Published:Updated:

திமுக-வின் ‘திராவிட மாடல்’ இமேஜுக்கு எதிராகக் களமிறங்கிய ஆளுநர் ரவி! - பின்னணி என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவி

‘திராவிட மாடல்’ குறித்து ஆளுநர் பேசும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்புகின்றன. ஆளுநர் இந்த விவகாரத்தில் இவ்வளவு கவனம் செலுத்தி எதிர்ப்பது ஏன்?

Published:Updated:

திமுக-வின் ‘திராவிட மாடல்’ இமேஜுக்கு எதிராகக் களமிறங்கிய ஆளுநர் ரவி! - பின்னணி என்ன?

‘திராவிட மாடல்’ குறித்து ஆளுநர் பேசும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்புகின்றன. ஆளுநர் இந்த விவகாரத்தில் இவ்வளவு கவனம் செலுத்தி எதிர்ப்பது ஏன்?

ஆளுநர் ஆர்.என்.ரவி

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த இரண்டாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக முறை உச்சரித்த வார்த்தையாக ‘திராவிட மாடல்’ என்ற சொல்லே இருந்திருக்கிறது. அரசு நிகழ்ச்சி, கட்சிக் கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு என எங்கு சென்றாலும் ‘திராவிட மாடல்’ என்ற சொல்லை உச்சரித்திருக்கிறார். திராவிட மாடல் என்றால் என்ன என்பதற்கும் பல மேடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். “வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பிய வளர்ச்சி... அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்று முதல்வர் கூறுகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்திருக்கும்போதும், ஆட்சிக்கான அடையாளச் சொல்லாக ‘திராவிட மாடல்’ என்று முன்வைப்பது இதுவே முதன் முறை. இந்த அடையாளச் சொல்லை பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன. அப்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ‘திராவிட மாடல்’ குறித்து ஆளுநர் பேசும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்புகின்றன. ஏற்கெனவே ஆளுநர் உரையில் ஆர்.என்.ரவி தவிர்த்த பல சொற்களில் திராவிட மாடலும் ஒன்று.

சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்
சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்திருக்கும் பேட்டியில், “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது, `ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. தேசிய சுதந்திரப் போராட்டத்தை மட்டுப்படுத்தும் சித்தாந்தம் அது. தங்கள் இன்னுயிரைக் கொடுத்த தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை வரலாற்றிலிருந்து அழித்துவிட்டு, மாறாக ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தவர்களை மகிமைப்படுத்துகிறது. மொழிசார்ந்த நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் கருத்தியல் இது. வேறு எந்த இந்திய மொழியும் தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை இந்தக் கருத்தியல்” என்று பேசியிருப்பது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க தரப்பில் கடும் விமர்சனம் பதிலாக வந்திருக்கிறது. ஆளுநருக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, “மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புணர்வை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவர், தான் எடுத்த பதவிப் பிரமாணத்தை மீறி செயல்பட்டுவருகிறார். நிர்வாக விவகாரங்களை பொதுவெளியில் பேசிவருகிறார். அதோடு அடிப்படையற்ற கருத்துகளைப் பேசிவருகிறார். இந்த அடிப்படையற்ற கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால், அது சரியான கருத்துகளாகப் புரிந்துகொள்ளப்படும். பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம்.

ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைவர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வந்ததுபோல் தெரிகிறது. ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு, தமிழக பா.ஜ.க தலைவராகச் செயல்படுகிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். மேலும், மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பமில்லையென்றால் வேறு வேலையைப் பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பைக் குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தி.மு.க ஆட்சி அமைந்து இரண்டாண்டுகள் ஆனதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், “திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள்... இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஆளுநரின் பேட்டிக்குப் பிறகு ‘திராவிட மாடல்’ குறித்த விவாதங்கள் எல்லா மட்டங்களிலும் அதிகரித்திருக்கின்றன. திடீரென திராவிட மாடலை மட்டும் தனியாகக் குறிவைத்து ஆளுநர் பேசுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம். “இன, மொழி வேற்றுமைகளைக் கடந்து இந்தியர்கள் எல்லோரும் ஒரே பாரதம் என்ற குடையின்கீழ் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதில் தீவிர எண்ணம்கொண்டவர் ஆளுநர். வட மாநிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே இந்தக் குடையின்கீழ்தான் இருக்கின்றன. தமிழ்நாடும் அதேபோல இருக்க வேண்டுமென்பது ஆளுநரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், திராவிடம் என்ற அடையாளம் நீண்டுகொண்டேயிருப்பது `ஒரே பாரதம்’ என்ற நோக்கத்துக்கு உதவாது. அதுவும் அரை நூற்றாண்டுகளுக்கு முன்புவரை `திராவிடம்’ என்ற கோட்பாடு வீரியமாகப் பேசப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் அதே வீரியம் இல்லை. அதனால்தான் அப்படிப் பேசினார்” என்கின்றனர்.

ஆளுநரின் பேச்சுக்கு ஆதரவாக பா.ஜ.க-வினரும் களத்தில் குதித்திருக்கின்றனர். “ஆளுநர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது... திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது, உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் பா.ஜ.க-வினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆளுநர் எதைப் பேசினாலும் பா.ஜ.க-வின் குரலாகவே ஒலிக்கிறார். `தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன்’ எனப் பிடிவாதமாக இருந்தது, உரையைத் திரித்துப் பேசியது எனப் பல விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கையால், எங்களுக்கு அரசியல்ரீதியாக பலம் கூடியிருக்கிறது. அவர் பேசப் பேச எங்களுக்குத்தான் லாபம். அண்ணாமலையையும் ஆர்.என்.ரவியையும் வைத்தே நாடாளுமன்றத் தேர்தலை மிக எளிதாக எதிர்கொண்டுவிடுவோம்” என்கின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது.