Published:Updated:

மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

ஆபரேஷன் 23... எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?

ஆபரேஷன் 23... எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

Published:Updated:
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

“தே ஆர் வெரி அடமென்ட்... யூ ஷுட் ஹேண்டில் திஸ்...” - தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27-ம் தேதி இரவு சென்னை வந்திறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவைதான். ‘அ.தி.மு.க-வுடன் சசிகலா தரப்பை இணைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்’ என்று பா.ஜ.க தலைவர்கள் சிலர், சில தரவுகளுடன் எடுத்துவைத்த வாதத்தை அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, முதல்வர் பழனிசாமியிடம் பேசும்போது வறுத்து எடுத்துவிட்டாராம். பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவில் நடந்த அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை அத்தனை சுமுகமானதாக இல்லை என்கிறார்கள் கூட்டணி விவகாரங்களை அறிந்தவர்கள்.

ஆபரேஷன் 23... எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் பங்கீட்டை விரைந்து முடித்துவிட்டு, களத்திலிறங்கத் தயாராகிவருகிறது அ.தி.மு.க. முதல் கட்சியாக பா.ம.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்து, அவர்களுக்கு 23 சீட்களை ஒதுக்கியதே எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ‘‘வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக பா.ம.க தரப்பை அழைத்த முதல்வர் பழனிசாமி, ‘மசோதா தாக்கல் செய்யப்போகிறோம். இரண்டொரு நாளில் அது சட்டமாகிவிடும். அதற்கு முன்னதாக 23 சீட்களுக்கு ஒப்புக்கொண்டு மருத்துவர் ஐயாவிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள்’ என்றாராம். இதை பா.ம.க எதிர்பார்க்கவில்லை. முரண்டு பிடித்தால் தனித்துவிடப்படுவோம் என்பதால், 23 சீட்களுக்கு பா.ம.க-வும் ஒப்புக்கொண்டது. 2001 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவிடமே 27 தொகுதிகள் பெற்ற பா.ம.க.-வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கி ஓரங்கட்டியது எடப்பாடியின் சாணக்கியத்தனம் தான்.

மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?
மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?

‘5.1 சதவிகித வாக்குவங்கி வைத்திருக்கும் பா.ம.க-வுக்கே 23 சீட்கள்தான், மற்றவர்களுக்கு இதற்கும் கீழ்தான் ஒதுக்க முடியும்’ என மற்ற கூட்டணிக் கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கு இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் அவருக்குக் கை கொடுத்தது. பிப்ரவரி 27-ம் தேதி, மத்திய அமைச்சர்களான கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 42 தொகுதிகளில் ஆரம்பித்தது பா.ஜ.க. முதல்வர் சிரித்தபடி, ‘உங்களுக்கு 12 தொகுதிகள்தான் ஒதுக்குறதா இருந்தோம். நான் தான் பர்சனலா நம்மாளுங்ககிட்ட பேசி 15 சீட் வரைக்கும் கொடுக்கலாம்னு சொன்னேன்’ என்றார். ஆனால், பா.ஜ.க தரப்பு 35 தொகுதிகளுக்குக் கீழே இறங்கிவர மறுத்தது. அத்துடன் நிற்காமல், ‘சசிகலாவை உடன் இணைத்துக்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். இல்லையென்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும்’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதில் டென்ஷனான எடப்பாடி, ‘அவங்களை மீண்டும் கட்சியில இணைக்குற பேச்சுக்கே இடமில்லைங்க. பிரதமர்கிட்டயே நான் சொல்லிட்டேனே... இதுக்கு மேல அதைப் பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு. எங்களால 15 தொகுதிகளுக்கு மேலே தர முடியாதுங்க. இதுக்குமேல நீங்க பன்னீர் அண்ணன்கிட்ட பேசிக்கோங்க’ என்று எழுந்து சென்றுவிட்டார். பேச்சுவார்த்தையை முடிக்காமலேயே முதல்வர் முறுக்கிக்கொண்டு எழுந்ததை பா.ஜ.க தரப்பு எதிர்பார்க்கவில்லை” என்றார்.

கேன்சலான பயணம்... நள்ளிரவு நாட்டியம்!

எடப்பாடியின் இந்த அப்ரோச்சை எதிர்பார்க்காத பா.ஜ.க தரப்பு, அதிருப்தியுடன் கிளம்பி துணை முதல்வர் பன்னீரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறது. பா.ஜ.க டீமை மிக்ஸர், லட்டுடன் வரவேற்ற பன்னீர், ‘தென்மாவட்டங்கள்ல கட்சிக்காரங்க எல்லாம் கவலையோட இருக்காங்க. முதல்வர் என் பேச்சை எங்க கேட்கறாருங்க...’ என்று தன் இயலாமையைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். பேச்சுவார்த்தை சுமுகமாக ஒரு இன்ச்கூட நகராததால், கடுகடுப்பிலிருந்தது பா.ஜ.க தரப்பு. விழுப்புரம் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அன்றிரவு சென்னை வந்த அமித் ஷாவிடம் பொங்கித் தீர்த்துவிட்டதாம்.

