Published:Updated:

கொலை வழக்கில் சிக்கிய எம்.பி ரமேஷ் - தி.மு.க-வின் நடவடிக்கை என்ன?

தி.மு.க-வின் 'மிஸ்டர் க்ளீன்' இமேஜுக்கு கடலூர் விவகாரம் மிகப்பெரிய கறையாகப் படிந்துவிட்டது. அதேசமயம் திருநெல்வேலி எம்.பி-யின் அடி உதை விவகாரம் வழக்கமான அரசியல் தகராறு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர் முந்திரி ஆலை கொலை வழக்கு விவகாரத்தில் அரங்கேறிவரும் அடுத்தடுத்த திருப்பங்கள், தற்போது தி.மு.க - பா.ம.க இடையிலான அரசியல் மோதலாக உருவெடுத்து வருகிறது! கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்துவந்தவர் கோவிந்தராஜ். பா.ம.க-வைச் சேர்ந்த இவர் கடந்த மாதம் வேலைக்குச் சென்ற இடத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து, இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் குறித்து விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று கோவிந்தராஜின் மகன் வழக்குத் தொடுக்க, பா.ம.க-வினரும் கோவிந்தராஜ் குடும்பத்தினருக்குக ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

கோவிந்தராஜ் - ரமேஷ்
கோவிந்தராஜ் - ரமேஷ்

இந்த நிலையில், 'கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்' என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாக விவகாரம் பரபரப்பானது. வேலைக்குச் சென்ற இடத்தில், 'ஆலை முதலாளியான எம்.பி ரமேஷ் மற்றும் அவரது ஆட்கள்தான் கோவிந்தராஜை அடித்துக் கொன்றுவிட்டனர்' என்றும் எனவே எம்.பி ரமேஷை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர் பா.ம.க-வினர். வழக்கை விசாரித்துவந்த சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், கோவிந்தராஜை அடித்துக் கொன்றதாக எம்.பி ரமேஷின் முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் ஐந்து பேரைக் கைது செய்தனர். இதையடுத்து, ஆலை முதலாளியான தி.மு.க எம்.பி.ரமேஷ் தலைமறைவானார். ஆனால், எம்.பி ரமேஷைக் கைது செய்யக்கோரி பா.ம.க தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரிக்க, விவகாரம் அரசியல் ரீதியான மோதலாக உருவெடுக்கத் தொடங்கியது.

`எப்பவும் என்னை சந்திச்சு பிரச்னைகளைச் சொல்லலாம்!' - 90 வயது பஞ்சாயத்து தலைவர் பெருமாத்தாள்

இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை (11-10-21) அன்று பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆஜரான எம்.பி ரமேஷை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. சரணடைவதற்கு முன்பாக, எம்.பி ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'தி.மு.க மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. ஆகவே, தி.மு.க அரசுமீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக்கருதியே நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

`உன் முடிவு என் கையிலதான்!’- அ.தி.மு.க பெண் நிர்வாகிக்கு மிரட்டல்; தலைமறைவான அ.ம.மு.க பிரமுகர்
பாஸ்கர் - ஞான திரவியம்
பாஸ்கர் - ஞான திரவியம்

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை, ஒரு கும்பல் அடித்து உதைத்திருக்கிறது. தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பாஸ்கரை பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 'திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம்தான் தன்னைத் தாக்கினார்' என்று பாஸ்கரன் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, ஞானதிரவியம் எம்.பி-யைக் கைது செய்யக்கோரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் தர்ணா போராட்டம் நடத்தினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தி.மு.க எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் உட்பட 30 பேர்மீது கொலை மிரட்டல் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க தலைமையிலான அரசுமீது எந்தவித குற்றச்சாட்டும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், தி.மு.க-வின் இந்த 'மிஸ்டர் க்ளீன்' இமேஜுக்கு கடலூர் விவகாரம் மிகப்பெரிய கறையாகப் படிந்துவிட்டது. அதேசமயம் திருநெல்வேலி எம்.பி-யின் அடி உதை விவகாரம் வழக்கமான அரசியல் தகராறு என்ற அளவில் முடிந்துவிடும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தி.மு.க எம்.பி-கள் இருவர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறித்தும், கட்சி ரீதியாக இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, ``அரசியலைப் பொறுத்தவரை, ஒருவர்மீது குற்றச்சாட்டு என்று வந்துவிட்டால் அதற்கான தண்டனையும் உடனே கிடைத்துவிடுகிறது. சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லாவிட்டாலும்கூட, குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை உணர்ச்சிவயத்தில் மக்கள் புறக்கணித்துவிடுகின்றனர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கடந்தகாலத்தில், ராஜீவ்காந்தி படுகொலையின்போதும் தி.மு.க மீது வீண் பழி சுமத்தி, அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அதேபோல், 2009-ல் ஈழம் விவகாரத்தில் தி.மு.க மீது குற்றம் சொன்னார்கள். 2011 தேர்தலின்போது, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்று தி.மு.கமீது பொய்யான குற்றசாட்டை முன்வைத்தார்கள். ஆக, சில அரசியல் சக்திகள் தங்கள் சுயநல அரசியலுக்காக இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகின்றனதான்.

ஆனால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் தண்டனை உண்டு என்பதுதான் தமிழக முதல்வரின் நிலைப்பாடு. தி.மு.க-வினர் என்பதற்காக எந்தவித சலுகையும் யாருக்கும் வழங்கப்படமாட்டாது. அதனால்தான், கடலூர் விவகாரம் குறித்துப் புகார் வந்ததுமே உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி சட்ட ரீதியான விசாரணை முடிவில்தான் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியவரும். குற்றம் செய்தவர் தி.மு.க-வைச் சேர்ந்தவராக இருந்தால், சம்பந்தப்பட்டவர்மீது கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் அப்போதுதான் தெரியவரும்.

திருநெல்வேலி விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட இருவரின் தனிப்பட்ட விவகாரத்தை, வேண்டுமென்றே சிலர் கட்சி ரீதியான மோதலாக பெரிதுபடுத்திவிட்டார்கள். எனவே, இந்த இரண்டு விவகாரங்களிலுமே கட்சி ரீதியான நடவடிக்கைகள் என்பது, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியவரும்'' என்கிறார் விளக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு