசேவகர்களின் செயல்பாடுகள் மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலையிட்டு கரசேவகர்களுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோயில்கட்டுமானப் பணிகளை நிறுத்தினார். இவை அத்தனை குறித்தும் அரசு 1993-ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை பதிவு செய்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
``சுமூகமாக நகர்ந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தையில் குழப்பத்தை ஏற்படுத்தவே விஷ்வ இந்து பரிஷத் இந்த முடிவை எடுத்தது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது” என்று அடிக்கோடிடுகிறது வெள்ளை அறிக்கை.
நரசிம்மராவ்
நரசிம்மராவ்

பாபர் மசூதி இடம் இடிக்கப்பட்ட அன்று நரசிம்மராவ் தொலைக்காட்சியில் அதுகுறித்த செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்கிற விமர்சனம் பல ஆண்டுகாலமாக இருந்துவந்தது உண்டு. ஆனால் அதற்குப் பல மாதங்கள் முன்பிருந்தே சர்ச்சைக்குரிய இடத்தை அவர் காக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசின் இதே வெள்ளை அறிக்கை விவரிக்கிறது.

27 ஜூலை 1992-ல் அயோத்தி குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் எழுந்தபோது பதிலளித்த நரசிம்ம ராவ், ``இந்த நிலையைச் சீராக்கி, எந்தத் தரப்பையும் குற்றவாளியாக்காமல் இதில் தொடர்புடைய அத்தனைத் தரப்பின் பார்வைக்கும் இந்த தீர்வின் வழியாக நிவாரணம் வழங்குவதே மத்திய அரசின் நோக்கம் (Defuse the situation, avoid the confrontationist approach and to bring about a reconciliation of the views of various concerned parties) என்கிறார். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் பிரதமர் அலுவலகத்திலேயே அதுதொடர்பாக தனி சிறப்பு செல் ஒன்று அமைக்கப்படுகிறது. முந்தைய பிரதமரின் ஆட்சிகாலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முடித்துவைக்கப்படாமல் இருந்தவை அத்தனையும் ஆய்வு செய்யப்படுகின்றன. இணைகோடாக தனிநபர்கள், குழுக்கள், பத்திரிகையாளர்கள், அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்களுடன் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் சந்திப்புகளை நிகழ்த்தியது.

அரசு தரப்பு இந்த பிரச்னைக்கு என்று தனிப்பட்ட தீர்வு எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் பிரதமருடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த விவகாரத்தில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது என வெள்ளை அறிக்கை விளக்குகிறது. குறிப்பாக பிரதமர் என்கிற பொறுப்பில் இருந்த நரசிம்மராவ் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையின் அவசியத்தையும் முன்னிறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களின் பொறுப்புணர்வை இந்த விவகாரத்தில் வேண்டி அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்கிறது அறிக்கை.

கலவரத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு…

3 அக்டோபர் 1992-ல் மத்திய உள்துறை அமைச்சர் சங்கர் ராவ் சவான் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாபர் மசூதி கமிட்டிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.தொடர் பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பி.பி.லால் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட நடுநிலையான சில தொல்லியல் ஆய்வு முடிவுகளும் விவாதிக்கப்பட்டன. 8 நவம்பர் 1992-ல் மீண்டும் பேச்சுவார்த்தைக்காக கூடுவதென முடிவு செய்து குழு கலைந்தது. அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையேதான் விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை அமைப்பான கேந்திரிய மகாதர்ஷக் மண்டல் 29 மற்றும் 31 அக்டோபர் 1992-ல் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தில்தான் 6 டிசம்பர் 1992-ல் மீண்டும் கரசேவையைத் தொடங்குவது என முடிவுசெய்யப்பட்டது. ``சுமூகமாக நகர்ந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தையில் குழப்பத்தை ஏற்படுத்தவே விஷ்வ இந்து பரிஷத் இந்த முடிவை எடுத்தது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது” என்று அடிக்கோடிடுகிறது வெள்ளை அறிக்கை.

பாபர் மசூதி
பாபர் மசூதி

இதையடுத்து அரசும் தன்னை நெருக்கடியான சூழல்களுக்காகத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தது. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை மத்திய அரசு கையகப்படுத்தக்கோரிய மனு தனியாரால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சுவாமி சின்மயானந்தா மற்றும் விஜயராஜே சிந்தியா கைப்பட எழுதப்பட்ட கடிதங்களை உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் கொடுத்தது. அதில் மதம் சார்ந்த சடங்குகளுக்காகதான் கரசேவகர்கள் அயோத்தியில் கூட இருப்பதாகவும் மற்றபடி வன்முறைகள் எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சியும் விஷ்வ இந்து பரிஷத்தும் இணைந்துகொடுத்த அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தும் தயார்நிலையில் இருக்கவேண்டி 5 டிசம்பர் 1992 அன்று 195 குழுக்கள் அடங்கிய மத்திய துணை ராணுவப்படைகளை அயோத்தியில் களமிறக்கியது மத்திய அரசு. மற்றொரு பக்கம் மொத்தம் 70,000 கரசேவகர்கள் அயோத்தியில் குழுமியிருந்தார்கள். மதச்சடங்குகள் நடைபெற இருப்பதாக அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில்தான் 6 டிசம்பர் 1992 மதியம் 12:20 மணிக்குச் சரியாக அந்தச் சம்பவம் நிகழ்ந்தது…

(அடுத்த பகுதியில் நிறைவடையும்)

குறிப்புகள்:

White Paper On Ayodhya- Government of India, Feb 1983

Architecture of the Baburi Masjid of Ayodhya, R.Nath, Historical Research Documentation Programme, May 1995

Ascetic Games: Sadhus,Akharas and the Making of the Hindu Vote, Dhirendra K.Jha, Apr 2019

Ayodhya:The Dark night, Krishna Jha and Dhirendra K.Jha,Harper Collins, Dec 2012

Anatomy of Confrontation:Ayodhya and the Rise of Communal Politics in India, Sarvepalli Gopal, Zed Books Ltd, Mar 1992