பிப்ரவரி 28-ம் தேதி காலையில் அமித் ஷாவை சந்தித்த கிஷன் ரெட்டி, இந்த விவகாரத்தை அதிருப்தியுடன் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘அப்போது கையில் ஒரு ஃபைலுடன் வந்த பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் வைத்த வெடிதான், நள்ளிரவு வரை எடப்பாடியை ஹோட்டல் அறையில் உட்கார வைத்துவிட்டது’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் தலைவர்கள் சிலர், ”சசிகலா இணைப்பு ஏன் அவசியம் என்று கேசவ விநாயகம் எடுத்துவைத்த பாயின்டுகள்தான் அமித் ஷாவை யோசிக்கவைத்துவிட்டன. சமீபத்தில், ‘நரேந்திரா... தேவேந்திரா’ என்று பிரதமர் பேசியது தேவேந்திர குல வேளாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்துடன் முக்குலத்தோர் வாக்குகளும் இணைந்துவிட்டால், தென்மாவட்டங்களில் கணிசமாக வெற்றியை அள்ளலாம். சசிகலா நம்மோடு இல்லையென்றால், தென் தமிழகத்தில் மட்டும் தி.மு.க 84 தொகுதிகளை வாரிச் சுருட்டிக் கொண்டுபோய்விடும்’ என்றிருக்கிறார். இதை தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆமோதிக்கவும், அமித் ஷா அப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

விழுப்புரம் கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய பின்னரும், அ.தி.மு.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் அமித் ஷாவுக்கு இல்லை. நேராக டெல்லி கிளம்பத்தான் அவர் திட்டமிட்டிருந்தார். மதுராந்தகம் அருகேயுள்ள ‘ஒன்லி காஃபி’ கடையில் இரவு உணவருந்துவதற்காக அமித் ஷாவின் கான்வாய் நிறுத்தப்பட்டது. அமித் ஷாவுடன் உணவருந்திக் கொண்டிருந்த பி.எல்.சந்தோஷ், ‘அவங்ககிட்ட நீங்களே பேசிடுங்க ஜி. யு ஷுட் ஹேண்டில் திஸ்...’ என்றார். அதன் பிறகுதான் அமித் ஷாவின் டெல்லி பயணம் கேன்சல் செய்யப்பட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் புக் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் இரவு 9:50 மணியளவில் ஹோட்டலுக்கு வந்தனர். அமித் ஷாவின் நள்ளிரவு நாட்டியம் ஆரம்பமானது” என்றவர்கள், சூட் ரூமில் நடந்த காட்சிகளை விவரிக்கத் தொடங்கினர்.

மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?

“ஜெயிக்குற வழியைப் பாருங்க”

“அ.தி.மு.க தலைவர்களுடன் பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்தவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் அமித் ஷா. ‘சசிகலாவை உங்களுடன் சேர்த்துக்கொள்வதில் என்ன தயக்கம்?’ என்று இருவரையும் பார்த்துக் கேட்டார். பன்னீரிடமிருந்து பதிலில்லை. தொண்டையைச் செருமியபடி பேசிய எடப்பாடி, ‘இப்பத்தான் கட்சி சரியான திசையில போய்க்கிட்டு இருக்கு. மீண்டும் அந்தக் குடும்பத்தைக் கட்சிக்குள்ள அனுமதிச்சா, கட்சி காணாமல்போய்விடும். அவங்களால நம்ம கூட்டணிக்குப் பெரிய இழப்பு ஏதுமில்லை. நாம அறிவிச்சிருக்குற மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு. நிச்சயமா நாமதான் ஆட்சியமைக்கப் போறோம். பிரதமர்கிட்ட நான் சொல்லிட்டேன். அவருக்கும் சசிகலாவை இணைச்சுக்குறதுல விருப்பம் இல்லை’ என்றார்.

அமித் ஷா அதன் பிறகு பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் எடப்பாடியைத் தனியாக அழைத்து, ‘பிரதமர்கிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும். வர்ற தேர்தல்ல எங்க கட்சிக்காரங்க 20 பேர் சட்டமன்றத்துல இருக்கணும். அதற்கு சசிகலா தேவை. உங்க மாநில உளவுத்துறை கொடுக்குற ரிப்போர்ட்டையெல்லாம் என்கிட்ட வாசிக்காதீங்க. ஜெயிக்குற வழியைப் பாருங்க’ என்றிருக்கிறார். அதிர்ந்துபோன எடப்பாடி, ‘மிகுந்த சிரமப்பட்டு அந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சியை மீட்டெடுத்திருக்கிறோம். தேர்தல் வெற்றி என்கிற பெயரில், மீண்டும் அவர்களிடம் கட்சியை அடமானம் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உங்களுக்கு 23 தொகுதிகள் வரை ஒதுக்குறோம்’ என்று மன்றாடினார். அப்போதும் மனம் இறங்காத அமித் ஷா, தனியறையைவிட்டு வெளியே வந்து, ‘இப்ப ஜெயிக்குறதுதான் முக்கியம். நீங்க எல்லாரும் பேசிட்டுச் சொல்லுங்க’ என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்” என்றனர்.

