துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ரேஞ்ச் ரோவர் கார் விவகாரம் வெளிச்சத்துக்கு வர... அது அவருடைய மகன்களின் தொழில் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த விஷயத்தை விஸ்வரூபம் ஆக்கியிருக்கிறது.

பன்னீர்செல்வம் பயன்படுத்தும் சுமார் 1.50 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் விஜயந்த் டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இதன் இயக்குநர்களாக ரவீந்திரநாத் குமார் எம்.பி-யும் ஜெயப்ரதீப்பும் இருக்கிறார்கள். இவர்கள் பன்னீர்செல்வத்தின் மகன்கள். பன்னீர்செல்வம் வசமிருக்கும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம், திருப்பூரில் மேற்கொள்ளப்போகும் ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டை அரசிடம் பதிவுசெய்திருக்கிறது விஜயந்த் டெவலப்பர்ஸ். அதாவது, அப்பா வசம் இருக்கும் துறையிடம் மகன்கள் நடத்தும் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
``இது ஆட்சியையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சி. தந்தையின் துறையிலேயே, தமக்குச் சாதகமான உத்தரவு பெற முயல்வதும், அதற்குத் தந்தையின் துறை அனுமதி கொடுப்பதும், இன்னொரு லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம்'' என அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

பன்னீர்செல்வம் தர்யுத்தம் நடத்தி எடப்பாடியுடன் ஐக்கியமான பிறகு அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் முக்கியமானது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகார். இதுபற்றி அறப்போர் இயக்கம் 2017 டிசம்பரில் பன்னீர்செல்வம் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகார் அளித்தது. அந்தப் புகாரில் உள்ள முக்கியமான விஷயங்கள் இவை.

* பன்னீர்செல்வம் தனக்கும் மனைவிக்கும் உள்ள மொத்த சொத்து என 2006-ம் ஆண்டு காட்டிய கணக்கு 20 லட்சம் ரூபாய் மட்டுமே. 2006 முதல் 2017 வரை தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தையும் ரவீந்திரநாத் குமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 31.3 ஏக்கர் நிலத்தையும் மகனின் நிறுவனமான ஜெயம் விஜயம் என்டர்ப்ரைசஸ் மூலம் 41.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27.6 ஏக்கர் நிலத்தையும் ஜெயப்ரதீப் 21.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22.6 ஏக்கர் நிலத்தையும் வாங்கியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 106.5 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்பாலானவை 2011-ம் ஆண்டு வாங்கப்பட்டிருக்கின்றன.

* Vani Fabrics Private Limited, Willownet Exim Private Limited, Vyjayanth Developers Private Limited, Xllent Marinline Private Limited ஆகிய நான்கு பிரைவேட் லிமிட்டட் நிறுவனங்களில் ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் ஆகியோர் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் உள்ளனர். இந்த நிறுவனங்கள் எந்த அடிப்படையில் பன்னீர்செல்வத்தின் மகன்களை இயக்குநர்களாகத் தேர்ந்தெடுத்தன என்னும் கேள்வி எழுகிறது. Xllent Marinline Private Limited நிறுவனம் 23-03-2015-ல்தான் தொடங்கப்படுகிறது. வெறும் 5 லட்சம் ரூபாய் பங்கு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் 2016 வருடாந்திர வர்த்தகம் (Turn over) 30 கோடி ரூபாய்.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு 2016-ல் ரவீந்திரநாத், ஜெயப்ரதீப் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இணைந்தனர். இவர்கள் பங்குகளில் 33 சதவிகிதம் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். 30 கோடி ரூபாய் வருடாந்திர வர்த்தகம் கொண்ட இந்த நிறுவனம் இப்படி இவர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டது பினாமி பரிமாற்றத்தின் அறிகுறியாகும்.

* ஓ.பி.எஸ் மகன்களைத் தவிர Xllent Marineline Private Limited நிறுவனத்தில் பங்குதாரர்களான மற்றவர்கள் கடல் வழிப் போக்குவரத்துத் துறையில் சில வருடங்களாகப் பங்கு பெற்று வருகின்றனர். இவர்கள் Xllent Cargo Private Limited, Xllent Mariline Private Limited என்னும் இரு நிறுவனங்களில் பங்கு வைத்திருக்கிறார்கள். Xllent Marineline Private Limited தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கும் இந்த இரு நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த நிறுவனங்களும், தொடங்கப்பட்டுப் பல வருடங்கள் ஆனாலும் 2016-ல் 3.92 கோடி ரூபாயும் மற்றும் 9.57 கோடி ரூபாயும் வருடாந்திர வர்த்தகம் காட்டுகின்றன. ஆனால், ஓ.பி.எஸ் மகன்கள் பங்குதாரர்களாக உள்ள Xllent Marineline Private Limited ஒரே வருடத்தில் 30 கோடி ரூபாய் வருடாந்திர வர்த்தகம் காட்டியுள்ளது.
தொடர்பற்ற இருவரை திடீரென்று லாபம் பார்க்கும் ஒரு நிறுவனம் தம் பங்குதாரர்களாகச் சேர்க்காது என்பதால் Xllent Cargo Private Limited, Xllent Mariline Private Limited ஆகிய நிறுவனங்களும் அவற்றின் பங்குதாரர்களும் விசாரணை செய்யப்பட வேண்டும். ஒரே வருடத்தில் எப்படி 30 கோடி ரூபாய் வருடாந்திர வர்த்தகம் காட்டியுள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும்.

