Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல் - 2022: நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த திமுக-வின் திட்டம் என்ன?!

ஸ்டாலின்

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தல் இருக்கப்போகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் - 2022: நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த திமுக-வின் திட்டம் என்ன?!

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தல் இருக்கப்போகிறது.

Published:Updated:
ஸ்டாலின்

உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் பா.ஜ.க-வுக்கு இரண்டு விதங்களில் முக்கியமானவை. ஒன்று, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு முக்கியமானது. மற்றொன்று, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறப்போகிற குடியரசுத் தலைவருக்கான தேர்தலின் வெற்றிவாய்ப்பும் பா.ஜ.க-வுக்கு முக்கியமானது.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, அடுத்த குடியரசுத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வின் மூவ் என்னவாக இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பைப் போலவே, எதிர்க்கட்சிகளின் மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017-ம் ஆண்டு, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டார். இந்த முறையும் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 75 வயதைக் கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்பது பா.ஜ.க-வின் கறாரான முடிவு. அத்தகைய முடிவை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பா.ஜ.க எடுத்தால், ராம்நாத் கோவிந்த் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது. ஏனென்றால், குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் ஜூலை மாதம், அவர் 76 வயதை அடைந்திருப்பார்.

வெங்கய்ய நாயுடு
வெங்கய்ய நாயுடு

ராம்நாத் கோவிந்த் மீண்டும் நிறுத்தப்படாத சூழலில், வேறு யார் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுகிறது. துணைக் குடியரசுத் தலைவராக வெங்கைய நாயுடு இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெயரும் அடிபடுகிறது. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் பா.ஜ.க யோசித்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அதேபோல, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யார் இருப்பார் என்பது பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயர் அடிபடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான ‘எலெக்டரல் காலேஜ்’ என்பது எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களைக் கொண்டது. ஒட்டுமொத்த எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்துத்தான் குடியரசுத் தலைவரைத் தேர்வுசெய்வார்கள். அதே நேரத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை, தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கான மதிப்பு வேறுபடும். நாடாளுமன்ற மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையாக எம்.பி-க்கள் இருக்கிறார்கள். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ல் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நேரத்தில் தே.ஜ.கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் எம்.பி-க்கள் இருக்கிறார்கள்.

தமிழிசை சௌந்திரராஜன்
தமிழிசை சௌந்திரராஜன்

540 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 334 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். 2017-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், 2022 குடியரசுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களவையில் பா.ஜ.க-வின் பலம் அதிகரித்துள்ளது. அதேபோல, 232 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 116 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நியமன உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாது.

எம்.எல்.ஏ-க்களின் பலத்தையும் பார்க்க வேண்டும். 2017-ல் ராம்நாத் கோவிந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, இந்தியாவின் நிலப்பரப்பில் 70 சதவிகிதத்தை பா.ஜ.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சிபுரிந்தன. அந்த பலம் தற்போது குறைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கக்கூடிய தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது. 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கும் நிலையில், அதில் தி.மு.க-வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சரத்பவார்
சரத்பவார்

வரக்கூடிய குடியரசுத்தலைவர் தேர்தல் மற்றும் அதில் தி.மு.க-வின் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

``குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக தற்போது நடைபெறும் ஐந்து மாநிலத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க-வுக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தற்போது நடைபெறும் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி கடுமையான போட்டியைக் கொடுத்தாலும் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் 250 தொகுதிகளையாவது பா.ஜ.க கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம், காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகியவை தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் பெரியளவுக்கு பிரியும். பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் குறைவாகத்தான் கிடைப்பார்கள். கோவாவிலும், மணிப்பூரிலும், உத்தராகண்டிலும் ஓரளவுக்கு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு கிடைப்பார்கள்.

தற்போது 17 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. அவற்றில், 6 மாநிலங்களைத் தவிர மற்றவை பெரிய மாநிலங்கள். தற்போது, யார் வேட்பாளர் என்பதுதான் பிரச்னை. ராம்நாத் கோவிந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான். வெங்கைய நாயுடுவுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு இருக்கிறது. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார்கூட ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு, ஒடிஸாவில் நவீன் பட்நாயக் ஆதரவு அளிக்க வாய்ப்பு இருக்கிறது. வெங்கைய நாயுடு எல்லா தரப்பினருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர். வெங்கைய நாயுடுவை நிறுத்தினால், வெற்றிபெறுவது எளிதாக இருக்கும் என்று பா.ஜ.க நினைக்கலாம்.

ப்ரியன்
ப்ரியன்

தமிழிசை வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. துணை குடியரசுத் தலைவர் வாய்ப்பும் தமிழிசைக்கு வழங்கப்படமாட்டாது என்று நினைக்கிறேன். காரணம், இவர்கள் இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். துணைக் குடியரசுத் தலைவராக இஸ்லாமியர் ஒருவரை பா.ஜ.க நிறுத்தலாம்.

இப்படியான சூழலில், பெரும் செல்வாக்குமிக்க ஒருவரை நிறுத்த வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. சரத்பவாரை நிறுத்தினால் பலம்வாய்ந்த வேட்பாளராக இருப்பார். சரத்பவார் வேட்பாளர் என்றால், நிச்சயமாக அவரை ஸ்டாலின் ஆதரிப்பார். எதிர்க்கட்சிகளில் சரத்பவாரைத் தவிர செல்வாக்குமிக்க வேட்பாளராக வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார் ப்ரியன்.

சரத்பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளராகக் கருத வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். ``நாட்டின் மிக மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்போது, வெற்றிபெறுவதற்கு தேவையான பலம் தங்களுக்கு இருக்கும்” என்றும் ராவத் கூறியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவையில் 24 உறுப்பினர்களையும், மக்களவையில் 10 உறுப்பினர்களையும், தமிழகத்தில் 133 எம்.எல்.ஏ-க்களையும் கொண்டிருக்கும் தி.மு.க குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத்பவார் நிறுத்தப்பட்டால், அவரை தி.மு.க நிச்சயம் ஆதரிக்கும் என்றும், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism