Published:Updated:

`அமித் ஷா எந்த உறுதியும் கொடுக்கவில்லை, ஆனால்..!'- அற்புதம்மாள் சந்திப்பில் என்ன நடந்தது?

ஏற்கெனவே இந்த எழுவர் விடுதலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் தமிழக ஆளுநர் விடுதலைக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது என்று சொல்லியுள்ளார்.

அமித் ஷா-அற்புதம்மாள் சந்திப்பு
அமித் ஷா-அற்புதம்மாள் சந்திப்பு

ராஜீவ் காந்தி மரணத்தில் தொடர்புடைய எழுவர் விடுதலை குறித்த விவகாரம் இன்னும் நீடித்துவருகிறது. இந்நிலையில், இந்த ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேரடியாகச் சந்தித்து விடுதலை குறித்த கோரிக்கையை வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக விடுதலைக்கான வாய்ப்பிருந்தும் இதுவரை விடுதலையாகாமல் இருக்கும் நிலையில், அமித் ஷா- அற்புதம்மாள் சந்திப்பினால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதம் இப்போது எழுந்துள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தபிறகு, அவர்கள் விடுதலை குறித்து தமிழகத்திலிருந்து தொடர்ந்து குரல்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், “எழுவர் விடுதலை குறித்து மாநில ஆளுநரே முடிவெடுத்துக்கொள்ளலாம்” என்று அறிவித்தது. ஆனால், தமிழக ஆளுநர் இதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. தமிழகச் சட்டமன்றத்திலும் இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, “தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆளுநரின் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்” என்று பதில் அளித்தது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் மூலம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அமித் ஷாவைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்துப் பேசும் டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தினர், “ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் எந்த முடிவையும் பி.ஜே.பி எடுப்பதற்கு யோசிக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தியே குற்றம்சாட்டப்பட்ட நளினியைச் சிறையில் சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் மத்தியில் இருந்தது.

வைகோ, அற்புதம்மாள்
வைகோ, அற்புதம்மாள்

காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் அப்போதே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதேநேரம், மத்திய அரசிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும், தமிழக அரசும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தையும் அணுகினர். உச்ச நீதிமன்றமோ, 'மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில ஆளுநரே இந்த விஷயத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம்' என்று சொல்லிவிட்டது. இப்போது மீண்டும் எதற்காக மத்திய அரசிடம் மனு கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அமித் ஷாவிடம் தொல்.திருமாவளவன் நேரம் வாங்கி இந்தச் சந்திப்பு நடந்தது. அற்புதம்மாள் தனது மகன் 25 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் சிறையில் இருக்கிறார் என்று சொல்லி அழுதார். ஆனால், அமித் ஷா எந்த உறுதியையும் அவர்களிடம் அளிக்கவில்லை.

இந்த எழுவர் விஷயத்தில், மத்திய அரசு விடுதலைக்கு முயற்சி செய்தால் அது நாடு முழுவதும் உள்ள வேறு சில குற்றவாளிகளின் விடுதலைக்கு முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதால் அமித் ஷா இந்த விடுதலை விஷயத்தில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறார். எழுவர் விடுதலையில் தமிழக ஆளுநரும் மத்திய அரசுக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். ஏற்கெனவே இந்த எழுவர் விடுதலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் தமிழக ஆளுநர் விடுதலைக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது என்று சொல்லியுள்ளார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அமித் ஷா - அற்புதம்மாளின் இந்தச் சந்திப்பினால் விடுதலைக்கு வாய்ப்பு என்பது கானல்நீர் போலத்தான். மத்திய உள்துறை அமைச்சகம் ஒருபோதும் விடுதலைக்கு இசைவு தெரிவிக்காது. நாங்கள் இசைவு தெரிவித்தால், காங்கிரஸ் கட்சி அதை அரசியலாக்கி எங்களுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை முன்வைக்கும். அதனாலேயே அமித் ஷா எந்த உறுதியையும் அற்புதம்மாளிடம் கொடுக்காமல் இந்தச் சந்திப்பை முடித்துவிட்டார். பத்து நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமித் ஷா கருத்துகளை உள்வாங்கிக்கொண்டாரே தவிர, எந்த உறுதியும் அளிக்காமலேயே அவர்களை அனுப்பிவிட்டார்" என்கிறார்கள்.