* Vani Fabrics Private Limited நிறுவனத்தில் ரவீந்திரநாத், ஜெயப்ரதீப் ஆகியோர் மொத்தப் பங்குகளான 90,000-த்தில் 30,000 பங்குகள் வைத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் வருடாந்திர வர்த்தகம் 10 கோடி ரூபாய். இதில், ரவீந்திரநாத், ஜெயப்ரதீப் 30 லட்சம் முதலீடாகவும் மற்ற இரு பங்குதாரர்களான ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் 2.05 கோடி முதலீடு செய்துள்ளனர். இவர்களின் வருமானம் மற்றும் இவர்களின் மற்ற நிறுவனங்களின் வருமானமும் விசாரிக்கப்பட வேண்டும்.
* பன்னீர்செல்வம் 2015 மார்ச்சில் முதல்வராக இருந்தபோது அரசாணை (GO Ms. 45 Commercial Taxes and Registration Department) ஒன்றை வெளியிடுகிறார். நூல் விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு TNVAT, 2006 சட்டப்படி கட்ட வேண்டிய வரியில் இருந்து விலக்கு அளிக்கிறது. இந்த வரிவிலக்கு மில் தொழிலில் இருக்கும் தம் மகன்களுக்கு உதவி செய்யவே என்று கூறப்படுகிறது.
இவையெல்லாமே அறப்போர் அளித்த புகார். ஆனால், இந்தப் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது.

இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதியும் 2018 மார்ச் 10-ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸிடம் புகார் அளித்தார். அதில், பன்னீர்செல்வத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியல் போட்டிருந்தார். அதன் விவரம்:
* மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு, சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவரின் குடும்பத்தினர் பெயரில் ஏராளமான முதலீடுகளை ஓ.பன்னீர்செல்வம் செய்திருக்கிறார். தன்னுடைய அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

* தன் தொழில் பங்குதாரர் ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் பெயரிலும் பல பினாமிகளின் பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார்.
* 2014-2015-ம் நிதியாண்டில், பன்னீர்செல்வத்தின் வருமானம் 5 லட்சத்து 80 ஆயிரத்து 875 ரூபாய் என்று வேட்புமனுவில் சொல்லியிருக்கிறார். அந்த நிதியாண்டில் எம்.எல்.ஏ-வுக்கான அடிப்படை மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 12 மாதத்துக்கு 6.60 லட்சம் ரூபாய். இதுதவிர அந்த ஆண்டு 17.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரையும் வாங்கியிருக்கிறார். எனவே, அவர் தவறான வருமானத்தைத் தாக்கல் செய்திருக்கிறார்.
* பெரியகுளத்தில் உள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்பையும் மறைத்திருக்கிறார்.
* 2011 தேர்தலின்போது மனைவி விஜயலட்சுமிக்கு 24.20 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்துகள் இருந்தாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், 2016 தேர்தலில் விஜயலட்சுமிக்கு 78 லட்சம் ரூபாய்க்குச் சொத்துகள் இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். வருமானமே இல்லாத குடும்பத் தலைவி விஜயலட்சுமிக்கு இவ்வளவு வருமானம் எப்படி வந்தது?
* தேனியில் உள்ள போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தைத் தனது பினாமி மூலமாகச் சந்தை விலையைவிடக் குறைவாக வாங்கியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
* 150 ஏக்கர் பரப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு பினாமி மூலமாக வாங்கியிருக்கிறார்.

* போடியில் நடக்கும் ஏல மார்க்கெட்டை பன்னீர்செல்வம்தான் நிர்ணயம் செய்கிறார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் 200 கோடிக்கு ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள்.
* பன்னீர்செல்வத்தின் மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக இருக்கிறார்கள். 3 மிகப்பெரிய நிறுவனங்களின் இயக்குநராகப் பதவி ஏற்கும்போது ஜெயபிரதீப்க்கு 25 வயதுகூட நிரம்பவில்லை. சிறிய வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படிச் செய்ய முடிந்தது?
* மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் 2016 ஜூன் முதல் நவம்பர் வரை 6 மாதத்தில் பன்னீர்செல்வத்துக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.பாரதி அளித்த இந்தப் புகார்களின் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஜூலையில் வழக்குப் போட்டார் ஆர்.எஸ்.பாரதி.

``பன்னீர்செல்வம், தன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைச் சட்டவிரோதமாகச் சேர்த்திருக்கிறார். இதுபற்றி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருக்கும் பொது ஊழியரான பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஆர்.எஸ்.பாரதி.
இந்த மனு 2018 ஜூலை 16-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ,``புகார் மீதான விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸ் தாமதம் செய்வது ஏன்? சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றிய டைரியில் பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெற்றிருப்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது" எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ``பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது'' என நீதிமன்றத்தில் பதில் அளித்தது அரசு.

தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன்னுடைய மற்றும் மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களைப் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அதில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை.
பன்னீர்செல்வம் மீதான புகார்கள் மீது பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் `முன்னேற்றம்' இருந்திருக்கும்.