Published:Updated:

அமமுக: `கூட்டணிக்குத் தயார்' - தினகரனின் அழைப்புக்கு அதிமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?

`தினகரன் - எடப்பாடி பழனிசாமி

`அதிமுக-வுடன் கூட்டணிக்குத் தயார்’ என டி.டி.வி.தினகரன் தற்போது பேசுவதற்கு என்ன காரணம்?

அமமுக: `கூட்டணிக்குத் தயார்' - தினகரனின் அழைப்புக்கு அதிமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?

`அதிமுக-வுடன் கூட்டணிக்குத் தயார்’ என டி.டி.வி.தினகரன் தற்போது பேசுவதற்கு என்ன காரணம்?

Published:Updated:
`தினகரன் - எடப்பாடி பழனிசாமி

``திமுக என்கிற தீயசக்தியை எதிர்ப்பதற்காக 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே விட்டுக்கொடுத்து கூட்டணிவைக்கத் தயாராக இருந்தேன். ஆனால், ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், ஆட்சி அதிகாரம், பணத்திமிரால் கோட்டைவிட்டார்கள். வருங்காலத்தில் எல்லோரும் திருந்துவார்கள். அமமுக-வைப் பொறுத்தவரை திமுக-வை வீழ்த்த அதிமுக-வுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்'' என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். `அதிமுக-வை மீட்பேன்' எனச் சொல்லி கட்சி ஆரம்பித்த தினகரன், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம் எனக் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. உண்மையில் தினகரனின் திட்டம்தான் என்ன?

அமமுக - டி.டி.வி.தினகரன்
அமமுக - டி.டி.வி.தினகரன்

மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதுதான், அதிமுக-வுடன் கூட்டணிக்குத் தயார் எனக் கருத்து தெரிவித்தார்.

`அதிமுக-வை மீட்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சி மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 2019 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது.

வீரவெற்றி பாண்டியன்
வீரவெற்றி பாண்டியன்

தொடர்ச்சியாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என சமீபத்தில் அறிவித்தார் தினகரன். பாஜக-வுடன் தினகரன் கூட்டணிவைக்க முடிவு செய்துவிட்டார் என்கிற தகவல்கள் அப்போது வெளியாகின. 2021 தேர்தலிலேயே, பாஜக-வின் அழைப்பின்பேரில், அதிமுக-வுடன் கூட்டணி வைக்க தினகரன் தயாராக இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. அதை சமீபத்தில் உறுதிசெய்து பேசிவரும் தினகரன், அதிமுக-வுடனும் கூட்டணி வைக்கத் தயார் என தற்போது வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஆனால், தினகரனின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, ``அ.ம.மு.க-வுடன் அ.தி.மு.க கூட்டணிவைக்க வாய்ப்பே இல்லை. ஓ.பி.எஸ்., சசிகலாவுடன் வேண்டுமானால் டி.டி.வி.தினகரன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கட்டும்'' என தடாலடியாக பதிலளித்திருக்கிறார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் தற்போது இப்படிப் பேசுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமமுக செய்தித் தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியனிடம் பேசினோம்.

``அதிமுக, அமமுக இரண்டு கட்சிகளுக்குமே திமுக-தான் பொது எதிரி. அவர்களை முதலில் அரசியல் களத்தில் வீழ்த்த வேண்டும். அதற்கு இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு எங்களுக்குள் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்துகொள்வோம். அதிமுக-வை மீட்டெடுப்போம் என்பது கட்சியை அப்படியே கைப்பற்றுவது அல்ல. அதிமுக ஆட்சியைப் பிடித்தால், நாங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு அம்மாவின் கொள்கைகளை, திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்போம். பன்னீர் ஏற்கெனவே ஒன்றிணையத் தயார் என்று சொல்லியிருக்கிறார். எடப்பாடி வந்தால் அவரையும் இணைத்துக்கொள்வோம். ஆனால், எடப்பாடி தலைமையில் செயல்பட்ட ஊழல் நிறைந்த, ஸ்திரத்தன்மையில்லாத அரசைப்போல் இல்லாமல், வலிமையான அரசாக அந்த அரசு இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுகிற, பொருளாதாரரீதியாக தமிழகத்தை மேம்படுத்துகிற உண்மையான அம்மாவின் அரசாக அது இருக்கும். அந்த மாற்றதுக்காக நாங்கள் உழைப்போம்'' என்கிறார் அவர்.

சிவசங்கரி
சிவசங்கரி

இது குறித்து, அதிமுக=வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்.

``அமமுக-வுடன் அதிமுக கூட்டணி சேர்வது எந்தக் காலதிலும் நடக்காது என எங்கள் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துவிட்டார். ஆனால், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தேர்தல் நேரத்தில் இருக்கும் சூழல்களைப் பொறுத்து எங்கள் கட்சி நலனைக் கருத்தில்கொண்டு தலைமை முடிவு செய்யும்'' என்கிறார் அவர்.