அமித் ஷாவுடன் உணவருந்தும் கேசவ விநாயகம், பி.எல்.சந்தோஷ்
அமித் ஷாவுடன் உணவருந்தும் கேசவ விநாயகம், பி.எல்.சந்தோஷ்

அமித் ஷா கிளம்பியவுடன், சசிகலாவை இணைத்துக்கொள்வது பற்றி அ.தி.மு.க தலைவர்களுடன் தொடர்ந்து பேசப்பட்டதாம். பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக அ.ம.மு.க-வுக்கு தொகுதிகளை ஒதுக்கும் யோசனையை பா.ஜ.க முன்வைத்திருக்கிறது. இதற்காக, பா.ஜ.க-வுக்கு 35 தொகுதிகள், அ.ம.மு.க-வுக்கு 20 தொகுதிகள், ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி, முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமாருக்கு இரண்டு தொகுதி என 58 தொகுதிகள் ஒதுக்குமாறு பா.ஜ.க தரப்பிலிருந்து பேசப்பட்டதாம். பா.ஜ.க-வின் விடாப்பிடியால் சசிகலா இணைப்பில் சற்று இறங்கிவந்த எடப்பாடி தரப்பு, ‘34 தொகுதிகள் வரை உங்களுக்கு ஒதுக்குகிறோம். அதற்குள்ளாக சசிகலா தரப்புக்கு வேண்டியதை நீங்களே ஒதுக்கிக்கொள்ளுங்கள். ஆனால், அவரை மீண்டும் எங்கள் கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மார்ச் 1-ம் தேதி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை தலைமைக் கழகத்துக்கு அழைத்த பன்னீரும் எடப்பாடியும், பா.ஜ.க முன்னிறுத்தும் சசிகலா இணைப்புத் திட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்கள். ‘தேர்தலுக்காக ஒன்று சேர்வதில் தவறில்லை. ஆனால், கூட்டணியாக இணைக்கலாம், அவரைக் கட்சிக்குள் அனுமதிக்க வேண்டாம்’ என்று அமைச்சர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்களாம். ஆனால், பழனிசாமி எந்த பதிலும் சொல்லவில்லை. அதிர்வைக் கிளப்பும் சசிகலா ரீ என்ட்ரி நடக்குமா... அல்லது எடப்பாடியின் மன்றாடுதல்களுக்கு அமித் ஷா மனம் இறங்குவாரா... என்பதைப் பொறுத்துத்தான் தமிழக அரசியல் ஆடுகளம் சூடுபிடிக்கும்.

******

சசிகலா நிலைப்பாடு என்ன?

‘உள் ஒதுக்கீடாக தன் தரப்புக்கு அ.தி.மு.க கூட்டணியில் இடமளிக்கப்படுவதை சசிகலா விரும்பவில்லை’ என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். சசிகலாவை அணுகிய பா.ஜ.க தரப்பு, ‘உங்களுக்கு விசுவாசமாக இருந்ததற்காக 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் இன்றும் உங்களுடன்தான் இருக்கிறார்கள்.

20 தொகுதிகள் வரை தருகிறோம். கூட்டணியில் இருந்தால், அவர்களுக்கும் நல்ல வாய்ப்பு தரலாம். தேர்தலுக்குப் பிறகு மற்ற பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றனராம். ஆனால் சசிகலா தரப்பு, ‘தனித்து நின்றாலே 25 தொகுதிகளில் அ.ம.மு.க வெற்றிபெறும். எங்களுக்குக் கட்சிதான் முக்கியம். அந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திவிட்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டதாம்.

பன்னீரின் டபுள் கேம்!

இந்தப் பேச்சுவார்த்தை மாரத்தானில், பன்னீரின் மீது எடப்பாடியின் சந்தேக ரேகைகள் படர ஆரம்பித்திருக்கின்றனவாம். பிப்ரவரி 27-ம் தேதி இரவு அமித் ஷாவைச் சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி, சசிகலா இணைப்பு தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதன் பிறகு இதே கருத்தை கேசவ விநாயகமும், பி.எல்.சந்தோஷும் முன்வைத்திருக்கிறார்கள். ‘நம்மிடம் சசிகலா வேண்டாம் என்கிறார் பன்னீர். முக்குலத்தோர் அமைச்சர்களிடம் வேண்டும் என்கிறார். இப்போது பா.ஜ.க-வை தூண்டிவிட்டு விளையாட்டுக் காட்டுவதே பன்னீர்தான்’ என்று கடுப்பில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. பன்னீர் தரப்போ, ‘தென்மாவட்டங்களில் பன்னீர் உட்பட சீனியர்களைத் தோல்வியடையச் செய்துவிட்டு, கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்ய எடப்பாடி முயல்கிறார். இதற்காகத்தான் சசிகலாவை இணைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். நாங்கள் டபுள் கேம் ஆடுகிறோமா... அல்லது அவரா?’ என்று பொருமுகிறது.