Published:Updated:

குட்கா வழக்கு: என்ன ஆச்சு? எங்கும் நிலுவை... எதிலும் நிலுவை!

குட்கா
குட்கா

காவல்துறை, உணவு பாதுகாப்புதுறை, வணிக வரித்துறை... என ஆறு அதிகாரிகள், கலால் வரித்துறையை சேர்ந்த ஓர் அதிகாரி என ஏழு பேருக்கும் குட்கா ஏஜென்ட்டுகளுடன் இருந்த தொடர்புகள் தெரியவந்தன.

சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்... இவர்கள் பெயர்களுடன் வேறு சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.

குட்கா ஊழல்
குட்கா ஊழல்

இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதலில் விசாரித்தனர். பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த சம்பத் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயயப்பட்டது. காவல்துறை, உணவுப் பாதுகாப்புதுறை, வணிக வரித்துறை... என ஆறு அதிகாரிகள், கலால் வரித்துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி என ஏழு பேருக்கும் குட்கா ஏஜென்ட்டுகளுடன் இருந்த தொடர்புகள் தெரியவந்தன. இவர்கள்மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுச்சதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீலகிரி: 3,000 குட்கா பாக்கெட்டுகள்... 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்!

சி.பி.ஐ-யைத் தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் 2018-ம் ஆண்டு களத்தில் இறங்கியது. அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவுப் பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவைச் சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மூன்று நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்
'குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்

குறிப்பாக, 2013, மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639.4 கோடி ரூபாய் வருமானம் குவித்ததோடு, அந்தப் பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும், அசையா சொத்துகளைத் தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. முதற்கட்டமாக, சுமார் 230 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா, அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை சட்டப்படி முடக்கிவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரமணா பெயர் இருப்பதால், சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ-கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படடுள்ளது. அங்கே வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை... இரண்டின் எஜமானர்... மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. அவர்கள் தமிழக அ.தி.மு.கழகத்துடன் அரசியல் கூட்டணியில் இருக்கிறார்கள். குட்கா விவகாரத்தில் அ.தி.மு.கழக அமைச்சர் மற்றும் முக்கியக் கட்சிப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தச் சூழ்நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகளை எப்படித் துரிதப்படுத்துவார்கள்?

எல்லாம் அரசியல் சதுரங்க விளையாட்டுதான்!

அடுத்த கட்டுரைக்கு