Published:Updated:

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: `முதலில் தேர்தல்; பின்னர் மாநில அந்தஸ்து'- பா.ஜ.க-வின் திட்டம் என்ன?

ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் மோடி
ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் மோடி

ஜம்மு காஷ்மீரின் 14 முக்கியத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் காஷ்மீர் விசிட்டுக்குப் பின்னணியில் இருப்பது என்ன?

2019-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை விலக்கியதோடு, ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரை, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மோடி அரசு. இதையடுத்து பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று வருவதற்கு முன்பாகவே அங்கு ஊரடங்கு என்ற நிலை வந்தது. இன்டர்நெட் வசதியும் அங்கு துண்டிக்கப்பட்டது.

2019-ல் 55 முறையும், 2020-ல் 115 முறையும், 2021-ல் 13 முறையும் ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் வசதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 4, 2019 முதல் மார்ச் 4, 2020 வரை தொடர்ச்சியாக 213 நாள்கள், ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் வசதி துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்
1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics

மாநில அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகுதான், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவிவருவதாகத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் சொல்லிவருகின்றனர். ஆனால், ராணுவத்தின் பிடியில் ஜம்மு காஷ்மீர் சிக்கித் தவிப்பதாகவும், கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து செய்திகள் வருகின்றன.

சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு 22 மாதங்கள் கடந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் 14 முக்கிய அரசியல் தலைவர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார் மோடி. ஜூன் 25-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃப்ரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது யூசுப் தாரிகாமி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், ``தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடனேயே ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும். தொகுதி வரையறை பணிகள் விரைவாக முடிவடைய அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்பதையே மோடியும் அமித் ஷாவும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பலரும், ``முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திருப்பியளிக்க வேண்டும், அதன் பின்னர் தேர்தல் நடத்தலாம்'' என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, ``மாநில அந்தஸ்து என்பது உரிய நேரத்தில் வழங்கப்படும்'' என்று மோடி பதிலளித்தாகத் தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் மோடி
ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் மோடி

இது குறித்து மத்திய அரசு தரப்பில், ``ஜம்மு காஷ்மீரின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது மத்திய அரசின் முதல் குறிக்கோள். அதற்காகத்தான் அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசின் முடிவை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்'' எனச் சொல்லப்படுகிறது.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, ``தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்திருப்பது, பெரும்பாலான தலைவர்களுக்கு வருத்தத்தைத் தந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தற்போது தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், நாங்கள் மத்திய அரசின்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்'' என்றார்.

மெகபூபா முஃப்தி, `` `தேர்தல் நடத்துவதைவிட, முதலில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதுதான் முக்கியம்' என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காஷ்மீர் விவகாரம் குறித்து, ``காங்கிரஸும், ஜம்மு காஷ்மீரின் பிற கட்சிகளும் முதலில் மாநில அந்தஸ்து வழங்கப்படுவதைத்தான் விரும்புகின்றன. அதன் பிறகு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. ஆனால், முதலில் தேர்தல், பின்னரே மாநில அந்தஸ்து என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மேலும்...

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். அதேபோல மாநிலங்கள்தான் தேர்தல்களை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்தான் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். அரசு ஏன் முன்னால் வண்டியையும், பின்னால் குதிரையையும் கட்டி இழுக்க நினைக்கிறது.
ப.சிதம்பரம்
ஃபருக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி
ஃபருக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி

இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வின் திட்டம் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``டிசம்பர் 2020-ல் நடந்த ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், ஃப்ரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இணைந்து அமைத்த குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியது. அதேதேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க 74 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகளைவைத்து, `ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களுக்கு வாக்களித்து, எங்களைத் தனிப் பெரும் கட்சியாக மாற்றியிருக்கின்றனர். இதனால் மக்கள் அனைவரும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதை விரும்புகின்றனர்' என்பது போன்ற கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதனால், அங்கு தேர்தல் நடத்தி ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. தங்களுக்குச் சாதகமான கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்கும் பணியையும் பா.ஜ.க செய்துவருவதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்தை வழங்கிவிட்டால், அதைவைத்துத் தேர்தல் பிரசாரத்திலோ, பேரத்திலோ ஈடுபட முடியாது என்பதனால்தான், தேர்தலுக்குப் பின்பு மாநில அந்தஸ்து என்கிறது பா.ஜ.க. அதுமட்டுமல்லாமல், மாநிலமாக இருந்தால், தேர்தல் நடைமுறையில் மத்திய அரசின் தலையீடு இருக்காது. எனவேதான் முதலில் தேர்தல், பின்னர் மாநில அந்தஸ்து என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது.

மேலும், இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, தேர்தலுக்கான பணிகள் குறித்த ஆலோசனைகளுக்காக ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க-வினரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. எனவே, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதுதான் பா.ஜ.க-வின் முக்கியத் திட்டமாக இருக்கும்'' என்கிறார்கள்.

பா.ஜ.க கொடி
பா.ஜ.க கொடி
`ஸ்ரீநகரில் 144 தடை; வீட்டுச் சிறையில் அரசியல் தலைவர்கள்!' - தொடர் பதற்றத்தில் ஜம்மு - காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க-வினர், ``தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து வழங்கப்படாது என்ற முடிவுக்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுவருகின்றன. அது எதுவுமே உண்மை கிடையாது. தேர்தலுக்கு முன்னால் மாநில அந்தஸ்து வழங்கினால், மீண்டும் இரண்டு குடும்பங்களின் கையில்தான் ஆட்சிப் பொறுப்பு சிக்கிக்கொள்ளும். அவர்களால் ஜம்மு காஷ்மீருக்கு எந்தவொரு வளர்ச்சியும் கிடைக்காது. எனவே, இன்னும் சிறிது காலத்துக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக இருப்பதே சரி'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு